Friday, September 2, 2022

''என்னிடம் வருகிறவன் தன் தந்தை, தாய், மனைவி, மக்கள், சகோதரர் சகோதரிகளையும், ஏன், தன் உயிரையுமே வெறுக்காவிட்டால் என் சீடனாயிருக்க முடியாது."( லூக்.14:26)

''என்னிடம் வருகிறவன் தன் தந்தை, தாய், மனைவி, மக்கள், சகோதரர் சகோதரிகளையும், ஏன், தன் உயிரையுமே வெறுக்காவிட்டால் என் சீடனாயிருக்க முடியாது."
( லூக்.14:26)


இந்த வசனத்திலுள்ள வார்த்தைகளுக்கு அகராதிப்படி பொருள் கொடுத்தால் வசனம் என்ன பொருள் தரும்?

",உன்னையும், உனது அயலானையும் வெறுத்தால்தான் நீ என் சீடனாயிருக்க முடியும்."

சொன்னது யார்?.
இறைமகனாகிய இயேசு.

இப்போது ஒரு கேள்வி எழும்.

இது அவரது இரண்டு கட்டளைகளோடு ஒத்துப் போகிறதா?

எதிராகப் போகிறதா?

அவர் கொடுத்துள்ள இரண்டு கட்டளைகள் எவை?


"உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும் உன் முழு ஆன்மாவோடும் உன் முழு மனத்தோடும் உன் முழு வலிமையோடும் அன்பு செய்வாயாக" என்பது முதல் கட்டளை. 


 "உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக" என்பது இரண்டாவது கட்டளை.

இரண்டிலுமே வெறுப்பு என்ற வார்த்தை இல்லை.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது ஒத்துப் போவது போல் தெரியவில்லை.

ஆனால்   சொன்னவர் கடவுள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு தியானிப்போம்.

இரண்டு கட்டளைகளையும்  வாசித்து விட்டு நண்பர் ஒருவர் கேட்கிறார்:

முதல் கட்டளைப்படி நமது மனதை முழுவதும் இறைவனுக்கு கொடுத்து விட்டால் 

நமக்கும் நமது அயலானுக்கும் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது?

ஒரு ஒப்புமையையும் அவர் கூறுகிறார்:

"நானும், என் நண்பனும் கோவிலுக்குச் செல்கிறோம்.

என் பையில் ஐம்பது ரூபாய் மட்டும் உள்ளது. நண்பர் பையில் எதுவும் இல்லை.

நான் முதல் கட்டளைப்படி என்னிடம் உள்ள ஐம்பது ரூபாயையும் உண்டியலில் போட்டு விடுகிறேன்.

வெளியே வந்தவுடன் நண்பன்,

"பசிக்கிறது, ஹோட்டலுக்குப் போவோமா?" என்கிறான்.

 எனக்கும் பசிக்கிறது. நான் இப்போது என்ன செய்ய?"

நமது பிரிவினை சகோதார்கள் செய்வது போல இறை வசனங்களுக்கு அகராதிப்படி பொருள் கொடுப்பதால் வந்த வினை இது.

வார்த்தைகளுக்கு அகராதிப்படி அல்ல, சொல்கிறவர்களுடைய தன்மைப்படி பொருள் கொடுக்க வேண்டும்.

ஒரு ஆசிரியர் ஒழுங்காகப் பாடம் படித்து வராத ஒரு மாணவனைப் பார்த்து,

''இன்று இரவு வீட்டுப் பாடம் படிக்கா விட்டால், நாளை பள்ளிக் கூடத்துக்கு வராதே." என்கிறார்.

மறுநாள் காலையில் பையன் அப்பாவிடம்,

" ஆசிரியர் எனக்கு  இன்று விடுமுறை கொடுத்திருக்கிறார். நான் உங்களோடு வயலுக்கு வருகிறேன்." என்று சொல்லி வயலுக்குப் போய்விட்டான்.

மறுநாள் பையனின் தந்தை  பள்ளிக் கூடம் சென்று ஆசிரியரிடம்,

"எதற்காக என் மகனுக்கு விடுமுறை கொடுத்தீர்கள்?"

என்று கேட்க ஆசிரியர் நடந்ததைச் சொன்னார்.

கண்டிப்பாகப் படித்து விட்டு வரவேண்டும் என்ற பொருளில் சொன்னதை பையன் தன் விருப்பப்படி புரிந்திருக்கிறான்.

சிலர் இறைவாக்கையும் இப்படிப் புரிந்து கொள்வதால்தான் இத்தனை பிரிவினை சபைகள்.

இறைவனின் தன்மை அடிப்படையில்தான் இறைவசனங்களுக்குப் பொருள் கொள்ள வேண்டும்.

அப்படியானால்


"உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடு அன்பு செய்வாயாக" என்றால் என்ன பொருள்? 

முழு உள்ளத்தையும் கடவுளுக்கே கொடுத்து விட்டால், நமக்கும் நம் அயலானுக்கும் எதைக் கொடுக்க?

கடவுளுக்கு முழு உள்ளத்தையும் கொடுத்து விட்டால், நமக்கும், நம் அயலானுக்கும்தான் கொடுத்திருக்கிறோம்.

எப்படி?

நம் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு செல்கிறோம். அப்படிச் செல்லும்போது ஏதாவது தின்பண்டம் வாங்கிக் கொண்டு போவது வழக்கம்.

வாங்கிக் கொண்டு போவதை யாரிடம் கொடுப்போம்?

குடும்பத் தலைவரிடம்.

குடும்பத் தலைவரிடம் கொடுத்தாலே குடும்பத்தினர் அனைவருக்கும் கொடுத்ததாகவே பொருள்.


அனைவரையும் படைத்து பராமரித்து வருபவர் கடவுள்.

அனைவரும் கடவுளுடைய பராமரிப்பில் தான் இருக்கிறார்கள்.

நாம் கடவுளிடம் எதை கொடுத்தாலும் அவரின் பராமரிப்பில் உள்ள அனைவருக்கும்தான் கொடுக்கிறோம்.

நமது மனது முழுவதையும் கடவுளுக்கு கொடுத்து விட்டால் மனுக்குலம் முழுவதும் நமது மனதில் இருக்கிறது.

கடவுளுக்குச் செய்வதை மனுக்குலத்துக்குச் செய்கிறோம்.

மனுக்குலத்துக்குச் செய்வதை 
கடவுளுக்குச் செய்கிறோம்.

புனித கல்கத்தா தெரெசா தன்னை முழுவதும் இறை பணிக்கு அர்ப்பணித்து விட்டாள்.

தனது வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்கும் தொழு நோயாளிகளுக்கும் அவள் செய்த  சேவை இறைவனுக்கு செய்த சேவை.

கடவுள் பொறுப்பில் நாமும், நமது அயலானும் இருப்பதால் 

கடவுள் பெயரால் அயலானுக்கு கொடுத்து, நாமும் பயன்படுத்தினால் அது கடவுளுக்கு கொடுத்ததாகத்தான் பொருள்படும்.

இயேசு கொடுத்த முதல் கட்டளையை நிறைவேற்றுபவர்கள் இரண்டாவது கட்டளையையும் நிறைவேற்றுகிறார்கள்.

அதாவது இறைவனை நேசிப்பவர்கள் தங்கள் அயலானையும் நேசிக்கிறார்கள்.

இறைவனுக்காக அயலானை நேசிப்பவர்கள் இறைவனையும் நேசிக்கிறார்கள்.

அன்னை மரியாள் இறைவனுக்கு தாய் ஆனதால்தான் இயேசு அவளை நமது தாயாகத் தந்தார்.


"என்னிடம் வருகிறவன் தன் தந்தை, தாய், மனைவி, மக்கள், சகோதரர் சகோதரிகளையும், ஏன், தன் உயிரையுமே வெறுக்காவிட்டால் என் சீடனாயிருக்க முடியாது."

அன்பே உருவான இயேசு ஏன் நமது உறவினர்களை வெறுக்கச் சொல்கிறார்?

அவர் யாரையும் வெறுக்கச் சொல்லவில்லை.

நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அம்மா சொல்கிறார்கள்,

"வாயைப் பொத்திக் கொண்டு சாப்பிடு."

வாயைப் பொத்திக் கொண்டு எப்படிச் சாப்பிடுவது?

ஆனால் நமக்குத் தெரியும் வாயைப் பொத்திக் கொண்டு சாப்பிடு என்றால் பேசாமல் சாப்பிடு என்று பொருள்.

ஆண்டவர் சொன்ன வசனத்துக்கு பொருள்,

"என்னை முழு மனதோடு நேசிக்காமல் வேறு யாரை நேசித்தாலும் எனது சீடனாக இருக்க முடியாது.".

முதல் கட்டளையை நிறைவேற்றாமல் இரண்டாவது கட்டளையை நிறைவேற்ற முடியாது.

நாம் நேசிப்பவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவது நமது கடமை.

நாம் கடவுளை நேசிக்கிறோம்.
நமது பெற்றோரையும் நேசிக்கிறோம்.

யாருடைய விருப்பத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்?

கடவுளுடைய விருப்பத்திற்கா?
பெற்றோருடைய விருப்பத்திற்கா?

இருவருடைய விருப்பமும் ஒன்றாக இருந்தால் பிரச்சனை இல்லை. 

எதிர் எதிராக இருந்தால்?

உதாரணத்துக்கு,

இறைவன் நம்மை குருத்துவப் பணிக்கு அழைக்கிறார்.

பெற்றோர் நாம் அரசுப் பணி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

யாருடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்?

நாம் இயேசுவின் சீடராக இருக்க விரும்பினால் அவருடைய விருப்பத்தைத்தான் நிறைவேற்ற வேண்டும்.

அதற்கு எதிரான பெற்றோருடைய விருப்பத்தை நிறைவேற்றினால் இயேசுவின் சீடராக இருக்க முடியாது.

இதை அழுத்தமாகச் சொல்வதற்காகத்தான்  வெறுப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

நாம் அம்மாவின் விருப்பப்படி நடக்காவிட்டால் அவள் நம்மை பார்த்து, 

"உன்னைப் பெறுவதற்குப் பதில் ஒரு செருப்பைப் பெற்றிருக்கலாம்"
என்று கூறுவது போல.

இயேசுவா , நம் உயிரா என்ற கேள்வி வரும்போது நாம் இயேசுவையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

இயேசுவுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்கள்தான் வேத சாட்சிகள்.

நாமும் இயேசுவுக்காக உயிரைத் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

நம்மில் இயேசுவின் சித்தமே நிறைவேறட்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment