Monday, October 17, 2022

"இதையுணர்ந்து நீங்களும் ஆயத்தமாக இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."(லூக்.12:40)

"இதையுணர்ந்து நீங்களும் ஆயத்தமாக இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."
(லூக்.12:40) 

பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு தேர்வு வைக்கும் போது தேர்வு கால அட்டவணையை முன்கூட்டியே கொடுத்து விடுவது வழக்கம்.

கால அட்டவணையை மனதில் வைத்துக் கொண்டு மாணவர்கள் தேர்வுக்குத் தங்களைத் தயாரிப்பது வழக்கம்.

  தேர்வுக்கு முந்திய நாள்வரை சும்மா இருந்து விட்டு, 

முந்திய நாளில் அனைத்துப் பாடங்களையும் திருப்பிப் பார்த்து விட்டு,

நல்ல முறையில் தேர்வு எழுதிவிடும் மாணவர்களும் இருக்கிறார்கள்.

தேர்வு கால அட்டவணை கொடுக்கப் படாமல், ஆண்டின் எந்த நாளிலும் முன் அறிவிப்பின்றி தேர்வு நடைபெறும்,

அதுவே ஆண்டிறுதித் தேர்வாக கருதப்படும் என்று விதி இருந்தால் 

யாராவது தேர்வுக்கு முந்திய நாள் வரை படிக்காமல் இருப்பார்களா?

தேர்வுக்கு முந்திய நாள் எதுவென்றே யாருக்கும் தெரியாது!

ஆகவே, மாணவர்கள் அன்றன்றய பாடத்தை அன்றன்றே படித்து முடித்து விடுவார்கள்.

எப்போதும் இறுதித் தேர்வுக்குத் தயாராக இருப்பார்கள்.

நன்கு தேர்வு எழுதி வெற்றியும் பெறுவார்கள்.

ஆன்மீக வாழ்வில் நமது மரணத்தைத்தான் மனுமகன் வரும் நாள் என்று குறிப்பிடுகின்றோம்.

அதுதான் மனுமகன் இயேசு நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்லும் நேரம்.

மரணம் வரும்போது நமது ஆன்மா பாவ மாசின்றி பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் விண்ணகத்துக்குள் நுழைய முடியும்.

மரணம் வரும் நாளை முன் கூட்டியே அறிவித்துவிட்டால்

அதற்கு முந்திய நாள் வரை இஷ்டம்போல் வாழ்ந்துவிட்டு,

மரண நாளன்றுவிண்ணகம் செல்ல ஆன்மாவைத் தயாரிக்கலாம் என்று எண்ணத் தோன்றும்.

ஆனால் நமது வாழ்நாள் எல்லாம் ஒவ்வொரு நாளும்,
 ஒவ்வொரு மணியும்,
 ஒவ்வொரு நிமிடமும், 
ஒவ்வொரு வினாடியும் 
நாம் பாவமாசின்றி பரிசுத்தமாக வாழ வேண்டும் என்பதுதான் நமது ஆண்டவரின் விருப்பம்.

ஆகவேதான் நமது மரண நேரத்தை நமக்கு முன்னறிவிக்க வில்லை.

நம் வாழ்நாளின் எந்த விநாடியும் நமக்கு மரணம் வரலாம்.

இந்த விநாடி வாழ்வோர் அடுத்த விநாடி வாழ்வார் என்பது உறுதி இல்லை.

ஆகவே நாம் ஒவ்வொரு விநாடியும் ஆண்டவரின் வருகைக்குத் தயாராக இருக்க வேண்டும்.

அதாவது, ஒவ்வொரு விநாடியும் பாவமாசு இல்லாதிருக்க வேண்டும்.

மனித பலகீனத்தால் பாவத்தில் விழ நேரிட்டால் உடனடியாகப் பாவத்திற்காக உத்தம மனஸ்தாபப்பட்டு பாவ மன்னிப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.

பாவசங்கீர்த்தனமும் செய்து கொள்ள வேண்டும்.

அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்வது ஆன்மாவுக்கு நல்லது.

"மோட்சத்திற்குத்தானே போக வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் தவ முயற்சிகள் செய்து வாழ்வதை விட

வாழ்நாளில் எல்லா இன்பங்களையும் அனுபவித்து விட்டு,

மரணத்துக்கு முந்திய நாள் பாவ சங்கீர்த்தனம் செய்து,

மறுநாள் மோட்சத்திற்குப் போய் விடலாமே!"

என்று நினைப்பவர்களைப் பார்த்துதான் ஆண்டவர் சொல்கிறார்:

"எப்போதும், ஒவ்வொரு விநாடியும்
ஆயத்தமாக இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."

எப்போதும் தயாராக இருப்போம்.

இப்போது, அடுத்த விநாடி கூட ஆண்டவர் வரலாம்.

லூர்து செல்வம்.

.

No comments:

Post a Comment