"காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம்"
(லூக்13:9)
இயேசு கூறிய அத்திமர உவமையில்,
மூன்று ஆண்டுகளாக காய்க்காத அத்திமரத்தை வெட்டிவிட வேண்டும் என்று அதன் உரிமையாளர் கூறுகிறார்.
தோட்டத்தைக் கவனிப்பவர்,
"ஐயா, இந்த ஆண்டும் இருக்கட்டும். சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன்.
காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம்" என்றான்.
.இந்த உவமையை வாசிக்கும் போது நமது மனதில் என்ன தோன்றுகிறது?
சொன்னவர் பாவிகளை மீட்க வந்த நமது ஆண்டவராகிய இயேசு.
பாவிகளை மீட்பதற்கும் இந்த உவமைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று தியானிப்போம்.
சென்மப் பாவத்தோடு உற்பவித்து பிறந்த நாம் அனைவரும் பாவிகள் தான்.
நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காகத்தான் இறை மகன்
மனிதனாய்ப் பிறந்தார்.
கத்தோலிக்க திருச்சபையைக் கூட பாவிகளின் கூடாரம் என்று தான் அழைக்கிறோம்.
நோயாளிகள் நோயிலிருந்து குணம் பெற மருத்துவமனையில் இருப்பது போல,
பாவிகளாகிய நாம் பாவத்திலிருந்து குணம் பெற கத்தோலிக்க திருச்சபையில் இருக்கிறோம்.
பாவிகளாகிய நாம் எதற்காக இவ்வுலகில் வாழ்கிறோம்?
படித்து பட்டம் பெறுவதற்காக மாணவர்கள் பள்ளிக் கூடத்திற்குப் போவது போல,
நோயாளிகள் நோயிலிருந்து குணம் பெற மருத்துவ மனைக்குப்
போவது போல,
பாவத்திலிருந்து மீட்கப் பட்டு, பரிசுத்தர்கள் ஆகி நிலை வாழ்வு பெறுவதற்கு நம்மை தயாரிப்பதற்காக நாம் இப்பூமியில் வாழ்கிறோம்.
அத்தி மரத்திற்கு பூத்து, காய்த்து, பழுக்க போதிய கால அவகாசம் கொடுக்கப் பட்டது.
ஆனால் அது தான் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை.
ஆகவேதான் அதன் உரிமையாளர் அதை வெட்ட வேண்டும் என்கிறார்.
ஆனாலும் அதைக் கவனிப்பவர் அதற்கு இன்னும் ஒரு ஆண்டு
கால அவகாசம் கொடுப்போம் என்கிறார்.
நமது வாழ்க்கையின் கால அளவைத் தீர்மானிப்பவர் நமது உரிமையாளராகிய கடவுள்.
அந்த கால அளவுக்குள் நாம் பரிசுத்தர்களாக மாற வேண்டும்.
அத்திமரத்தைக் கவனிப்பவர்
சுற்றிலும் கொத்தி எருப்போடுவது போல,
நமது ஆன்மீக வாழ்வைக் கவனிக்கும் நமது ஆண்டவர் நமது ஆன்மீக நலனுக்காக அருள் வரங்களை அள்ளித் தரும் தேவத்தரவிய அனுமானங்களைத் தந்திருக்கிறார்.
அவற்றைப் பயன்படுத்தி நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற்று பரிசுத்தர்களாய் வாழவேண்டும்.
சென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெற ஞானஸ்நானம்,
வாழும்போது நாம் செய்த பாவத்திலிருந்து விடுதலை பெற பாவ சங்கீர்த்தனம்,
ஆன்மீக வாழ்வில் உறுதியாக இருக்க உதவும் பரிசுத்த ஆவியின் அருள் வரங்களை அள்ளித்தர உறுதிப் பூசுதல்,
நமது பாவங்களை மன்னித்து,
திருப்பலி நிறைவேற்றி,
நமக்கு ஆண்டவரையே ஆன்மீக உணவாகத்தந்து,
நம்மை ஆன்மீக வாழ்வில் வழிநடத்தும் குருக்களை உருவாக்க குருத்துவம்,
ஆண்டவர் தன்னையே நமக்கு உணவாகத் தர திவ்ய நற்கருணை,
திருமண வாழ்வை ஆசீர்வதிக்க மெய் விவாகம்,
நமது இவ்வுலக வாழ்வில் நாம் விண்ணகம் செல்ல நம்மைத் தயாரிக்க அவஸ்தைப் பூசுதல்
ஆகியவை இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட தேவத்திரவிய அனுமானங்கள்.
இவற்றைப் பயன் படுத்தி நாம் பரிசுத்தத் தனத்தில் வளர வேண்டும்.
இதற்காகத்தான் நமக்கு வாழ் நாளாகிய கால அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது.
இவற்றைப் பயன் படுத்துகிறோமா?
நாம் குழந்தைகளாய் இருக்கும் போது ஞானஸ்நானம் கொடுத்து விட்டார்கள்.
ஆகவே சென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெற்று விட்டோம்.
நாம் செய்கிற பாவங்களுக்கு மன்னிப்புப் பெற ஆண்டவர் தந்திருக்கும் பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தை ஒழுங்காகப் பயன்படுத்துகிறோமா?
சிந்தித்துப் பார்ப்போம்.
பழைய காலத்தைச் சுட்டிக்காட்டினால் முன்னேற விரும்பாத பழைமை விரும்பி என்று சொல்வார்கள்.
சொல்லிவிட்டுப் போகட்டும்.
சுட்டிக் காண்பிக்க வேண்டியதை சுட்டிக் காண்பித்துதான் ஆக வேண்டும்.
நான் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்:
வல்லத்திலிருந்து நெல்லையப்புரம் வரை ஒரே பங்கு, ஒரே பங்குத் தந்தை.
ஞாயிற்றுக் கிழமை பூசையாக
இருந்தாலும் சரி, மற்ற நாட்கள்
பூசையாக இருந்தாலும் சரி
பூசைக்கு முன் எல்லோரும் பாவசங்கீர்த்தனம் செய்து விடுவார்கள்.
பாவசங்கீர்த்தனம் செய்தவர்கள் மட்டும்தான் திவ்ய நற்கருணை உட்கொள்வார்கள்.
7.30க்கு பூசை என்றால் சுவாமியார் 6.30 க்கே பாவசங்கீர்த்தனத் தொட்டியில் இருப்பார்.
மக்கள் Qவில் நின்று ஒவ்வொருவராக பாவசங்கீர்த்தனம் செய்வார்கள்.
அன்றைய நாளையும், இன்றைய
நாளையும் ஒப்பிட்டுப் பார்த்தால்,
இன்றைக்கு நாட்டில் பாவம் செய்வது மிகவும் குறைந்து விட்டது போல தெரிகிறது.
மருத்துவ மனைக்கு யாரும் வராவிட்டால் யாருக்கும் நோய் இல்லை என்றுதானே அர்த்தம்.
நமது ஆண்டவர் பாவசங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தை ஏற்படுத்தியதே நாம் அதைப் பயன்படுத்தி பரிசுத்தர்கள் ஆக வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆண்டவர் நமக்குத் தந்துள்ள கால அவகாசத்தை அவர் எதிர்பார்க்கிறபடி பயன்படுத்தி மீட்பு பெறுவோம்.
"இந்த ஆண்டும் இருக்கட்டும்.
சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன்.
காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம்"
என்ற வசனங்கள் நமக்குத் தூண்டுகோலாய் இருக்கட்டும்.
நாம் காய்க்கும் அத்திமரங்களாக மாறுவோம்.
அதுதான் நம் ஆண்டவரின் ஆசை.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment