Monday, October 3, 2022

நாங்கள் பயனற்ற ஊழியர்கள், செய்ய வேண்டியதைத்தான் செய்தோம்" (லூக்.17:10)

"நாங்கள் பயனற்ற ஊழியர்கள், செய்ய வேண்டியதைத்தான் செய்தோம்" 
(லூக்.17:10)

கொஞ்சம் கற்பனை செய்து கொள்வோம்.

முன் பின் தெரியாத ஒரு ஊரில் எப்படியோ மாட்டிக் கொண்டோம்.

வெளி உலகோடு தொடர்பு கொள்ள நம்மிடம் எந்த கருவியும் இல்லை.

வெளியூருக்குப் போக எந்த போக்கு வரத்தும் இல்லை.

உடுத்தியிருக்கும் உடையைத் தவிர நம்மிடம் வேறு எதுவுமே இல்லை.

இப்படிப்பட்ட நிலையில் நம்மைப் 

பார்த்த ஒருவர் நம் மீது இரங்கி,

"கவலைப்பட வேண்டாம், நான் உங்களுக்கு எனது வயலில் ஒரு வேலையும், அதற்கு சம்பளமும், சாப்பாடும், தங்க இடமும் தருகிறேன்."

என்று சொன்னால்,

"இன்றைய நிலையில் எனக்கு தேவை அதுதான். நீங்கள் சொன்னபடி செய்கிறேன். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி,"

என்று சொல்வோமா,

அல்லது,

"நான் எப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்திருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?

 என்னிடம் வேலை வாங்க நீங்கள் யார்?"

என்று சொல்லி விட்டு வெளியே போவோமா?

இப்போது கற்பனையை விட்டு விட்டு நமது உண்மை நிலைமைக்கு வருவோம்.

நாம் யார்?

எங்கிருந்து வந்தோம்?

நாம் சுயமாக வாழ நம்மிடம் நமக்குச் சொந்தமாக என்ன இருக்கிறது?

நாம் இவ்வுலகில் வாழ்ந்து முடிந்தவுடன் எங்கே செல்ல வேண்டும்?

நம்மைத் தவிர வேறு யாரையும் தொடர்பு படுத்தாமல் இந்த கேள்விகளில் ஒன்றுக்குக் கூட நமக்குப் பதில் தெரியாது.

யாரும் சொல்லாமல் நாமாக சிந்தித்தால் தெரியாதத்தனமாக தெரியாத இடத்தில் மாட்டிக் கொண்ட உணர்வுதான் ஏற்படும்.

முதலில் நமது பெற்றோரும், அடுத்து தாய்த் திருச்சபையும்தான் இந்த கேள்விகளுக்கு பதில் சொன்னார்கள், விசுவாசத்தின் அடிப்படையில்.

தாய்த் திருச்சபை நம்மோடு பகிர்ந்து கொண்ட விசுவாசத்தின் 
அடிப்படையில்தான் நாம் இப்போது இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் யார்?

கடவுளால் படைக்கப்பட்டவர்கள்.
படைக்கப்படும் முன்பு நாம் ஒன்றுமில்லாதவர்களாய் இருந்தோம். 

ஒன்றுமில்லாதவர்களுக்கு எதுவும் சொந்தமாய் இருக்க முடியாது.

ஆகவே நாம் நமக்கு சொந்தமானவர்கள் அல்ல.

நமது உடல் மீதும் ஆன்மா மீதும் நாம் எந்தவித உரிமையும் கொண்டாட முடியாது.

நாம் முழுக்க முழுக்க நம்மை படைத்தவருக்கே சொந்தம்.

அவர் நம்மை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம்.

எப்படி நடத்தினாலும் 'ஏன்?' என்று கேட்க நமக்கு உரிமை இல்லை. 

எங்கிருந்து வந்தோம்?

துவக்கமில்லாத காலத்திலிருந்தே
(From eternity),  இறைவனின் மனதில் கருத்தாய் (Idea) மட்டும் இருந்த நமக்கு அவர்தான் உருவம் கொடுத்தார்.

(நாம் முதலில் plan போட்டு அப்புறம் வீடு கட்டுவதுபோல.)

ஆகவே நாம் இறைவனிடமிருந்து தான் வந்தோம்.

நாம் சுயமாக வாழ நம்மிடம் நமக்குச் சொந்தமாக என்ன இருக்கிறது?

நாமே நமக்குச் சொந்தமில்லை.

இந்த உலகமோ,
அதில் உள்ள எந்த பொருளுமோ நமக்குச் சொந்தம் இல்லை.

எந்த பொருளையும் நமது விருப்பம் போல் பயன்படுத்த முடியாது.

எந்த பொருளையும்  விரும்பக் கூட நமக்கு உரிமை இல்லை.


நாம் இவ்வுலகில் வாழ்ந்து முடிந்தவுடன் எங்கே செல்ல வேண்டும்?

நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கே தான் செல்ல வேண்டும்.

 அதாவது,

 இறைவனிடம் தான் செல்ல வேண்டும்.

நம்மைப் படைத்த கடவுள் நாம் இவ்வுலகில் வாழும்போது அனுசரிக்க வேண்டிய சில கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார். 

ஏன் கொடுத்திருக்கிறார் என்று கேட்க நமக்கு உரிமை இல்லை. 

ஆனால் அவற்றுக்கு கீழ்ப்படிய நமக்கு கடமை இருக்கிறது.

ஏனெனில், நாம் அவரால் படைக்கப்பட்டவர்கள், அவருக்கு மட்டும் சொந்தமானவர்கள்.

அவர் சொன்னபடி நடக்க வேண்டியவர்கள்.

நமது விருப்பம் போல் வாழ நமக்கு சுயமாக எந்த உரிமையும் இல்லை.

நம்மைப் படைத்தவரின் விருப்பம் போல் தான் வாழ வேண்டும்.

நம் நிலையிலிருந்து நம்மைப் பார்த்தால் நாம் எதற்கும் பயன் அற்றவர்கள்.

நம் மீது நமக்கே உரிமை இல்லாமலிருக்கும் போது நம்மால் யாருக்கு என்ன செய்ய முடியும்?

நாம் பயன் அற்றவர்கள் என்பது நமது நிலை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இது தாழ்ச்சி மட்டுமல்ல, உண்மையும் அதுதான்.

ஆனால்,  நம்மை படைத்த  கடவுள் அளவற்ற அன்பும், தாராள குணமும் உள்ளவர்.

  சுயமாக ஒன்றும் இல்லாதவர்களாகிய நம்மைப் படைக்கும்போது கடவுள்
 தனது சாயலில்   படைத்ததுமல்லாமல்,

 பிள்ளைகளாக தத்தும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவரது தாராள குணத்தினால் ஒன்றும் இல்லாமையிலிருந்து படைக்கப் பட்ட  நாம் அவருடைய பிள்ளைகளாக மாறியிருக்கிறோம்.


கடவுள் நம்மை ஒரு தந்தையின் அன்போடு நேசிக்கிறார்.

அவர் நமக்கு கொடுத்த கட்டளையே நாம் அவரை அன்பு செய்ய வேண்டும் என்பதுதான்.

அவரை அன்பு செய்யும் போது அவரால் படைக்கப்பட்ட அவரது எல்லா பிள்ளைகளையும் நாம் அன்பு செய்கிறோம்.

கடவுளை அன்பு செய்ய வேண்டும் என்று சொல்லும் போதே அவரை முழுமையாக அன்பு செய்ய வேண்டும் என்பதுதான்  பொருள்.

அதாவது அவரையும், அவருக்கு உரிய அனைத்தையும் அன்பு செய்ய வேண்டும்.

கடவுள் நமக்கு எவ்வளவு இனிமையான கட்டளையைத் தந்திருக்கிறார்!

அன்பை விட இனிமையான வேறு எந்த பொருள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது?

சுயமாக நமக்கு எதுவும் இல்லாவிட்டாலும் கடவுள் அவரையே நமக்குச்  சொந்தமாக தந்திருக்கிறார்.

அவர் தந்திருப்பதை  நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் போதே,

அவரின்றி நாம் ஒன்றும் இல்லாதவர்கள்,

சுயமாக ஒன்றுமே செய்ய முடியாதவர்கள்,

முழுக்க முழுக்க அவரைச்
சார்ந்துதான் இயங்குகிறோம் 

என்ற உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவரின்றி நமது ஒரு அணுகூட அசையாது.

ஒன்றுமில்லாத நாம் அவரோடு இணைந்து விட்டால் எல்லாம் உள்ள அவரே நமக்கு முழுமையாக உரிமை ஆகி விடுகிறார்.

சுயமாக நாம் பயனற்ற ஊழியர்கள், 

ஆனாலும், 

கடவுளை முழுமையாக ஏற்றுக் கொண்டு அவர் விருப்பப்படி 

செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும்.

கடவுள் கட்டளையிட்டதைச் செய்ய வேண்டியது அவரது ஊழியர்களாகிய நமது கடமை.

நமது தந்தையும் அவரே,

 நம்மை படைத்தவரும் அவரே.

தந்தை என்ற முறையில் பிள்ளைகளாகிய நாம் அவரை முழுமையாக நேசிப்போம்.

படைத்தவர் எந்த முறையில்  அவரது ஊழியர்களாகிய நாம் கடமை உணர்வோடு ஊழியம் செய்வோம்.

நமக்கு எல்லாம் அவர்தான்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment