(லூக்.14:13)
நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டை விருந்து என்று அழைப்பதில்லை.
ஏதாவது விழாவின் போது நமது மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் பொருட்டு நமக்குப் பிரியமானவர்களுக்குக் கொடுக்கும் உணவுதான் விருந்து.
கோவில் திருவிழா,
திருமண விழா,
புதுமனைப் புகு விழா
போன்ற விழாக்களின் போது
நமக்கு உறவாக அல்லது நட்பாக இருப்பவர்களை மட்டும்தான் விருந்துக்கு அழைப்போம்.
இப்போது கேள்வி: நமக்கு உறவாக அல்லது நட்பாக இருப்பவர்கள் யார்?
ஆன்மீக ரீதியாக இறைவன் மட்டும்தான் நமக்கு மிக நெருங்கிய உறவு.
ஆகவே இறைவனைக் கட்டாயம் நாம் அளிக்கும் விருந்துக்கு அழைக்க வேண்டும்.
பொதுத் தீர்வையின் போது இறைவன் இயேசு
"ஏனெனில், பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள். அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்."
என்று சொல்லிவிட்டு
"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்."
இயேசு குறிப்பிடும் அவரது சின்னஞ் சிறிய என் சகோதரர்கள் யார்?
பசியாய் இருப்பவர்கள்.
தாகமாய் இருப்பவர்கள்.
அன்னியனாய் இருப்பவர்கள்.
ஆடையின்றி இருப்பவர்கள்.
நோயுற்றிருப்பவர்கள்.
சிறையில் இருப்பவர்கள்.
சுருக்கமாக, இயலாத ஏழைகள்.
சுயமாக இயலாதிருக்கும் ஏழைகள்தான் அவரது சின்னஞ் சிறிய சகோதரர்கள்.
தலைப்பு வசனத்தில் குறிப்பிடப் பட்டுள்ள ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் ஆகியோரும் இயலாதிருக்கும் ஏழைகள்தான்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் இறை மகன் இயேசுவுக்கு சகோதர உறவுள்ளவர்கள்.
ஆக, நாம் கொடுக்கும் விருந்து களுக்கு அழைக்கப்பட வேண்டியவர்கள்
இறைமகன் இயேசுவும்,
அவருடன் சகோதர உறவுள்ள இயலாத ஏழைகளும் தான்.
இறைமகன் எப்போதும் நம்மோடு தான் இருக்கிறார்.
நாம் அழைக்க வேண்டியது இயலாத ஏழைகளைத்தான்.
இது இயேசு நமக்குத் தந்திருக்கும் அன்புக் கட்டளை.
இப்போது ஒரு கேள்வி எழும்:
படைக்கப் பட்ட அனைவரும் விண்ணகத் தந்தையின் பிள்ளைகள்தானே,
இறைமகனுக்கு சகோதார்கள் தானே.
அவர்களையும் விருந்துக்கு அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது?
நம் நண்பர்களையோ, சகோதரர்களையோ, உறவினர்களையோ,
செல்வரான அண்டை வீட்டாரையோ
விருந்துக்கு அழைத்தால் அவர்கள் பதிலுக்கு நம்மையும் அவர்கள் கொடுக்கும் விருந்துக்கு அழைத்து விடுவார்கள்.
ஆனால் நம்மைத் திரும்ப அழைக்க இயலாத ஏழைகளை அழைத்தால்,
அதற்கான பேறு, சன்மானம், விண்ணகத்தில் இறைவனிடமிருந்து மட்டுமே கிடைக்கும்.
அது அழியாத, என்றும் நம்மோடிருக்கும்
இறைவனோடு நாம் வாழும் பேரின்பமாகிய சன்மானம்.
நமது உலக உறவினர்களிடமிருந்து பெறும் சன்மானம் அழிந்து விடும்.
நாம் அழியாத சன்மானத்தைப் பெற வேண்டுமென்று இயேசு விரும்புவதால்தான்
பதிலுக்குப் பதில் செய்ய இயலாதவர்களை விருந்துக்கு அழைக்கும்படி இயேசு கூறுகிறார்.
இயேசுவுக்கு நம் மீது அளவு கடந்த அன்பு இருப்பதால்தான்
நமக்கு விண்ணக சன்மானம் கிடைக்கும் செயல்களைச் செய்யும்படி
அவர் நம்மை அறிவுருத்துகிறார்.
நாம் எதைச் செய்தாலும் இயேசுவின் அறிவுரைக்குக் கட்டுப் பட்டு செய்வோம்.
நாம் நிரந்தரமாக வாழ வேண்டியது அவருடன்தான்.
இப்போது ஒரு நண்பர் கேட்கிறார்,
"அப்படியானால் நண்பர்களையும் சகோதரர்களையும் விருந்துக்கு அழைக்கவே கூடாதா?"
"பெண்களிடம் பிறந்தவர்களுள் ஸ்நாபக அருளப்பருக்கு மேலான எவரும் தோன்றவில்லை."
என்று இயேசு சொல்லியிருக்கிறார்.
அப்படியானால் இயேசுவும், அவரது தாயும் அருளப்பரை விடக் குறைந்தவர்களா?
இயேசுவும் பெண்ணிடம் தான் பிறந்தார்.
அன்னை மரியாளும் பெண்ணிடம் தான் பிறந்தார்.
பின் ஏன் இயேசு அப்படிச் சொன்னார்?
அருளப்பரின் பெருமையை வலியுறுத்துவதற்காக அப்படிச் சொன்னார்.
வகுப்பில் மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
உள்ளே நுழைந்த ஆசிரியர்,
"அமைதி. மூச்சு விடக் கூடாது." என்கிறார்.
"அதெப்படி சார், மூச்சுவிடாமல் அமைதியாக இருக்க முடியும்?"
என்று கேட்பதுபோல் இருக்கிறது,
"நண்பர்களையும் சகோதரர்களையும் விருந்துக்கு அழைக்கவே கூடாதா என்று கேட்பது.
அமைதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே ஆசிரியர் மாணவர்களை மூச்சு விடக் கூடாது என்கிறார்.
அருளப்பரின் பெருமையை வலியுறுத்தவே
"பெண்களிடம் பிறந்தவர்களுள் ஸ்நாபக அருளப்பருக்கு மேலான எவரும் தோன்றவில்லை." என்கிறார்.
அது போல,
ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் போன்றோரை மறந்து விடக் கூடாது,
அவர்களுக்கு தான் உதவிகள் செய்வதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே,
இயேசு உறவினர்களை விருந்துக்கு அழைக்காமல் அவர்களை அழைக்க வேண்டும் என்கிறார்.
அனைவரையும் நேசிப்போம்,
சுயமாக எதுவும் செய்ய இயலாதவர்களை அதிகம் நேசிப்போம்.
நாமும் கூட கடவுள் உதவியின்றி ஒன்றும் செய்ய இயலாதவர்கள் தான்.
ஆகவேதான் இறைவன் நம்மை அதிகம் நேசிக்கிறார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment