Tuesday, October 11, 2022

"செபக்கூடங்களில் முதல் இருக்கைகளையும், பொது இடங்களில் வணக்கத்தையும் விரும்புகிறீர்கள்." (லூக்.11:43)

"செபக்கூடங்களில் முதல் இருக்கைகளையும், பொது இடங்களில் வணக்கத்தையும் விரும்புகிறீர்கள்."
(லூக்.11:43)

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை பூசைக்குப் பிந்தி வரும் நண்பரைப் பார்த்து கேட்டேன்:

"பூசை ஆரம்பிக்கு முன் கோவிலுக்கு வந்தால் என்ன, 

ஏன் பூசை ஆரம்பித்த பின் வருகிறீர்கள்?"

"நீங்கள் பைபிள் வாசிப்பதே இல்லையா?"

", ஏன், பைபிளில் பூசை ஆரம்பித்த பிறகு கோவிலுக்கு வரவேண்டும் என்று போட்டிருக்கிறதா?"

"பூசை ஆரம்பிக்கு முன் வந்தால் முதல் வரிசையில் உட்கார வேண்டியிருக்கும்.

ஆண்டவருக்கு அது பிடிக்கவில்லையே."

", முதல் வரிசையில் உட்காரக் கூடாது என்று ஆண்டவர் எப்போது சொன்னார்?"

"ஆண்டவர் பரிசேயர்களைப் பார்த்து, 

"செபக்கூடங்களில் முதல் இருக்கைகளையும், பொது இடங்களில் வணக்கத்தையும் விரும்புகிறீர்கள்."

என்று சொன்னாரே.

அப்படியானால் செபக்கூடங்களில் முதல் இருக்கைகளை விரும்பக். கூடாது, 

பொது இடங்களில் உங்களுக்கு யாரும் வணக்கம் போடக் கூடாது என்பதுதானே அவர் சொன்னதன் பொருள்.

பிந்தி வந்தால் கடைசியில் உட்கார்ந்து கொள்ளலாம்,

முதலில் போய் விடலாம்.

நமக்கு யாரும் வணக்கம் போட மாட்டார்கள்.

நானும் யாருக்கும் வணக்கம் போடுவதில்லை.

நான் மட்டும்தான் இயேசுவின் சொற்படி நடக்கிறேன்."

தாங்கள் செய்கிற தவறுக்கு பைபிளை துணைக்கு அழைக்கின்றவர்கள் இப்படி பல பேர் இருக்கிறார்கள்.


ஒரு நாள் பங்கு சுவாமியை நான் பார்த்துவிட்டு வரும்போது

 நண்பர் ஒருவர் என்னைப் பார்த்து,

"நீங்கள் கிறிஸ்தவரா?" என்று கேட்டார். 

நான் கிறிஸ்தவன் என்பது அவருக்குத் தெரியும். அவர் பிரிவினை சபை ஒன்றைச் சேர்ந்தவர். ஏதோ வம்புக்கு இழுக்கப் போகிறார் என்பதை புரிந்து கொண்டேன்.

"அதில் உமக்கு என்ன சந்தேகம்?"

''சந்தேகமே இல்லை. நீர் கிறிஸ்தவர் இல்லை. கிறிஸ்தவர் என்றால் கிறிஸ்துவின் போதனைப்படி நடக்க வேண்டும்.

கிறிஸ்துவின் போதனைப்படி நடக்காதவரை எப்படி கிறிஸ்தவர் என்று கூற முடியும்?"

", கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன்."

''எங்கிருந்து வருகிறீர்கள்?"

", பங்குத் தந்தையைப் பார்த்து விட்டு வருகிறேன்."

"யாரை?"

",பங்குத் தந்தையை."

"நீங்கள் கிறிஸ்துவின் போதனைப்படி நடக்கவில்லை என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்.

"மண்ணுலகில் ஒருவரையும் தந்தையென்று கூறவேண்டாம். ஏனெனில், விண்ணுலகிலுள்ளவர் ஒருவரே உங்கள் தந்தை."
(மத்23:9)

என்று கிறிஸ்து கூறியிருப்பதை பைபிளில் வாசிக்கவில்லையா?"

",என்னிடம் வருகிறவன் தன் தந்தை, தாய், மனைவி, மக்கள், சகோதரர் சகோதரிகளையும், ஏன், தன் உயிரையுமே வெறுக்காவிட்டால் என் சீடனாயிருக்க முடியாது."

இதை பைபிளில் வாசித்திருக்கிறீர்களா?"

"வாசித்திருக்கிறேன்."

", அப்படியானால் விண்ணகத் தந்தையை வெறுத்து விட்டுதான் நாம் இயேசுவிடம் போக வேண்டுமா?"

"அது வேறு, இது வேறு."

", இரண்டும் இயேசு சொன்னதுதானே.

விண்ணகத் தந்தை மட்டுமே உங்கள் தந்தை என்று கூறிய அதே இயேசுதானே

நம்முடைய தந்தையை வெறுத்து விட்டு தன்னிடம் வர வேண்டும் என்கிறார்."

"அப்படியானால் இயேசு ஏன் அப்படிச் சொன்னார்?"

",பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறீர்களா?"

'இது என்ன சார் கேள்வி. படிக்காமலா ஆசிரியர் ஆக முடியும்?''

",நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம்.

ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்."

என்று நீங்கள் 
வாசிக்கவேயில்லையா?"

நண்பர் கொஞ்சம் யோசித்தார்,

"Sorry, Sir. நீங்கள் உங்கள் 
சாமிமாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு பிடிக்கவில்லை.

அவர்களால் அப்பத்தையும், இரசத்தையும் இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாற்ற முடியும் என்கிறீர்கள்,

அவர்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்கிறீர்கள்.

உங்களை இயேசுவின் பாதையில் வழி நடத்தும் அவருடைய பிரதிநிதிகள் என்கிறீர்கள்.

 இவையெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை.

அதனால்தான் அந்த வசனத்தை அவர்களுக்கு எதிராகப் பயன் படுத்தினேன்.


விண்ணுலகிலுள்ளவர் ஒருவரே உங்கள் தந்தை,

மண்ணுலகில் ஒருவரையும் தந்தையென்று கூறவேண்டாம். என்று இயேசு ஏன் சொன்னார்?"

", அதை விளக்குவதற்காகத்தான்,

'பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறீர்களா?'
என்று கேட்டேன்."

"படித்திருக்கிறேன்."

", எப்போதாவது உங்கள் ஆசிரியர் 

'பள்ளிக்கூடத்தில் படிக்கும காலத்தில் படிப்பைத் தவிர வேறு வேலை எதுவும் கிடையாது' என்று சொல்லியிருக்கிறாரா?" 

"சொல்லியிருக்கிறார்."

", உண்மையில் படிப்பைத் தவிர வேறு வேலை எதுவும் கிடையாதா?"

"இல்லை. படிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்து வதற்காக அப்படிச் சொன்னார்.

ஏதாவது ஒன்றை வலியுறுத்த வேண்டுமானால் அதைக் கொஞ்சம் மிகைப் படுத்திக் கூறுவது பேச்சு வழக்கு தானே."

", இயேசுவும் மக்களுக்குப் புரியும் வகையில் மக்களுடைய பேச்சு வழக்கில்தான் நற்செய்தியை அறிவித்தார்.

அவர் சொன்னதை அக்கால மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

விண்ணையும், மண்ணையும் படைத்து, நம்மையும் படைத்தவர் தான் நமது முதல் தந்தை.

நமது முதல் உறவும் அவரே.

மற்ற உறவுகள் எல்லாம் அவரால் வந்தவையே.

மற்ற உறவுகளுக்கெல்லாம் காரணர் அவரே.

அவர் நம்மைப் படைத்திருக்கா விட்டால் இந்த உலகில் எந்த உறவும் இருந்திருக்காது.

நாம் உலகில் யார் வயிற்றிலிருந்து பிறக்க வேண்டும் என்று நித்திய காலமாக திட்டமிட்டவர் நமது விண்ணகத் தந்தையே.

நமது இவ்வுலக தந்தை நமது விண்ணகத் தந்தைக்கு எதிராக செயல்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

நாம் யார் பக்கம் இருக்க வேண்டும்?

விண்ணகத் தந்தையின் பக்கம்தான்.

விண்ணகத் தந்தையை விட உலக தந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன்

இயேசுவின் சீடனாக இருக்க முடியாது.

இயேசுவின் சீடனாக இருக்க விரும்புகிறவன்

 தனது மற்ற எல்லா உறவுகளையும் விட இயேசுவின் சீடத்துவ உறவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அவருக்காக தனது உயிரையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.

ஏனெனில் நாம் நாமாக இருப்பது அவரால் மட்டுமே.

இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மை பெற்றவரையோ, பங்குச் சாமியாரையோ தந்தை என்று அழைக்க வேண்டாம் என்றோ, 

யாரையும் வெறுங்கள் என்றோ  இயேசு சொல்லவில்லை.

நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் அன்புக் கட்டளை. 

உலக உறவுகளை விட விண்ணகத் தந்தையின் உறவு தான் முதல் உறவு என்றுதான் சொல்கிறார்.

அவரை நம் முழு உள்ளத்தோடும்,  முழு ஆன்மாவோடும்,  முழு மனத்தோடும், முழு வலிமையோடும்   நேசிக்க வேண்டும்." 

இயேசுவின் வார்த்தைகளை அவரது கண்ணோக்கிலிருந்து பார்க்க வேண்டும்.

"செபக்கூடங்களில் முதல் இருக்கைகளையும், பொது இடங்களில் வணக்கத்தையும் விரும்புகிறீர்கள்."

பரிசேயர்கள் பிறர் தங்களை பார்க்க வேண்டும் என்பதற்காகவே செபக்கூடங்களில் முதல் இருக்கைகளை விரும்பினர்.

மற்றவர்களை விட தாங்கள் பெரியவர்கள் என்று நினைத்துக் கொண்டு 

மற்றவர்கள் பொது இடங்களில் தங்களை வணங்க வேண்டும் என்று விரும்பினர்.

இந்த இரண்டு விருப்பங்களும் தற்பெருமை (Pride) என்ற தலையான பாவத்தை அடிப்படையாக கொண்டவை.

தாழ்ச்சி உள்ளவர்கள்   முதல்
இருக்கைகளைத் தேட மாட்டார்கள்.

அவைகளாகக் கிடைத்தால் ஏற்றுக் கொள்வார்கள்.

யாரிடமிருந்தும் வணக்கத்தை எதிர்பார்க்க மாட்டார்கள். 

யாராவது வணங்கினால் தாழ்ச்சியோடு பதில் வணக்கம் செய்வார்கள்.

தற்பெருமை கூடாது என்பதுதான் இயேசுவின் நற்செய்தி.

தாழ்ச்சிதான் புண்ணியங்களின் அரசி.

Humility is the queen of all virtues.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment