(லூக்.10:3)
இயேசு எழுபத்திரண்டு சீடர்களை நற்செய்தி அறிவிக்க அனுப்பும்போது வாழ்த்தி அனுப்பிய வார்த்தைகள்:
"செல்லுங்கள், ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல் உங்களை அனுப்புகிறேன்."
"ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல் உங்களை அனுப்புகிறேன்"
என்பது வாழ்த்தா?
ஆன்மீகத்தைப் பொறுத்த மட்டில் இதுதான் வாழ்த்து.
தந்தை இறைவன்கூட தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பும்போது:
"ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டியைப்போல் உங்களை அனுப்புகிறேன்"
என்றுதான் வாழ்த்தி அனுப்பியிருப்பார்.
ஆகவேதான்
அவர் நற்செய்தி அறிவிக்க ஆரம்பித்த நாளிலிருந்தே யூத ஓநாய்கள் அவரை பின் தொடர ஆரம்பித்தன, அவரைக் கடித்துக் குதற நேரம் பார்த்துக் கொண்டே.
இயேசு
அவைகளால்
அடிக்கப்பட்டு,
மிதிக்கப்பட்டு,
உமிழ்நீரால் துப்பப்பட்டு,
பாரமான சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு, கொல்லப்பட்டார்.
அதற்காகத்தான் உலகிற்கு வந்ததாக ஆண்டவரே சொல்லியிருக்கிறார்.
ஆண்டவரது பாடுகளாலும், சிலுவை மரணத்தினாலும் நமக்கு இரட்சண்யம் கிடைத்ததென்றால் அவற்றை ஆண்டவருக்குக் கொடுத்தவர்கள் யூத ஓநாய்கள்தானே.
இயேசுவை "உலகின் பாவங்களைப் போக்கும் ஆட்டுக் குட்டியாக" மாற்றியவர்கள் அவர்கள்தானே.
உலகின் பாவங்களைப் போக்கும் ஆட்டுக் குட்டி தனது மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓநாய்களின் பாவங்களையே மன்னித்து விட்டாரே.
தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்கும்படி இயேசு தந்தையிடம் ஒப்புக்குக் கேட்கவில்லை.
உள்ளத்தின் ஆழத்திலிருந்து கேட்டார்.
இயேசு கடவுள். அவரது வார்த்தைக்கு சர்வ வல்லமை உண்டு.
இயேசு அவரைப் பின்பற்ற ஆசைப் படுகின்றவர்களைப் பார்த்து,
"ஜாலியாக என் பின்னே வாருங்கள்" என்று சொல்லவில்லை.
"உங்களது சிலுவையை சுமந்து கொண்டு வாருங்கள்" என்று தான் சொன்னார்.
விண்ணகத்திற்கு சென்று கொண்டிருப்பவர்களைப் பார்த்து, "அகலமான பாதை வழியே ஆடிப் பாடி செல்லுங்கள்" என்று சொல்லவில்லை.
"ஒடுக்கமான பாதை வழியே கஷ்டப்பட்டு செல்லுங்கள்" என்று தான் சொன்னார்.
பேரின்பத்திற்கான பாதை துன்பங்கள் நிறைந்தது.
நமக்கான இயேசுவின் பிரதிநிதி நமது பங்குச் சாமியார்தான்.
அவரிடம் போய், "சுவாமி, ஆசீர்வதியுங்கள்" என்று சொன்னால்,
நமது நெற்றியில் சிலுவை அடையாளம் போட்டு விடுகிறார்.
சிலுவைப் பாதைதான் விண்ணகத்திற்கான பாதை என்கிறார்.
கிறிஸ்தவ வாழ்க்கையே சிலுவைப் பாதைதான்.
மகிழ்வுடன் சிலுவை வழி நடப்போம்.
மகிமையின் வாழ்வடைவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment