"அப்பா, வானகத்திற்கு எதிராகவும், உமக்கு முன்பாகவும் குற்றம்செய்தேன். இனிமேல் உம்முடைய மகன் என்று எண்ணப்பட நான் தகுதியற்றவன்"
(லூக்.15:21)
இயேசு கூறிய ஊதாரிப் பிள்ளையின் உவமை கடவுளுக்கும், பாவிக்கும் இருக்கும் உறவை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.
தன் தந்தையின் சொத்தில் தனது பங்கைப் பெற்றுக் கொண்ட மைந்தன் அதை ஊதாரித் தனமாக செலவழித்து விட்டு,
வாழ வழி இல்லாமல் போகவே, வேறு வழியின்றி, மனம் மனந்திரும்பி, தன் தந்தையிடம் திரும்புகிறான்.
தந்தையும் அவனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறார்.
மனம் திரும்பும் பாவிக்கு இருக்க வேண்டிய மன நிலையை இயேசு தத்ரூபமாகக் காட்டுகிறார்.
"அப்பா, வானகத்திற்கு எதிராகவும், உமக்கு முன்பாகவும் குற்றம்செய்தேன். இனிமேல் உம்முடைய மகன் என்று எண்ணப்பட நான் தகுதியற்றவன்."
"தந்தையே உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்."
மனம் திரும்புவதற்கான முதல் படி செய்த பாவத்தை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வது தான்.
செய்த பாவத்தை ஏற்றுக் கொண்டு, மன்னிப்புக் கேட்கும்போது கடவுள் மன்னிக்கிறார்.
பாவம் என்று தெரிந்து செய்வதுதான் பாவம்.
தெரிந்து செய்தும் அதற்குரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் தட்டிக் கழிப்பவர்களால்
பாவத்திற்காக வருத்தப் படவும் முடியாது, மன்னிப்புக் கேட்கவும் முடியாது.
உவமையில் வரும் ஊதாரி மைந்தன் தான் செய்வது தந்தைக்கு எதிரான செயல் என்பது தெரிந்துதான் ஊதாரித் தனமாக வாழ்ந்தான்.
ஆனால் அதன் விளைவை அனுபவிக்க ஆரம்பித்தவுடன் தனது தந்தைக்கு எதிராக பாவம் செய்ததற்காக வருத்தப் பட ஆரம்பித்தான்.
நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும்
செய்த பாவங்களுக்காக வருத்தப்பட்டு கடவுளிடம் மன்னிப்புக் கேட்டால் கடவுள் நமது பாவங்களை மன்னித்து,
நம்மைத் தனது பிள்ளையாக ஏற்றுக் கொள்வார் என்ற உண்மையை நமக்குப் போதிப்பது தான்
ஆண்டவர் இவ்வுவமையைச் சொன்னதின் நோக்கம்.
கடவுள் அளவற்ற இரக்கமும், மன்னிக்கும் சுபாவமும் உடையவர் என்பதை உணர்ந்து
நாம் எவ்வளவு பெரிய பாவிகளாய் இருந்தாலும் மனம் திரும்பி அவரிடம் வரவேண்டும் என்பதே இயேசுவின் ஆசை.
ஊதாரி மைந்தன் பாவத்தின் விளைவை அனுபவிக்க ஆரம்பித்தவுடன் மனம் வருந்தினான்.
ஆனால் பாவிகள் பாவத்தின் விளைவை அனுபவிக்கும் வரை காத்திருக்கக் கூடாது.
ஏனெனில் பாவத்தின் முழுமையான விளைவை அவர்களது மரணத்திற்குப் பின்தான் அனுபவித்த நேரிடும்.
அப்போது மனம் திரும்ப முடியாது.
பாவத்தின் விளைவு நரகம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதை உணர்ந்து இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே மனம் திரும்ப வேண்டும்.
இன்றைய பாவிகளில் அநேகர் மனம் திரும்பாமைக்குக் காரணம் ஒன்றல்ல, பல.
1. பாவத்தின் விளைவு நரகம் என்பது தெரிந்திருந்தும், அதை உணராமலிருப்பதுதான் முக்கிய காரணம்.
புத்திக்குத் தெரிந்திருப்பது இருதயத்தைத் தொடவில்லை.
இருதயப்பூர்வமாக அறிந்திருப்பது தான் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
உண்மையைத் தியானிக்கும் போதுதான் அது இருதயத்தைத் தொடும்.
பாவத்தின் விளைவை உணர்ந்து அது வருமுன்பே பாவத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ள வேண்டும்.
2. பாவத்தின் பொறுப்பைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதற்குப் பதில் சமூகத்தின் மேலும், சூழ்நிலை மேலும் பழிபோடுபவர்கள் மனம் திரும்புவது கடினம்.
ஞாயிற்றுக்கிழமையில் கட்டாயம் திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும்.
வராதவர்கள் சொல்லும் சாக்குப் போக்குகளை எழுத கடைகளிலுள்ள அனைத்து நோட்டுக்களும் போதாது.
"வருடக் கணக்காக பாவ சங்கீர்த்தனமே செய்யாமல். பூசைக்குப் போகும் போதெல்லாம் நற்கருணை வாங்குகிறாயே, தப்பாகப் படவில்லை?"
"நான் மட்டுமா வாங்குகிறேன். எல்லோரும்தான் வாங்குகிறார்கள்."
ஒருவர் செய்கின்ற செயலுக்கு யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்,
செயலுக்குப் பொறுப்பு செய்கின்றவர்தான்.
ஏவாள் தனது பாவத்துக்கு சாத்தானைக் காரணமாகக் காட்டினாள்,
ஆனால் பாதிக்கப்பட்டது ஏவாளின் வம்சம் தானே.
ஆகவே நமது பாவத்திற்கான பொறுப்பை நாமே ஏற்று
தந்தையிடம் திரும்ப வேண்டும்.
3. ஊதாரிப் பிள்ளையின் உவமையை வாசித்துவிட்டு,
"நாம் எப்போது மனம் திரும்பினாலும் கடவுள் ஏற்றுக் கொள்வார்,
ஆகவே ஊதாரிப் பிள்ளையைப் போல நாமும் பாவம் செய்வோம்,
முடியாத போது தந்தையிடம் வருவோம்.''
என்று எண்ணிக் கொண்டு பாவ வாழ்க்கையில் இறங்கி விடக் கூடாது.
அப்படி எண்ணுபவர்களுக்காகத் தான் ஆண்டவர்,
"நீங்களும் ஆயத்தமாக இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."
என்று கூறியுள்ளார்.
நாம் எப்போதும் பாவமின்றி இருக்க வேண்டும்.
ஊதாரி மகனைப் போல ஊர் சுற்றப் போகாமல் தந்தையுடனே இருக்க வேண்டும்.
ஊதாரிப் பிள்ளைகளாக வாழாமல் உத்தம பிள்ளைகளாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment