Monday, October 10, 2022

"வெளிபுறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அன்றோ?"(லூக்.11:40)

"வெளிபுறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அன்றோ?"
(லூக்.11:40)

சாதாரண மக்கள் இயேசுவின் நற்செய்தியைக் கேட்கவும், தங்களது நோய் நொடிகளிலிருந்து குணம் பெறவும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

ஆனால் பரிசேயர்கள் அவரது பேச்சிலும், செயலிலும் குறைகள் காண்பதற்கே அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

ஒரு பரிசேயன் அவரைத் தன் இல்லத்திற்குச் சாப்பிட அழைத்தால் அவரிடம் ஏதாவது குறை காண்பதற்காகத்தான் இருந்திருக்கும்.

அவரும் அவனுடைய சொற்களை வைத்து தனது நற்செய்தியைப் போதிப்பதற்காகத்தான் சென்றிருப்பார்.

அதற்கு வசதியாகத்தான் உண்பதற்கு முன்னால் கைகால் கழுவாதிருந்திருப்பார்.

அதைப் பரிசேயன் குறையாகக் கண்டவுடன் இயேசு தான் சொல்ல வந்ததைச் சொல்கிறார்.

இயேசுவின் சொற்கள், செயல்கள் இவற்றைப் பற்றி தியானிக்கும்போது அவரது சொற்களும், செயல்களும் அவரது நித்திய கால திட்டத்தின்பால் பட்டவை என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.

அவர் எதையும் எதிர்பாராமல் செய்வதில்லை.

பரிசேயன் வீட்டிற்குச் சாப்பிடச் சென்றது, அங்கு போதித்த நற்செய்தி அவரது நித்திய கால திட்டத்தின் அடிப்படையில்தான்.

நாம் நமது இஷ்டம் போல் என்ன செய்தாலும் அது அவரது அளவற்ற ஞானத்திற்கு தெரியும்.

உண்பதற்கு முன்னால் கைகால் கழுவாததைக் கண்டு பரிசேயன் வியப்படைந்தது அவனது இஷ்டப்படி நடந்தது.

ஆனால் இயேசுவுக்கு அது நித்திய காலமாகவே தெரியும்.

இப்போது அவரது நற்செய்திக்கு வருவோம்.

இயேசு நமது ஆன்மீக வாழ்க்கையைச் சீர் செய்யவே மனிதனாய்ப் பிறந்தார்,

உடல் சுகாதாரம் பற்றி போதிக்க அல்ல.

மனிதனின் ஆன்மா அவனின் உட்புறத்தைச் சார்ந்தது,

உடல் வெளிப்புறத்தைச் சார்ந்தது. 

குளித்தல், கால்கை கழுவுதல் சம்பந்தப்பட்ட சுகாதார விதிகள் உடல் நலத்தைச் சார்ந்தவை.

அவற்றால் மனித ஆன்ம நலனைப் பேண முடியாது.

கையையும், காலையும் கழுவும் போது கையும், காலும்தான் சுத்தமாகும், ஆன்மா சுத்தமாகாது.

உடல் நலனைப் பேண வேண்டாம் என்று ஆண்டவர் சொல்லவில்லை.

ஆனால் ஆன்மாவின் சுத்தத்தைப் பேணாமல் உடல் நலனை மட்டும் பேணுவதால் மனிதனுக்கு எந்த பயனும் இல்லை என்கிறார்.

நமது உள்ளத்தில் கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கும்போது

முதலில் அதைச் சுத்தப் படுத்த வேண்டும்.

வெளிபுறமாகிய உடலை உண்டாக்கிய கடவுள்தான்

 உட்புறமாகிய ஆன்மாவையும் உண்டாக்கியிருக்கிறார்.

சாப்பாட்டறையில் அழகான, சுத்தமான வெளிப்புறம் உள்ள பாத்திரத்தில் உள்ளே சாணியைப் போட்டு வைத்திருந்தால்,

சாப்பிட வந்திருப்போர் அதைத் தொடுவார்களா?

வெளிப்புறம் எப்படி இருக்கிறது என்பதை விட, உட்புறத்தில் என்ன இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

உடல் எப்படி  இருக்கிறது என்பதை விட,  ஆன்மா எப்படி  இருக்கிறது 
என்பதுதான் முக்கியம்.

ஆன்மா பாவ அழுக்கு இல்லாமல் புண்ணியங்களால் நிறைந்திருக்க வேண்டும்.

"பாத்திரத்தில் உள்ளதைப் பிச்சைகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு எல்லாம் தூயதாய் இருக்கும்."

கையில் உள்ள பொருட்களை பிறரன்பின் அடிப்படையில் தர்மமாகக் கொடுத்தால் ஆன்மா புண்ணியத்தால் நிரம்பும்.

புண்ணியத்தால் நிரம்பியுள்ள ஆன்மாவிற்குள் பாவம் நுழையாது.

அருள் ஒளி நிறைந்த ஆன்மாவிற்குள் பாவ இருள் நுழையாது.

பரிசேயன் வீட்டில் இயேசு போதித்த நற்செய்தியின் சுருக்கம்:

"கைகால் கழுவது போன்ற உடல் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களே,

ஆன்மாவில் உள்ள பாவத்தை நீக்கி அதை ஆண்டவரின் அருளால் நிரப்புங்கள்."

ஒரே வாக்கியத்தில்:

"உடல் நலத்தை விட ஆன்மாவின் நலனே முக்கியமானது."

பரிசேயன் வீட்டில் சொல்லப்பட்ட நற்செய்தி அவனுக்கு மட்டுமா?

இல்லை. அகில உலகத்தாருக்கும்தான்.

இறைவன் எப்படி அனைவருக்கும் சொந்தமோ, அப்படியே அவருடைய வாக்கும் அனைவருக்கும் சொந்தம்.

நாம் இயேசுவின் சீடர்கள். அவருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

அவருடைய சொற்படியே வாழவேண்டியவர்கள்.

திருப்பலிக்குச் செல்லும்போதெல்லாம் அவர் தரும் விருந்துக்குப் போகிறோம்.

காலையில் எழுந்து, பல் தேய்த்து முகம் கழுவி குளித்து விட்டு, சுத்தமான உடை அணிந்து திருப்பலிக்குச் செல்கிறோம்.

நமது உடலைச் சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்கிறோம்.

ஆண்டவரை விருந்துக்கு அழைத்த பரிசேயன் சொன்னபடி வெளிப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்கிறோம்.

ஆண்டவர் விருப்பப்படி நமது ஆன்மாவைச் சுத்தமாக வைத்துக் கொள்கிறோமா?

சிந்திப்போம்.

ஆண்டவர் எதிர்பார்ப்பது நமது சுத்தமான உடலை அல்ல, சுத்தமான ஆன்மாவை.

உடலைச் சுத்தமாக  வைத்திருப்பதால்  ஆன்மா சுத்தமாகாது.

ஆன்மா சுத்தமாக வேண்டுமானால் நமது பாவங்களுக்கு மன்னிப்புப் பெற வேண்டும்.

புதுத் துணி எடுக்க வேண்டுமென்றால் சவுளிக் கடைக்குப் போகிறோம்.

பாவ மன்னிப்பு பெற வேண்டுமென்றால் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உள்ளவரிடம் போக வேண்டும்.

கடவுள் ஒருவரே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உள்ளவர்.

இயேசு ஒருவருக்கே அப்பத்தை தன் உடலாகவும், இரசத்தை சன் இரத்தமாகவும் மாற்றும் வல்லமை உண்டு.

அந்த வல்லமையை (அப்பத்தையும், இரசத்தையும் இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாற்றும் வல்லமையை)  தான் நிருவிய கத்தோலிக்க திருச்சபையின் குருக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

அதேபோல பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும் கத்தோலிக்க திருச்சபையின் குருக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

சாவான பாவ நிலையில் உள்ளவர்கள் 

இயேசு தன்னையே உணவாக அளிக்கும் திருவிருந்தில் கலந்து 
கொள்ளுமுன்

ஒரு கத்தோலிக்க குருவிடம் பாவ சங்கீர்த்தனம் செய்து பாவமன்னிப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.

சாவான பாவ நிலையில் திருவிருந்தில் கலந்து கொள்ளக் கூடாது.

யூதாஸ் சாவான பாவ நிலையில் ஆண்டவரின் திரு உடலை உட்கொண்டான்.

விளைவு?

''அவனுக்குள் சாத்தான் நுழைந்தான்." (அரு.13:27)

சாவான பாவ நிலையில் நற்கருணை உட்கொள்வது சாவான பாவம்.

ஆக, திருப்பலியில் கலந்து கொள்ளுமுன் 

குளிப்பதற்கும், சுத்தமான உடை அணிவதற்கும்  கொடுக்கும் முக்கியத்துவத்தை விட 

அதிக முக்கியத்துவத்தை ஆன்மீக சுத்தத்திற்குக் கொடுக்க வேண்டும்.

பாவ மாசின்றி வாழ்வோம்,
பரலோக தந்தையின் அருளில் நிறைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment