(லூக்.12:14)
நற்செய்தி போதித்துக் கொண்டிருந்த இயேசுவிடம் ஒரு நபர் தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சனையை தீர்த்து வைக்கும் படி கேட்கிறார்.
அவரைப் பார்த்து இயேசு,
"அன்பனே, நியாயம் தீர்க்கவோ பாகம்பிரிக்கவோ என்னை ஏற்படுத்தியவர் யார்?"
என்று கேட்கிறார்.
கேட்கிறவர் யார்?
கடவுள். ஆன்மாவையும், அது வாழும் உடலையும், அது சார்ந்த உலகையும், அதிலுள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்தவர்.
தனது நற்செய்தியைக் கேட்க வந்தவர்களுடைய உடல் சார்ந்த நோய்களையும் குணமாக்கியவர்.
அவர் ஏன் சொத்துப் பிரிவினை சம்பந்தமான உதவியைக் கேட்கும்போது இவ்வாறு பதில் கூறினார்?
நமக்காகத்தான். நாம் எப்படிப் பட்ட உதவிகளை அவரிடம் கேட்க வேண்டும் என்பது சம்பந்தமாக அறிவுரை கூறுவதற்காகத்தான்.
"எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாயிருங்கள்.
ஏனெனில், ஒருவனுக்கு எவ்வளவு தானிருந்தாலும்
செல்வப்பெருக்கினால் வாழ்வு. வந்துவிடாது."
உலகப் பொருட்களின் மீது ஆசைப் பட வேண்டாம். நமது ஆசைப்படி எவ்வளவு பொருள் கிடைத்தாலும் அது நமது ஆன்மீக வாழ்வுக்குப் பயன்படாது.
இறைவன் அருள், உலகப் பொருள் ஆகிய இரண்டில் ஒன்றின் மீதுதான் ஆசை இருக்க முடியும்.
இரண்டின் மீதும் இருக்க முடியாது.
அருள் மீது ஆசை உள்ளவன் பொருள் மீது ஆசை வைக்க மாட்டான்,
பொருளை அதை அனுபவிப்பதற்காக ஈட்ட மாட்டான்.
இறை அருளை ஈட்டுவதற்காக தன்னிடம் உள்ள பொருளைப் பயன் படுத்துவான்.
பணம் இருந்தால் அதைத் தர்மம் செய்து இறை அருளை ஈட்டுவான்.
பொருள் மீது ஆசை உள்ளவன் அருளைப் பற்றி கவலைப் பட மாட்டான்.
பொருளை ஈட்டுவது ஒன்றே அவன் குறிக்கோளாக இருக்கும்.
பொருளாசையால்
நமக்குத் தீமை மட்டும்தான் ஏற்படும்.
பொருளாசை மிகுந்தவன் அதை ஈட்டுவதற்காக எந்த பாவத்தையும் செய்ய தயங்க மாட்டான்.
பொய், களவு, இலஞ்சம் போன்ற பாவங்கள் அவன் வாழ்வில் சர்வ சாதாரணமாக இருக்கும்.
அருள் அற்ற வாழ்வில் நல்லது நடக்க வாய்ப்பில்லை.
கையில் ஒரு பைசா கூட இல்லாதவன் அருள் வாழ்வில் செல்வந்தனாக வாழலாம்,
ஆனால் கோடிக்கணக்கில் பணமும் அதன் மீது பற்றும் உள்ளவன் அருள் வாழ்வை நினைத்துக் கூட பார்க்க முடியாது.
நாம் பொருள் மீது ஆசை வைக்கக் கூடாது என்பதற்கு முன் மாதிரியாகத்தான் நம் ஆண்டவரே
ஏழையாகப் பிறந்து,
ஏழையாக வாழ்ந்து,
ஏழையாக மரித்தார்.
அவருடைய சீடர்களாகிய நமக்கும் பொருள் மீது பற்று இருக்கக் கூடாது.
கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்னவரிடம் ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான அருள் வரங்களை மட்டும் கேட்க வேண்டும்.
அருளை ஈட்டத் தேவையான பொருளை மட்டும் கேட்கலாம்.
நாம் செபிக்கும்போது இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment