உலகப் பொருள்களின் மீது பற்று வைத்திருப்பவர்களைப் பற்றி இயேசு கூறிய உவமையில்:
பணக்காரன் ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்ததால் விளைச்சலை சேமித்து வைக்க போதுமான இடமில்லாததால்
ஏற்கனவே உள்ள களஞ்சியங்களை இடித்து விட்டு, மிகப்பெரியதாகக் கட்டி,
விளைச்சலை எல்லாம் அதில் சேமித்து வைத்துப் பல ஆண்டுகள் பயன்படுத்துவேன் என்று பெருமையாகக் கூறிக்கொள்கிறான்.
அப்போது கடவுள் அவனை நோக்கி,
"அறிவிலியே, இன்றிரவே உன் உயிரைவாங்கப் போகிறார்கள். நீ தேடி வைத்தது யாருக்குக் கிடைக்குமோ?" என்கிறார்.
அதாவது அவன் சேமித்து வைப்பதில் ஒரு தானியத்தைக் கூட அவனால் பயன்படுத்த முடியாது,
யார் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதுவும் அவனுக்குத் தெரியாது.
இந்த உவமை கற்பிக்கும் பாடம் என்ன?
ஒருவனிடம் எவ்வளவு பொருள் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் அவனுக்கு எவ்வளவு தேவை இருக்கிறதோ அவ்வளவுதான் அவனால் செலவழிக்க முடியும்.
தேவைக்கு அதிகமாக இருப்பதை அவனால் பயன் படுத்த முடியாது.
பயன் படுத்த முடியாததை சேமித்து வைத்து என்ன பயன்?
ஒருவன் தன்னிடம் உள்ளதைத் தானும் பயன்படுத்தாமல்,
சேமித்து மட்டும் வைத்துவிட்டு இறந்துவிட்டால்,
அவன் பயன்படுத்தாததை வேறு யாரோ தான் பயன்படுத்தப் போகிறார்கள்.
அதனால் அவனுக்கு எந்த பயனும் இல்லை.
ஆனால் உண்மையான பிறர் அன்புடன் நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து பயன்படுத்தினால் அதனால் மற்றவர்களும் பயன்படுவார்கள் நாமும் ஆன்மீக ரீதியாக பயன் பெறுவோம்.
நமது செயல்படுத்தப்பட்ட பிறர் அன்புக்கு விண்ணகத்தில் நமக்கு சன்மானம் கிடைக்கும்.
அந்த சன்மானம் நமக்கு நித்திய காலமும் பேரின்பப் பயனைத் தந்து கொண்டேயிருக்கும்.
நமக்கு கடவுள் பொருட்களை தந்திருப்பது அவற்றை மற்றவர்களோடு பிறர் அன்போடு பகிர்ந்து பயன்படுத்துவதற்காகத்தான்.
நம்மை போல மற்றவர்களும் கடவுளுடைய பிள்ளைகள் தான்.
உலகில் உள்ள எல்லா பொருள்களும் அவருடைய எல்லா பிள்ளைகளும் பயன்படுத்துவதற்காகத்தான்.
பிறர் அன்பு என்ற ஆசீர்வாதத்தை கடவுள் நமக்கு தந்திருப்பது நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து பயன்படுத்துவதற்காகத்தான்.
இப்பொழுது ஒரு கேள்வி எழும்.
ஒருவன் தனக்கு கிடைத்த பொருளை எல்லாம் மற்றவர்களோடு பகிர்ந்து விட வேண்டுமா?
அல்லது தனது எதிர் காலத்திற்கு என்று கொஞ்சம் வங்கியில் போட்டு சேமித்து வைக்கலாமா?
இது கொஞ்சம் சிக்கலான கேள்வி.
பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையைச் சார்ந்த, பரதேசி பீற்றர் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்ட
கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் தனது ஒவ்வொரு மாத சம்பளத்தையும்
அந்தந்த மாதமே மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வார்.
தனக்கென்று ஒரு பைசா கூட சேமித்து வைத்ததில்லை.
அவர் புனித பிரான்சிஸ் அசிசியாரின் முழு நேர சீடன்.
கிறிஸ்துவின் போதனையை அப்படியே பின்பற்றியவர்.
எல்லோரும் அவரைப் போல் வாழ வேண்டுமா,
அல்லது தங்களுக்கென்றும், தங்கள் குடும்பத்திற்கென்றும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை வங்கியில் சேமித்து வைக்கலாமா?
சேமித்து வைப்பது அவர்கள் நேர்மையாக சம்பாதித்த சொந்த பணம்.
நேர்மையாக சம்பாதித்ததில் மிச்சம் பிடித்து சேமித்து வைப்பதில் தவறு ஒன்றும் இல்லை.
ஆனாலும் ஆன்மீக பார்வையில் அது நமது விசுவாச பற்றாக்குறையையே காண்பிக்கின்றது.
சம்பாத்தியத்தை சேமிப்பதற்கும் விசுவாச பற்றாக்குறைக்கும் என்ன சம்பந்தம்?
நமது ஆண்டவர்
"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்."
என்றுதான் விண்ணகத் தந்தையை நோக்கி செபிக்கச் சொன்னார்.
அதாவது நமது அன்றாட தேவைகளைத்தான் பூர்த்தி செய்யும்படி தந்தையிடம் விசுவாசத்தோடு கேட்க வேண்டும்.
அதாவது நமது அன்றாட தேவைகளை தந்தை பூர்த்தி செய்வார் என்று உறுதியாக விசுவசிக்க வேண்டும்.
நாளைய தேவையைப் பற்றி இன்று தந்தையிடம் கேட்கவில்லை.
அதை நாளைக்கு தான் கேட்போம்.
நாளைய தேவை நாளைக்கு பூர்த்தி செய்யப்படும்.
நாளைய தேவைகளுக்கு நாம் இன்றே சேமித்து வைத்தால்
நமக்கு நமது சேமிப்பின் மீது உள்ள நம்பிக்கை தந்தையின் மீது இல்லை என்பதுதானே பொருள்.
நமது அன்றன்றய தேவைகளை கடவுள் அன்றன்று கட்டாயம் பூர்த்தி செய்வார் என்று தந்தையை விசுவசித்தால்
நாம் ஏன் சேமிக்கிறோம்?
நாம் நமது அம்மாவிடம் காலையில் காலைச் சாப்பாட்டைக் கேட்டு பெற்றபின்
அதில் இரவு சாப்பாட்டுக்காக மிச்சம் பிடிப்போமா?
ஆகவேதான், தந்தையிடம் நமது அன்றாட உணவைக் கேட்டுவிட்டு,
நாளைய உணவுக்கு நாமே சேமித்தால் அது நமது விசுவாசமின்மையைக் காட்டுகிறது என்கிறேன்.
நமது பெரும்பாலான செபங்கள் கேட்கப் படாமைக்குக் காரணம் நமது விசுவாசப் பற்றாக்குறைதான்.
உலகம் பொருட்களை நம்புவதை விட, அவற்றை படைத்த கடவுளை அதிகம் நம்புவோம்.
இயேசுவின் விருப்பப்படி நம்மிடம் இருப்பதை பகிர்ந்துண்டு வாழ்வோம்.
பேரின்ப நிலை வாழ்வைப் பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment