Saturday, October 29, 2022

"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்."(லூக்.19:5)

"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்."
(லூக்.19:5)

சக்கேயுவுக்கு இயேசுவைப் பார்க்க ஆசை. 

ஆனால் அவன் குள்ளனாக இருந்ததால் கூட்டத்தோடு சென்று கொண்டிருந்த அவரைத் 

தரையில் நின்று பார்க்க இயலவில்லை.

ஆகவே அவர் செல்லக் கூடிய வழியில் நிறை ஒரு அத்திமரத்தின் மேல் ஏறிக்கொண்டான்.

இயேசு அந்த இடத்திற்கு வந்தபோது, ஏறெடுத்து அவனை நோக்கி, 

"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்" என்றார்.

தனது ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செய்பவர் இயேசு.

அன்று சக்கேயுவின் வீட்டில் தங்கவேண்டும் என்பது அவர் திட்டம்.

அதன்படிதான் மரத்தின் மேலிருந்த சக்கேயுவை ஏறெடுத்துப் பார்த்து,

"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா.
 இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்" என்றார்.

"பாவியோடு தங்குவதற்குப் போயிருக்கிறாரே" என்று முணுமுணுத்தவர்களைப் பற்றி அவர் கவலைப் படவில்லை.

ஏனெனில் அவர் உலகத்துக்கு வந்ததே பாவிகளைத் தேடித்தானே.

அவர் மரத்தின் மேல் இருந்தவனைப் பார்த்து தான்

" விரைவாய் இறங்கி வா." என்றார்.

"விரைவாய் இறங்கி வா" என்ற வார்த்தைகளைத் தியானித்த போது அவற்றுக்குள் ஆன்மீக ரீதியான ஏதோ ஒரு பொருள் புதைந்து இருப்பது போல் மனதில் தோன்றுகின்றது.

அந்த நேரத்தில் அவனை மரத்திலிருந்துதான் இறங்கச் சொன்னார்.

ஆனால் அதனுள் புதைந்து இருந்த ஆன்மீகத்தைக் கண்டு பிடித்து விட்டவன் போல சக்கேயு வாழ்க்கையிலேயே இறங்கி வந்து விட்டான்.

அவன் பெரிய பணக்காரன்.

பணக்காரப் புத்தியிலிருந்து இறங்கி வந்து விட்டான்.

வீட்டிற்குச் சென்றவுடன் ஆண்டவரை நோக்கி,

"ஆண்டவரே, 

இதோ! என் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன்.

 எவனையாவது ஏமாற்றி எதையாவது கவர்ந்திருந்தால்,

 நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று சொன்னான்.

விருப்பத்தின் பேரில்தான் பணத்தைச் சேர்த்திருப்பான்.

ஆனால் ஆண்டவரைப் பார்த்தவுடன் அதை இழக்கத் துணிந்து விட்டான்.

ஆண்டவரும்,
" இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று.

 இவனும் ஆபிரகாமின் மகன்தானே.

இழந்துபோனதைத் தேடி மீட்கவே மனுமகன் வந்துள்ளார்" என்றார்.

தேடிய பணத்தால் ஆன்மீக வாழ்வை இழந்திருந்தவன்,

பணத்தை இழந்து,   இழந்ததை இயேசுவின் அருளால் மீட்டுக் கொண்டான்.

ஆண்டவரும்,

"இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று." என்றார்.



 அதே வார்த்தைகளை இயேசு நம்மை நோக்கியும் கூறுவதாக எண்ணி அவற்றைத் தியானித்துப் பார்த்தால்

அவற்றிலுள்ள ஆன்மீக அர்த்தம் நமக்குப் புரியும்.

சக்கேயு இயேசுவைப் பார்க்க ஆசைப் பட்டது போல

நாமும் அவருக்கு சேவை ஆசைப்படுவதாக நினைத்துக் கொள்வோம்.

 இயேசு நம்மைப் பார்த்து,

 ''உனது சேவையின் போது நானும் உன்னோடு தங்க வேண்டும்.

நான் உன்னோடு தங்க வேண்டும் என்றால் நீ இறங்கி வந்து தாழ்ச்சியுடன் பணி புரிய வேண்டும்.

சர்வ வல்லப கடவுளாகிய நான் பூமியில் வாழும் உன்னை மீட்க விண்ணிலிருந்து இறங்கி வந்ததை ஞாபகத்தில் வைத்துக் கொள்.

தாழ்ச்சியின் இருப்பிடத்திற்கு இறங்கி வந்து உன் பணியை ஆரம்பி.

நான் எப்போதும் உன்னோடு இருப்பேன்.''
என்று கூறுவார்.

ஆண்டவருக்காக பணி புரிய ஆசிக்கும் நாம் சமூகத்தில் எந்த அந்தஸ்தில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல.

நாம் யார் மத்தியில்  பணிபுரிகிறோம் என்பதுதான் முக்கியம்.

அவர்கள் நிலைக்கு நாம் இறங்க வேண்டும்.

மனிதருக்கு நற்செய்தியை அறிவிக்க

 இறைமகன் மனிதர் நிலைக்கு இறங்கி வந்து,

மனிதரோடு மனிதராக வாழ்ந்தார்.

"இறைமகன் என்று தன்னைக் கூறிக் கொண்டு, பாவிகளோடு உண்கிறாரே." என்று அவரைப் புரிந்து கொள்ளாதோர் முணுமுணுத்திருக்கலாம்.

உலகத்துக்கே உரிமையாளரான அவர், ஏழையாய்ப் பிறந்து,

ஏழைகளோடு ஏழையாய்த் தானே வாழ்ந்தார்.

'மனுமகனுக்கு தலை சாய்க்கக் கூட இடமில்லை" என்று தன்னைப் பற்றி கூறும் அளவிற்கு அவர் ஏழையாய் வாழ்ந்தார்.

நாம் பிறந்து வளர்ந்த சமூக அந்தஸ்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்,

இறைப் பணி ஆற்ற வேண்டு மென்றால், இறங்கி வர வேண்டும்.

Fr. ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி 
(Fr. Stan Swamy) என்ற சேசு சபைக் குரு பழங்குடியினர் உரிமைகள் உரிமைகளுக்காக போராடியபோது

அவர்களோடு அவராகத்தானே வாழ்ந்தார்.

நாமும் மக்களோடு மக்களாக வாழ்ந்தால்தான் அவர்களுக்கு இயேசுவை அறிவிக்க முடியும்.

விலை உயர்ந்த காரில் ஏறி, ஏழையின் வீட்டிற்குப் போனால் அவன் நம்மில் ஏழையாய் வாழ்ந்த இயேசுவைக் காணமாட்டான்.

காரின் உரிமையாளரைத்தான் காண்பான்.

நித்திய காலமாய்த் திட்டம் போட்டே

 மாடடைக் குடிலில் பிறந்த இயேசுவின் பிறந்த நாளை

 இலட்சக் கணக்காய்ச் செலவழித்து கொண்டாடும் நம் உள்ளத்தில் 

ஏழை மகன் இயேசு எப்படிப் பிறப்பார்?

சிந்திப்போம்.

இயேசுவுக்குப் பணிபுரிய வேண்டுமா?

இறங்கி வருவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment