(லூக்.13:21)
இயேசு இறையரசை புளிப்பு மாவுக்கு ஒப்பிடுகிறார்.
புளிப்பு மாவை எந்த மாவோடு சேர்த்தாலும் அதைப் புளிப்பாக்கிவிடும்.
"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத்.5:48)
என்பது இயேசுவின் ஆசை.
இறையரசை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்களில்,
அது புளிப்பு மாவாக செயல்பட்டு இயேசுவின் ஆசையை நிறைவேற்றும்.
இறையரசு நிறைவுள்ளது. அதை ஏற்றுக்கொள்பவர்களையும் தன்னைப் போல் மாற்றும்.
யார் இறையரசை ஏற்று கொள்கிறார்களோ அவர்கள்
அன்பு, இரக்கம், பரிவு, நீதி போன்ற இறைப் பண்புகளை ஏற்றுக்கொண்டு
அவற்றில் வளர ஆரம்பிப்பார்கள்.
உண்மையான அன்பு உள்ளவர்கள்
யார் மேல் அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை போலவே மாறி விடுவார்கள்.
கிறிஸ்துவை ஏற்றுக் கொள்பவர்கள் மறு கிறிஸ்துவாக மாறிவிடுவார்கள்.
இறையரசை ஏற்றுக் கொள்பவர்களும் புளிப்பு மாவாக மாறி விடுவார்கள்.
இறையரசைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் அங்கு இருப்பவர்களை இறையரசுக்குள் கொண்டுவந்து விடுவார்கள்.
யார் இறையரசை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்குள் இறையரசு உள்ளது.
அதை மற்றவர்களுக்கும் அளிப்பது அவர்களுடைய கடமை.
இயேசு போதித்த நற்செய்தியே இறையரசு பற்றியது தானே.
"அதுமுதல் இயேசு, "மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவிக்கத் தொடங்கினார்."
"விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவித்ததுதான் நற்செய்தி.
விண்ணரசு என்றாலே இறைவனது அரசு தானே.
இயேசு இறைவன். தனது அரசை நமக்குத் தருவதற்கும், நம்மை அதற்குள் அழைப்பதற்குமே அவர் நற்செய்தியை அறிவித்தார்.
நற்செய்தியை வாழ்பவர்கள் இறையரசின் உறுப்பினர்களாக,
அதாவது இறை இயேசுவின் சீடர்களாக,
வாழ்கிறார்கள்.
நற்செய்தியை அறிவிப்பவர்கள் இறையரசை அறிவிக்கிறார்கள்.
புளிப்புமாவு எப்படி தான் சேர்ந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கிறதோ,
அதேபோல,
யாரெல்லாம் நற்செய்தியை வாழ்ந்து, அறிவிக்கிறார்களோ
அவர்கள் அறிவிக்கப் பட்டவர்களையும்
நற்செய்தியை வாழ்ந்து, அறிவிக்க வைக்கிறார்கள்.
நாம் உண்மையிலேயே நற்செய்தியை வாழ்ந்து அறிவித்தால்,
யாருக்கு அறிவிக்கிறோமோ அவர்களும் அதை வாழ்ந்து அறிவிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
நற்செய்தியை வாழும் ஒருவர் நற்செய்தியை அறியாத மக்களிடையே சென்று வாழ ஆரம்பித்தால்,
அவர்களும் அவரது முன்மாதிரிகையைப் பின்பற்றி அவர்களைப் போல் வாழ ஆரம்பித்து விடுவார்கள்.
நற்செய்தியை உலகெங்கும் பரப்பும் விசயத்தில்
நாம் புளிப்புமாவு போல் செயல்பட வேண்டும் என்பது ஆண்டவருடைய ஆசை.
முதலில் நாம் புளிப்புமாவாக மாற வேண்டும்.
அதாவது நாம் நற்செய்தியை அறிந்து, அதை வாழ வேண்டும்.
அதாவது இயேசுவின் சீடர்களாக மாற வேண்டும்.
நாம் இயேசுவின் சீடர்களாக வாழ்ந்தால் நமது சீடத்துவ பணியால் நம்மைச் சுற்றி வாழ்வோர் ஈர்க்கப்பட்டு நம்மைப் போல் மாறுவார்கள்.
நாம் நம் மனதை நோகச் செய்பவர்களை மன்னிப்பவர்களாக செயல்பட்டால்
நம்மால் மன்னிக்கப் பட்டவர்கள் நம்மைப் பின்பற்ற ஆரம்பிப்பார்கள்.
நாம் நம்மைப் பகைப்பவர்களை நேசித்தால் அவர்களும் முதலில் நம்மை நேசிப்பார்கள்,
பின் அவர்களது மற்ற பகைவர்களை நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
நாம் தேவைப்படுபவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தால் நம்மைக் கவனிப்பவர்கள் அதையே செய்வார்கள்.
நமது ஒவ்வொரு குணமும்,
அது நல்ல குணமாக இருந்தாலும் சரி, கெட்ட குணமாக இருந்தாலும் சரி,
நம்மோடு வாழ்பவர்களைத் தொற்றிக் கொள்ளும்.
ரோஜா மலரின் வாசம் அருகில் வருவோர்களுடைய மூக்கிற்குள் நுழைவது போல,
சாணத்தின் நாற்றமும் நுழையும்.
நாம் நமது கிறிஸ்தவ சமயத்தை உலகெங்கும் பரப்ப வேண்டுமென்றால்
முதலில் நாம் நல்ல கிறிஸ்தவர்களாக மாறி கடவுளுக்காக வாழ வேண்டும்.
வாயினால் போதிப்பதை விட வாழ்க்கையால் போதிப்பதே அதிக பலன் தரும்.
33ஆண்டுகள் வாழ்ந்து போதித்த இயேசு 3 ஆண்டுகள் மட்டுமே வாயினால் போதித்தார்.
30 ஆண்டுகள் தனது தாய்க்கும், வளர்த்த தந்தைக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்து கீழ்ப்படிதலின் மகத்துவத்தைப் போதித்தார்.
நாம் நம் தாய்த் திருச்சபைக்கு கீழ்ப்படிந்து நடந்தாலே போதும்,
நற்செய்தியை வாழ்ந்து அறிவிப்பவர்களாக மாறிவிடுவோம்.
யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்று தெரிந்தும்
இயேசு அவன் மீது Suspension, dismissal போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நமது பணி நிர்வாகங்களுக்கு இயேசு ஒரு 'வாழ்ந்து காட்டிய' முன்னுதாரணம்.
இயேசு வாழ்ந்து போதித்தது போல நாமும் வாழ்ந்து போதிப்போம்.
நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்ந்து
நல்ல கிறிஸ்தவர்களை உறுவாக்குவோம்.
வாழ்வோம், வாழவைப்போம்.
இறையரசைப் போல் புளிப்பு மாவாக செயல்படுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment