"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான்."
(லூக்.11:23)
அரசியலில் நடுநிலைமைக் கொள்கை என்று ஒன்று உண்டு.
நேருவின் காலத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் எதிர் எதிர் அணிகளாய் இருந்தபோது,
இந்தியா ஒரு அணியிலும் சேராமல் நடுநிலைமை வகித்தது.
பிரயாணத்தின்போது முன் நோக்கிப் போகலாம், அல்லது புறப்பட்ட இடத்துக்கே திரும்பலாம், அல்லது நடுவழியில் உட்கார்ந்து கொள்ளலாம்.
ஒருவரை புகழலாம் அல்லது திட்டலாம் அல்லது ஒன்றுமே செய்யாதிருக்கலாம்.
ஆனால் ஆன்மீக வாழ்வில் நடுநிலைமையே கிடையாது.
ஒன்று முன்னேறுவோம், அல்லது பின்னடைவோம்.
முன்னேற்றமும் இல்லாமல், பின்னடைவும் இல்லாமல் நடு நிலை வகிக்க முடியாது.
இயேசுவோடு இல்லாதவன் அவருக்கு எதிராய் இருக்கிறான்.
உலகின் பாவங்களைப் போக்க வந்தவர் இயேசு.
எப்போதும் இயேசுவோடு இருப்பவர்கள் பாவம் செய்ய மாட்டார்கள்.
இயேசுவின் பக்கமே வராதவர்கள் பாவ வாழ்க்கை வாழ்பவர்களாகவே இருப்பார்கள்.
(தண்ணீர் அழுக்கைப் போக்குகிறது. தண்ணீரையே தொடாதவர்கள் அழுக்காகவே இருப்பார்கள். அதுபோல பாவத்தைப் போக்குபவர் பக்கமே வராதவர்கள் பாவத்தோடுதான் இருப்பார்கள். பாவம் இயேசுவுக்கு எதிரி)
ஆகவேதான் இயேசுவோடு இல்லாதவர்கள் அவருக்கு எதிராய் இருக்கிறார்கள்.
பாவமின்றி, புண்ணிய வாழ்வு வாழ ஆசிக்கின்றவர்கள் எப்போதும் இயேசுவுடனே இருக்க வேண்டும்.
வாயிலிருந்து "இயேசுவே இரட்சியும்" என்ற செபம் வந்து கொண்டேயிருக்க வேண்டும்.
இயேசுவைப் பற்றிய செய்திகள் காதில் விழுந்து கொண்டேயிருக்க வேண்டும்.
உலகத்தைப் பார்க்கும்போது அதைப் படைத்த இயேசுவின் முகம் தெரிய வேண்டும்.
நமது ஒவ்வொரு மூச்சிலும் இயேசு இருக்க வேண்டும்.
எப்போதும் இயேசுவின் மடியில் இருப்பது போன்ற உணர்வு வேண்டும்.
உலகம் முழுவதும் கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்த நேரம்.
நான் அமெரிக்காவில் என்னுடைய பேரன் வீட்டிலிருந்து இந்தியாவிற்கு பயணிக்க வேண்டிய நேரம்.
பயணத்தின் போது கொரோனாவின் பிடியில் மாட்டிவிடுவோமோ என்ற பயம் உள்ளத்தில் இருந்த நேரம்.
என்னுடைய பூட்டி ஒரு நாற்காலியின் அருகில் உட்கார்ந்திருந்தாள்.
என்னுடைய பேரன் நாற்காலியில் உட்காரப் போனான்.
என்னுடைய பூட்டி, "அப்பா, நாற்காலியில் உட்காராதீர்கள். அதில் அந்தோனியார் உட்கார்ந்திருக்கிறார்." என்றாள்.
கொஞ்சம் பொறுத்து அவளே நாற்காலியில் உட்கார்ந்தாள்.
"அந்தோனியார் உட்கார்ந்திருக்கிறார், நீங்கள் உட்கார வேண்டாம் என்று அப்பாவிடம் சொன்னாய். இப்போது நீ உட்கார்ந்திருக்கிறாய்?'' என்று கேட்டேன்.
அதற்கு அவள்,"நான் அந்தோனியார் மடியில் உட்கார்ந்திருக்கிறேன்." என்றாள்.
அப்போது என் மனதில் ஒரு எண்ணம் உதித்தது.
"இயேசுவே, நான் உமது மடியில் பயணம் செய்வேன். கொரோனாவுக்குப் பயப்பட மாட்டேன்."
பயணம் முழுவதும் இயேசுவின் மடியிலேயே உட்கார்ந்திருந்தேன்.
எந்த பயமும் இன்றி ஊருக்கு வந்து சேர்ந்தேன்.
சிலுவையில் தனது ஐம்பொறிகளையும் நமக்காகப் பலியாக்கினார் இயேசு.
நமது ஐம்பொறிகளும் இயேசுவுக்காகவே பயன்பட வேண்டும்.
ஐம்பொறிகளும் இயேசுவுக்காகவே பயன்பட்டால் பாவம் அருகில் வராது.
நமது உள்ளத்தில் இயேசு இருக்க வேண்டும்.
வாய் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.
நாம் நற்செய்தியை வாழ வேண்டும்.
இயேசு நம்முடன்தான் இருக்கிறார், நாம் அவரை விட்டு பிரியாது வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment