Thursday, October 27, 2022

மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்"(லூக்.15:7)

"மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்"
(லூக்.15:7)


பள்ளிக் கூடத்துக்கு வரும் மாணவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள்.

 உண்மையிலேயே படிப்பில் அக்கறை உள்ள மாணவர்களும் இருப்பார்கள்.

'ஏண்டா வந்தோமோ' என்று எண்ணிக் கொண்டிருக்கும் மாணவர்களும் இருப்பார்கள்.

தேர்வில் முதல் தரமான மதிப்பெண் வாங்கும் மாணவர்களும் இருப்பார்கள்.

35 மதிப்பெண்களுக்குக் குறைவாக வாங்குவது தான் தங்கள் வாழ்வின் குறிக்கோள் என்பது போல் படிக்கும் மாணவர்களும் இருப்பார்கள்.

உண்மையிலேயே படிப்பில் அக்கறை உள்ள, முதல் தரமான மதிப்பெண் பெறக்கூடிய மாணவர்களை விட,

மிகக் குறைவான மதிப்பெண்கள் பெறக்கூடிய மாணவர்கள் மேல்தான் ஆசிரியருக்கு அதிக அக்கறை இருக்கும்.

மருத்துவமனையில் செத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளைப் பிழைக்க வைப்பதில் மருத்துவர் அதிக அக்கறை செலுத்துவது போல,

தோல்வி மதிப்பெண்கள் பெறக்கூடிய மாணவர்களை வெற்றி பெற வைப்பதுதான் ஆசிரியரின் குறிக்கோளாக இருக்கும்.

 பாட நேரத்திலும் ஆசிரியர் அவர்களைத்தான் அதிகம் கவனிப்பார்.

ஆசிரியருக்கு தேர்வில் 85 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவன் 98 மதிப்பெண்கள் எடுக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட,

வழக்கமாக பத்து மதிப்பெண்களுக்கு குறைவாக வாங்கும் மாணவன் 35 மதிப்பெண்கள் பெற்றுவிட்டால்
ஏற்படும் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்.

தோல்வியே அடைந்து கொண்டிருப்பவர்களை வெற்றி பெற வைப்பதே ஆசிரியரின் முக்கிய பணி.

வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் வெற்றி பெற வேண்டும்.

 இது உலகியல் அனுபவம்.

ஆன்மீக உலகிலும் பரிசுத்தவான்களும் இருப்பார்கள்.

பாவத்தை மட்டும் விலக்கி வாழ்பவர்களும் இருப்பார்கள்.

பாவிகளும் இருப்பார்கள்.

பாவம் செய்வதையே தொழிலாக கொண்டவர்களும் இருப்பார்கள்.

பாவிகளைத் தேடியே உலகுக்கு வந்தவர் இயேசு.

பாவிகளை மனம் திருப்புவதற்காகவே,

அவர்களது பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு,

சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்தவர் இயேசு.

பாவிகளை மனம் திருப்பவே
தனது சீடர்களை உலகெங்கும்  அனுப்பியவர் இயேசு.

அவர் கத்தோலிக்கத் திருச்சபையை ஏற்படுத்தியதே அந்த நோக்கத்தோடு தான்.

 அவர் ஏற்படுத்திய தேவத் திரவிய அனுமானங்களின் நோக்கமும் பாவிகளை மனம் திருப்பி,

அவர்களை பரிசுத்தவான்களாக மாற்றுவது தான்.

பாவமே செய்யாமல் பரிசுத்தவான்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களால் அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட,

மனம் திரும்பும் பாவிகளால் அதிக மகிழ்ச்சி ஏற்படும். 

இதைத்தான் ஆண்டவர்,

"அவ்வாறே, மனந்திரும்பத் தேவையில்லாத தொண்ணுற்றொன்பது நீதிமான்களைக் குறித்து வானத்தில் உண்டாகும் மகிழ்ச்சியைவிட, 

மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்றார்.

ஆகவே திருச்சபை பாவசங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

புனித ஜான் மரிய வியான்னி குருமடத்தில் படிக்கும்போது பாடங்களில் வெற்றி பெறவில்லை.

அவர் சொன்ன செபமாலையைப் பார்த்துதான் அவருக்கு குருப் பட்டம் கொடுத்தார்கள்.

அவர் குருவானவர் ஆனபின் அவர் செய்த முக்கிய பணி

இலட்சக் கணக்கான மக்களுக்கு பாவ சங்கீர்த்தனம் கொடுத்தது தான்.

இயேசுவின் சீடர்களாகிய நாம் இயேசுவுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டுமென்றால் பாவ சங்கீர்த்தனம் மூலம் நமது பாவங்களுக்கு மன்னிப்புப் பெற வேண்டும்.

பாவ சங்கீர்த்தனத்தின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு உணர்த்தி

 அவர்களுக்கு பாவ மன்னிப்பு பெற வழிகாட்டினாலும் இயேசு மகிழ்ச்சி அடைவார்.

பள்ளிக் கூடத்தில் படிக்கும் மாணவர்கள்

விளையாட்டுப் போட்டிகள்,
பேச்சுப் போட்டிகள்,
எழுத்துப் போட்டிகள்,
நடிப்புப் போட்டிகள்

ஆகியவற்றில் வெற்றி பெற்று, சான்றிதழ்களை வாங்கிக் குவிக்கலாம்.

ஆனால் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் அவற்றுக்கு மதிப்பு உண்டு.

தேர்வில் வெற்றி பெறாவிட்டால் மற்ற எல்லா சான்றிதழ்களும் குப்பைத் தொட்டிக்குதான் போகும்.

ஆன்மீக வாழ்விலும் அப்படித்தான்.

ஆயிரம் திறமைகளில் பெயர் வாங்கியிருந்தாலும்,

பாவமன்னிப்பு ஒன்றினால் தான் அவற்றுக்கு இயேசுவின் முன் மதிப்பு உண்டு.

நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்வோம்.

மனம் திரும்புவோம்.

பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுவோம்.

இயேசுவையும், விண்ணக வாசிகளையும் மகிழ்ச்சிப் படுத்துவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment