Wednesday, September 21, 2022

"என்னைத் தொட்டது யார்?"(லூக்.8:45)

"என்னைத் தொட்டது யார்?"
(லூக்.8:45)

பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண் ஒருத்தி இயேசுவின் போர்வையின் விளிம்பைத் தொட்டவுடனே குணமானாள்.

அவள் இயேசுவின் போர்வையின் விளிம்பைத்தான் தொட்டாள்,

ஆனால் இயேசு "என்னைத் தொட்டது யார்?

யாரோ என்னைத் தொட்டார்கள், வல்லமை என்னிடமிருந்து வெளியேறியதை நான் உணர்ந்தேன்" என்றார்.

அவளுக்கு குணத்தை கொடுத்தது எது?

இயேசுவின் வல்லமை.

ஆனால் இயேசு சொன்னார்,

"மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று. சமாதானமாய்ப் போ."

அவள் தன்னைக் குணமாக்கும்படி இயேசுவிடம் கேட்கவில்லை.

இயேசுவின் போர்வையின் விளிம்பைத் தொட்டால் தனக்குச் சுகம் கிடைக்கும் என்று உறுதியாக விசுவசித்தாள், சுகம் கிடைத்தது.

நாம் அநேக சமயங்களில் இயேசுவிடம் கேட்கிறோம்.

ஆனால் கிடைப்பதில்லை.

காரணம்?

நம்மிடம் போதிய விசுவாசம் இல்லை.

நமக்கு வேண்டியது கிடைக்க கேட்பதைவிட விசுவசிப்பது தான் முக்கியம்.

தங்களுக்கு தேவையானதை கடவுள் தருவார் என உறுதியாக விசுவசித்து,

அவரிடம் எதுவும் கேட்காமல்,

அவருடைய சித்தப்படி வாழ்பவர்களுக்கு அவர்களுக்கு தேவையானதை கடவுள் கொடுப்பார்.

அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது விசுவாசம் நிறைந்த வாழ்க்கையை.

வாயினால் கேட்பதை விட அதுவே சிறந்த செபம்.

இயேசுவின் போர்வையின் விளிம்பை தொட்ட பெண் அவரை தொட்டதாகத்தான் கூறினாள்.

"தான் அவரைத் தொட்ட காரணத்தையும், உடனே குணமானதையும் எல்லாருக்கும் முன்பாகத் தெரிவித்தாள்."

இதிலிருந்து என்ன தெரிகிறது?

இயேசுவோடு தொடர்புடைய எதைத் தொட்டாலும் அது இயேசுவைத் தொட்டதாகவே. கருதப்படும்.

இயேசுவால் படைக்கப்பட்ட நமது அயலானுக்குச் செய்வதை எல்லாம் இயேசுவுக்கே செய்கிறோம்.

பசியாக இருக்கும் யாருக்கு நாம் உணவு கொடுத்தாலும் இயேசுவுக்கே உணவு கொடுக்கிறோம்.

ஆடை இல்லாத  யாருக்கு நாம் ஆடை கொடுத்தாலும் இயேசுவுக்குத்தான் ஆடை கொடுக்கிறோம்.

நமது அயலானை நேசித்தால் இயேசுவை நேசிக்கிறோம். 

நமது அயலானை வெறுத்தால் இயேசுவை வெறுக்கிறோம்.

கடவுளை விசுவசிப்பதோடு நமது அயலானுக்கு நாம் செய்யும் நல்ல செயல்கள் தான் நமக்கு விண்ணகத்தை பெற்று தருகின்றன.

குணம் அடைந்த பெண் இயேசுவை தொட்டால் குணம் ஆகும் என்று விசுவசித்தாள்.

அதற்காக அவரது அவருடைய போர்வையின் விளிம்பைத் தொட்டாள்.

நம்மை பொருத்தமட்டில் நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் கடவுளை தொட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

திவ்ய நற்கருணை வாங்கும் போது இயேசுவின் உடலை நாவினால் தொட்டு விழுங்கும் போது அவர் நமது ஆன்மாவோடும், உடலோடும் கலந்து விடுகிறார்.

கடவுள் எங்கும் இருப்பதால் நாம் அவருள் இருக்கிறோம், அவர் நம்முள் இருக்கிறார்.

நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவுடனும் இருக்கிறார்.

சர்வ வல்லமை உள்ள கடவுள் ஒவ்வொரு வினாடியும் நம்மோடு இருக்கும் போது நாம் எதற்கு பயப்பட வேண்டும்?

தாய் மடியில் இருக்கும் குழந்தை எதற்காகவும் அஞ்சுகிறதா?

சர்வ வல்லவ கடவுளின் மடியில் இருக்கும் நாம் எதற்கு அஞ்ச வேண்டும்?

இந்த விசுவாசம் ஒன்றே போதும் நமக்கு வேண்டியதை எல்லாம் இறைவன் நாம் கேளாமலேயே நமக்கு தருவதற்கு.

நாம் ஒவ்வொரு வினாடியும் கடவுளோடு இருக்கும் உணர்வுடன் வாழ வேண்டும்,

 அதாவது இறைவனின் சன்னிதானத்தில் எப்பொழுதும் வாழ வேண்டும்.

இப்பொழுது நமக்கு என்ன வேண்டும் என்பது மட்டும்தான் நமக்கு தெரியும்,

 எதிர்காலத்தில் என்ன வேண்டும் என்று நமக்கு தெரியாது,

 ஆனால் நம்மோடு இருக்கும் இறைவனுக்கு தெரியும்.

நமக்கு என்ன வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழாமல் இறைவனுக்காக எப்படி வாழ வேண்டும் என்பதை மட்டும் எண்ணி வாழ்வோம்.

நமது தேவைகளை கடவுள் பார்த்துக் கொள்வார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment