Thursday, October 13, 2022

"ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என உங்களுக்குச் சொல்லுகிறேன்."(லூக்.12:5)

"ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(லூக்.12:5)

ஆன்மீக வாழ்வைப் பற்றி கவலைப் படாமல் உலகியல் வாழ்க்கை மட்டும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை கவலைகளாலும், பயங்களாலும் நிறைந்திருக்கும்.

சமூகம் சார்ந்த கவலைகள்,
பொருளாதாரம் சார்ந்த கவலைகள்,
அரசியல் சார்ந்த கவலைகள்,
கல்வி சார்ந்த கவலைகள்,
நோய் நொடி சார்ந்த கவலைகள்,
etc. etc. etc.

ஆனால் ஆன்மீக வாழ்க்கை மட்டும் வாழ்பவர்கள் வாழ்வில் உலகைச் சார்ந்த கவலைகள் எதுவும் இருக்காது.

எதைக் கண்டும், யாரைக் கண்டும் பயப்பட மாட்டார்கள்.

கடவுள் ஒருவருக்கு மட்டும் பயப்படுவார்கள்.

அதுவும் அன்பு சார்ந்த பயம்.
அன்பே உருவான கடவுளைப் பாவத்தால் மனம் நோகச் செய்து விடுவோமோ என்ற பயம்,

பாவத்தால் கடவுள் உறவை இழந்து விடுவோமோ என்ற பயம்.

இயேசுவே சொல்கிறார்:

"யாருக்கு அஞ்சவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிப்பேன்.

 கொன்றபின் நரகத்தில் வீழ்த்தவும் வல்லவருக்கு அஞ்சுங்கள். 

ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என உங்களுக்குச் சொல்லுகிறேன்."

நம்மிடம் தெய்வ பயம் இருக்க வேண்டும்.

தெய்வ பயம் இருந்தால் பாவம் செய்ய மாட்டோம்.

ஏனெனில் பாவம் கடவுளை மனம் நோகச் செய்யும்.

சாவான பாவத்தோடு (Mortal sin) மரணிக்க நேரிட்டால் இறை உறவை நித்தியத்துக்கும் இழக்க நேரிடும்.

பாவம் செய்ய பயப்பட வேண்டும்.

 அடிமைகளுக்கு இருக்கும் பயத்தைவிட, பிள்ளைகளுக்கு இருக்கும் பயமே சிறந்தது.

அடிமைகள் தண்டனைக்கு மட்டும் பயப்படுவார்கள்.

பிள்ளைகள் பெற்றோரை விட்டு பிரிய நேர்ந்து விடக் கூடாதே என்று பயப்படுவார்கள்.

பெற்றோரை விட்டுப் பிரிக்கும் எதையும் பிள்ளைகள் செய்ய மாட்டார்கள்.

 பாவம் அதைச் செய்பவர்களை இறைவனை விட்டு பிரிக்கும் என்பதால்

இறைவனை நேசிப்பவர்கள் பாவம் செய்ய மாட்டார்கள்.

நமது விண்ணகத் தந்தையுடன் எவ்வளவு நெருக்கமாக வாழ்கிறோமோ 

அவ்வளவு அதிகமாக அவரைப் பற்றி அறிந்து கொள்வோம்.

இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவையும், அதை வளர்ப்பது பற்றியும்  அறிவதே ஞானம்.

பாவமாசு இன்றி வாழ்பவர்கள் தான் இறைவனோடு நெருக்கமாக வாழ முடியும்.

தெய்வ பயம் உள்ளவர்கள்தான் பாவமாசு இன்றி வாழ்வார்கள்.

ஆகவேதான்

தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம். (பழமொழி.9:10)

Fear of God is beginning of wisdom.
(Proverbs 9:10)

என்று பைபிள் கூறுகிறது.

சிலர் கேட்கலாம்:

"கடவுள் அன்பு மயமானவர் ஆயிற்றே. அன்பு செய்பவரைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?" என்று.

நாம் பாவிகள்.

பலகீனமானவர்கள்.

நமது பலகீனத்தால் கடவுளுக்கு எதிராக பாவம் செய்து விடுவோமோ என்று பயப்பட வேண்டும்.

தெய்வத்தை நோகச் செய்து விடக் கூடாதே என்ற பயம்தான் தெய்வ பயம்.

பாவத்திற்கு எதிராக அருள் வரம் தரும்படி இறைவனை வேண்டிக் கொண்டேயிருக்க வேண்டும்.

அன்னை மரியாள் அருளால் நிறைந்திருந்ததால்தான்

அவளைப் பாவ மாசு அணுகவில்லை.

நம்மையும் பாவ மாசிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான்

அவளைப் பார்த்து,

"பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்."

என்று திரும்பத் திரும்ப வேண்டுகிறோம்.

பக்தியுடன் செபமாலை சொல்பவர்களைப் பாவம் அணுகாது.

"அருள் நிறைந்த செபமாலை அன்னையே,

உமது அன்புப் பிள்ளைகளாகிய நாங்கள்

தெய்வ பயத்துடன், பாவ மாசின்றி வாழ்ந்து,

உம்மைப் போலவே அவர் பாதம் வந்து சேர்ந்திட

உமது திருமகனிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்."

லூர்து செல்வம்.
 
.

No comments:

Post a Comment