Saturday, September 10, 2022

"மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்.''( லூக்.15:7)

"மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்.''
( லூக்.15:7)

இறைமகன் இயேசு பாவிகளை தேடியே மனுவுரு எடுத்து உலகிற்கு வந்தார்.

அவர் வந்த நோக்கம் நிறைவேறும் போது அவரும், அவரைச் சார்ந்த விண்ணவர்களும் மகிழ்ச்சி அடைவது இயற்கையே.

பாவம் செய்யாமல் நல்லவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை குறித்தும் விண்ணகத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

  அதைவிட அதிகமான  மகிழ்ச்சி பாவிகள் மனம் திரும்பும் போது ஏற்படும்.

பிள்ளைகள் நலமாக வாழ்ந்து கொண்டிருப்பது குறித்து பெற்றோருக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கை.

ஏதாவது ஒரு பிள்ளை மிகவும் சுகமில்லாதிருந்து, சுகம் அடையும்போது ஏற்படும் மகிழ்ச்சி அதைவிட அதிகமாக இருக்கும்.

இயேசு எல்லாம் வல்ல கடவுள்.

அவர் நினைத்திருந்தால் மனிதனாக பிறந்து பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரே வார்த்தையில் உலகைப்  படைத்த அவர் ஒரே வார்த்தையில் விண்ணிலிருந்தே அனைவருடைய பாவங்களையும் மன்னித்திருக்கலாம்.

ஆனால் அவர் நம் மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பை வெளிப்படையாக நமக்குக் காட்டுவதற்கே

மனிதனாக பிறந்து பாடுகள் பட்டு மரித்தார்.

இயேசு நம் மீது அன்பு கொண்டிருந்ததால்தான் நமக்காக பாடுகள் பட்டு தன் உயிரையே பலியாக்கினார்.

அந்த அன்பை நாம் உணர வேண்டும்.

அவரை அன்பு செய்வதோடு,

 அவர் யாருக்காகவெல்லாம் பாடுபட்டு மரித்தாரோ அவர்களையும்  நாம் அன்பு செய்ய வேண்டும்.

அவர் எதற்காக மனிதனாக பிறந்தாரோ அதை நம்மால் இயன்ற மட்டும் நாமும் செய்வோம். 

அதாவது நாமும் மனிதர்கள் மனம் திரும்ப நம்மால் இயன்றதை இயேசுவின் அருள் உதவியோடு செய்ய வேண்டும்.

இயேசுவின் அன்பை நாம் புரிந்து கொண்டு அதை மற்றவர்களும் புரிய வைக்க வேண்டும்.

நமது சிந்தனை, சொல், செயல் முழுவதையும் இயேசுவின் அன்புப் பணியில் பயன்படுத்த வேண்டும்.

நமது முயற்சியால் மனிதர்கள் மனம் திரும்பினால் அதை முன்னிட்டும் விண்ணகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்.

நமது சக மனிதர்கள் மனம் திரும்ப நம்மால் இயன்றதைச் செய்வோம்.

உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவித்து மக்களை மனம் திருப்பும் பணியை இயேசு தனது சீடர்களுக்குத் தானே கொடுத்தார்.

அதே பணியை அவர்களுடைய வாரிசுகளாகிய குருக்கள் செய்து வருகின்றார்களே.

குருக்களின் பணியை நாம் அபகரிக்கலாமா?

அவர்களுடைய பணியை நாம் அபகரிக்கவில்லை.

பொதுக் குருத்துவத்தைச் சேர்ந்த நமக்கும் அந்த கடமை இருக்கிறது.

பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் நமக்கு இல்லை.

அது குருக்களுக்கு மட்டுமே இருக்கிறது.

பாவத்தில் வாழ்பவர்களை மனம்திருப்பி, பாவ மன்னிப்பு பெறுவதற்காக அவர்களை குருக்களிடம் அழைத்து வரலாமே.

மருந்து கொடுத்து மருத்துவம் பார்க்கும் கடமை மருத்துவர்களுக்கு  மட்டுமே இருக்கிறது.

ஆனாலும் சுகம் இல்லாதவர்களை  மருத்துவர் அல்லாத நாம் மருத்துவரிடம் அழைத்து வரலாமே.

இந்த உலகியல் பழக்கத்தை ஆன்மீகத்துக்கும் கொண்டு வரலாமே.

குருக்கள் ஒரே நேரத்தில் எங்கும் இருக்க முடியாது.

ஆனால் பொது நிலையினறாகிய நாம் பரவலாக வாழ்வதால் மனம் திருப்பும் பணியை நாம் செய்வது எளிது.

நாம் நற்செய்தியின் படி வாழ்ந்தாலே நம்மை பார்க்கும் மக்கள் மனம் திரும்புவார்கள்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நாம் வாழும் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

மனம் திரும்பியவர்களை குருக்களிடம் அழைத்து வர வேண்டும்.

அதன்பின் அவர்கள் ஆன்மீக வழிகாட்டிகளாக செயல்படுவார்கள்.

ஆன்மீக விஷயங்களில் நாம் குருக்களோடு ஒத்துழைக்கும் போது இயேசுவோடுதான் ஒத்துழைக்கிறோம்.

இயேசுவின் மகிழ்ச்சியில் நாமும் பங்கு பெறுகிறோம்.

நம்மால் மனம் திருப்பப்பட்ட ஆன்மாக்களோடு நாமும் நித்திய பேரின்ப வாழ்வை அனுபவிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment