Wednesday, October 19, 2022

"ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்."(லூக்.13:24)

"ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்."
(லூக்.13:24) 


ஆன்மீகமும், லௌகீகமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்பதற்கு அவை பயன்படுத்தும் நடை பாதைகளே சான்று


நமது உலக போக்கு வரத்து நாகரீகத்தின் ஆரம்பக் கட்டத்தில் ஒற்றையடிப் பாதை என்று ஒன்று இருந்தது.

ஒரு நேரத்தில் ஒரு ஆள்தான் நடக்க முடியும். அதுவும் கவனவுடன் பாதையைப் பார்த்து தான் நடக்க முடியும்.

இருபக்கமும் பாதம் பதிக்க முடியாத அளவுக்கு முட்செடிகளோ, கற்களோ கிடக்கலாம்.

அடுத்து வண்டிப் பாதைகள் வந்தன. கொஞ்சம் சுதந்தரமாக நடக்கலாம்.

பின் மண் பாதைகள் கல் பாதைகளாக(metal roads) மாறின.

பின் தார் ரோடுகள் வந்தன.

அப்புறம் இரு வழிச் சாலைகள், நான்கு வழிச் சாலைகள், எட்டு வழிச் சாலைகள்  

என்று போக்கு வரத்து நாகரீகம் முன்னேறிக் கொண்டே போகிறது.

ஒற்றையடிப் பாதையில் அங்குமிங்கும் பார்க்காமல் கஷ்டப் பட்டு நடந்த மனிதன்,

அகலமான சாலைகளில் சுதந்திரமாக, ஆடிப் பாடி கூட  நடக்கிறான்.

உலகியலில் இது முன்னேற்றம்.


ஆனால் ஆன்மவியலில் (Spirituality) முன்னேற்றம் எதிர் மாறானது.

ஆரம்பத்தில், ஆன்மீகத்தில் மனிதன் அதிக அக்கரை காட்டாத காலத்தில் 

மனிதன் இஷ்டப்படி நடந்தான்.

அவன் நடந்ததெல்லாம் பாதைதான்.

சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் கட்டுப்பாடு இல்லாமல் நடந்தான்.

தான் நடப்பது பாவ வழியா, சரியான வழியா என்பது பற்றி அவன் கவலைப் பட்டதேயில்லை.

ஆனால் ஆன்மா பாவமின்றி வாழ வேண்டும் என்ற கட்டுப் பாடுகளை ஏற்றுக் கொண்டபின்

இஷ்டப்படி நடப்பதை விட்டுவிட்டு ஒற்றையடிப் பாதையில், அதாவது ஒடுக்கமான பாதையில் நடக்க வேண்டும் என்ற விதியை ஏற்றுக் கொண்டான்.

நேராக நடக்காமல் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே நடந்தால் பாவச் சோதனைகளில் விழ நேரிடும்.

சிந்தனையில் இறைவன், சொல்லில் இறைவன், செயலில் இறைவன் என்று ஆன்மீகம் வளர வளர,

பாதையின் ஒடுக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. 

ஒடுக்தமான பாதை வழியே நடக்கும் ஆன்மீகவாதி இறைவனையும், இறையன்பையும் பற்றி மட்டுமே சிந்தித்தான், அதாவது தியானித்தான்.

சிந்தனை தியானமாகி விட்டது.

இறைவனைப் பற்றியும், இறையன்மைப் பற்றி மட்டுமே பேசினான்.

இந்த பேச்சு நற்செயல் அறிவித்தல் ஆகிவிட்டது.

இறையன்புப் பணி மட்டுமே செயலாக, வாழ்க்கையாக மாறிவிட்டது.

இதுவரைப் பார்த்தது ஆன்மீக வாதியின் நடை முறையில் ஏற்பட்ட முன்னேற்றம்.

ஆன்மீகத்தில் ஒடுக்கமான பாதை
மோட்சத்தை நோக்கியும்,

இஷ்டப்படி நடக்கும் அகலமான பாதை அதற்கு எதிர்த்திசையிலும் செல்கின்றன.

ஒடுக்கமான பாதைக்கு வராமல் இன்னும் இஷ்டப்படி, அகன்ற வழியில் நடக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

அவர்களைப் பார்த்துதான் ஆண்டவர் சொல்கிறார்,

"ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்." என்று.

பாதையும் ஒடுக்கமாக இருக்க வேண்டும், 

விண்ணகத்திற்குள் நுழையும் வாயிலும் ஒடுக்கமாக இருக்க வேண்டும்.

செபமாலையை ஒழுங்காகச் சொல்பவர்களுக்கு ஒடுக்கமான பாதை வழியே எப்படிச் செல்வது என்பது புரியும்.

செபமாலைக்கும், ஒடுக்கமான பாதைக்கும் என்ன சம்பந்தம்?

செபமாலை செபிப்பதே ஒரு ஆன்மீகப் பயணம்தான்.

ஒடுக்கமான வழியே செல்லும் ஆன்மீகப் பயணம்.

தியானிக்க வேண்டிய விசுவாச பிரமாணமும், தேவ இரகசியங்களும், சொல்ல வேண்டிய கர்த்தர் கற்பித்த செபமும், மங்கள வார்த்தை செபமும்தான் நம் ஆன்மீகப் பயணப் பாதை.

இது ஒற்றையடிப் பாதையாகையால் பாதையில் மட்டும் கண் இருக்க வேண்டும்.

இருபக்கமும் சோதனை முட்கள் குவிந்து கிடக்கும்.

மலர்ப் பூங்கா வழியே செல்லும்போது மலர்களை மட்டும் இரசிப்போம்.

அதுபோல 

முதலில் விசுவாசப் பிரமாணத்தின் வழியே செல்லும் போது, 

விசுவாச சத்தியங்கள் மீது மட்டும் கண்ணும், கருத்தும் இருக்க வேண்டும்.

மகிழ்ச்சியின் தேவ இரகசியங்களுக்குள் நுழைவோம்.

முதல் தேவ இரகசியம்.

கபிரியேல் சம்மனசு மரியாளுக்கு மங்கள வார்த்தை சொல்கிறார்.

நம் கண்ணில் பட வேண்டியது கபிரியேல் தூதரும், மரியாளும்.

காதில் விழ வேண்டியத தூதரின் வாழ்த்துரையும், மரியாளின் அர்ப்பண வார்த்தைகளும்.

" அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்ற வாழ்த்துரையையும்,

"இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" என்ற அர்ப்பண வார்த்தைகளையும் காதில் வாங்க வேண்டும்.

இறைமகன் நமக்காக மனுவுரு எடுத்ததைத் தியானிக்க வேண்டும்.

இந்த தியானத்தின் போது சம்பந்தம் இல்லாத எதுவும் கண்ணில் படக்கூடாது,

காதில் விழக் கூடாது,

மனதில் படக் கூடாது.

இது ஒடுக்கமான பாதை.

.தியானித்தபின் கர்த்தர் கற்பித்த செபத்தையும், மங்கள வார்த்தை
செபத்தையும் பொருள் உணர்ந்து கூற வேண்டும்.

இரண்டாம் தேவ இரகசியத்தில் கண்ணில் பட வேண்டியது அன்னை மரியாளும், எரிசபெத்தம்மாளும்.

காதில் விழ வேண்டியது அவர்களுடைய வாழ்த்துரைகள்.

மனதில் பட வேண்டியது குழந்தை இயேசுவும், குழந்தை அருளப்பர் துள்ளியதும்.


மூன்றாம் தேவ இரகசியத்தில் கண்ணில் பட வேண்டியது மாட்டுக் குடிலில் சூசையப்பரும், மாதாவும், தீவனத் தொட்டியில் படுத்திருக்கும் குழந்தை இயேசுவும்.

காதில் விழ வேண்டியது குழந்தை யின் அழுகை.

செய்ய வேண்டியது குழந்தையை நோக்கி ஒரு சின்ன செபம்.

"பாலா, அழவேண்டாம். நான் இனி பாவங்கள் செய்ய மாட்டேன்."

நான்காவது தேவ இரகசியத்தில் 

கண்ணில் பட வேண்டியது ஆலயத்துக்குள் சூசையப்பரும், மாதாவும், குழந்தை இயேசுவும், சிமியோனும், அன்னாவும்.

காதில் விழ வேண்டியது சிமியோனின் வார்த்தைகள்.


ஐந்தாம் தேவ இரகசியத்தில் கண்ணில் பட வேண்டியது சூசையப்பர், மாதா, 
12 வயது இயேசு.


சூசையப்பரும், மாதாவும் இயேசுவைத் தேடிக் கொண்டு ஆலயத்துக்கு வருகிறார்கள்.

இயேசு போதகர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார்.

தியானிக்க வேண்டிய வார்த்தைகள்:

"மகனே, ஏன் எங்களுக்கு இப்படிச் செய்துவிட்டாய் ? இதோ! உன் தந்தையும் நானும் உன்னை ஏக்கத்தோடு தேடிக்கொண்டிருந்தோமே."

" என்னைத் தேடினீர்கள் ? என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா?"

கர்த்தர் கற்பித்த செபம் சொல்லும் போது நம் மனதிலும், கண் முன்னும் விண்ணகத் தந்தை மட்டும் இருக்க வேண்டும்.

மங்கள வார்த்தை செபம் சொல்லும் போது நம் மனதிலும், கண் முன்னும் அன்னை மரியாள் மட்டும் இருக்க வேண்டும்.

வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடாமல், தியானிக்க வேண்டியதை மட்டும் தியானித்து தினமும் செபமாலை செய்தால்

ஆன்மீகத்தில் ஒடுக்கமான வழியே இறைவனை மட்டும் சிந்தித்து பயணம் செய்ய சிறந்த பயிற்சி கிடைக்கும்.

ஒடுக்கமான வழி என்றாலே ஆண்டவரை பற்றியும், அவருக்கு பிடித்தமானதைப் பற்றியும் தியானித்துக் கொண்டு,

அவரைப் பற்றிய நற்செய்தியை அறிவித்துக் கொண்டு,

அவருக்காக மட்டும்  வாழ்வதுதான்.

ஒடுக்கமான வழியே பயணித்து,
ஒடுக்கமான வாயில் வழியே நுழைந்து மோட்சத்திற்குள் செல்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment