Tuesday, October 4, 2022

"உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்."(மத்.11:29)

"உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்."
(மத்.11:29)

இயேசுவின் நுகம் பற்றிய உருவகம் மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டி பார்த்திருப்பவர்களுக்குப் புரியும்.

நம்மூர் விவசாயிகள் 
வயலிலிருந்து விளை பொருட்களை வீட்டுக்கு ஏற்றி வர மாட்டு வண்டியைப் பயன்படுத்துவார்கள்.

பாரம் ஏற்றப்படும் வண்டியில் மத்தியில் அச்சு இருக்கும்.

அச்சின் இருபுறமும் சக்கரங்கள் மாட்டப் பட்டிருக்கும்.

சக்கரங்கள் கழன்று விடாதிருக்க அச்சாணிகள் மாட்டப் பட்டிருக்கும்.

வண்டியின் முன்பகுதியில் ஓட்டுபவர் அமர இருக்கை இருக்கும்.

அதற்கு முன்னால் வண்டியை இழுக்கும் மாட்டைப் பூட்டுவதற்கான நுகம் இருக்கும்.

ஒற்றை மாட்டு வண்டியானால் ஒரு நுகம் இருக்கும்.

இரட்டை மாட்டு வண்டியானால் இரு நுகங்கள் உள்ள நுகக்கால் இருக்கும்.

வண்டியில் பாரத்தை ஏற்றி, மாட்டை நுகத்தில் பூட்டுவார்கள்.

இழுப்பதற்கு எளிதாக இருக்க வேண்டுமென்றால் பாரம் வண்டியின்
 அச்சுக்கு முன்னும், பின்னும் சமமாக வைக்கப்பட வேண்டும்.

அச்சுக்குப் பின்னால் பாரம் அதிகமாக இருந்தால் நுகம் மேல் நோக்கிச் சென்று, மாட்டின் கழுத்தை இறுக்கும்.

அச்சுக்குப் முன்னால் பாரம் அதிகமாக இருந்தால் அது நுகத்தை கீழ்நோக்கி அமுக்கும்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும் மாட்டினால் பாரத்தை இழுக்க முடியாது.

பாரம் அச்சுக்கு முன்னும், பின்னும் சமமாக இருந்தால் மாடு பாரத்தை இழுப்பது எளிது.

இயேசு தன்னை பாரம் சமமாக உள்ள வண்டியாக உருவகப் படுத்துகிறார்.

அவரின் நுகத்தில் நமது கழுத்தை மாட்டில் கொண்டால் பாரத்தை இழுப்பது நமக்கு எளிது.

பாரம் நாம் இழுத்துச் செல்ல வேண்டிய துன்பங்களைக் குறிக்கிறது.

நாமாக பாரத்தைச் சுமப்பது கடினமாக இருக்கலாம்.

 இயேசுவாகிய வண்டியில் துன்பங்களாகிய பாரத்தை ஏற்றினால் அவர் தனது இரக்கத்தின் உதவியால் பாரத்தைச் சமப்படுத்தி விடுவார்.

அவரது நுகம் இனிமையாக இருக்கும்.

நாம் நாம் இழுக்க வேண்டியது நுகத்தைத் தான்.

துன்பமாகிய பாரம் ஏற்றப்பட்ட வண்டி பின்னாலே உருண்டு வந்துவிடும்.

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்."

துன்பங்களாகிய சுமையை சுமக்க கஷ்டப்படுகின்றவவர்களே, என்னிடம் வந்து, உங்கள் சுமையை எனக்கு ஒப்புக் கொடுங்கள்.

நான் உங்கள் சுமையை ஏற்றுக் கொண்டு எனது இரக்கத்தால் அதை எளிதாக்குவேன்.

நீங்கள் ஒப்புக்கொடுத்த சுமையை நான் ஏற்றுக் கொள்வதால் உங்களுக்கு இளைப்பாற்றி கிடைக்கும்.

"உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் 'கற்றுக்கொள்ளுங்கள்."

உங்கள் சுமை என்னிடம் வந்தபின், நீங்கள் நுகத்தை. ஏற்றுக் கொண்டு என்னைத்தான் இழுக்க வேண்டும். நான் இனிமையானவன். 
 
 சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன். 

எனது சாந்தமும் மனத்தாழ்ச்சியும்
உங்கள் ஆன்மாவிற்கு இளைப்பாற்றியைக் கொடுக்கும்.

நீங்கள் உங்கள் சுமையை என்னிடம் ஒப்புக் கொடுத்து விட்டு

  என்னைப்போல் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவர்களாக மாறுங்கள்.

"ஆம், என் நுகம் இனிது, என் சுமை எளிது."

உங்கள் சுமையை என் மேல் ஏற்றியபின் அதன் கனம் குறைந்து விடும்.

என் நுகம் உங்கள் கழுத்தை அமுக்கவோ, இறுக்கவோ செய்யாது. மாறாக சுமையை இழுப்பதை எளிதாக்கும்.

நமது சிலுவையைச் சுமந்து அவரைப் பின்பற்ற வேண்டும் என்று இயேசு கூறியிருக்கிறார்.

நமது சிலுவை கனமாக இருந்தால் நாம் இயேசுவிடம் சென்று அதை அவரிடம் ஒப்புக் கொடுத்து விட வேண்டும்.

இயேசுவோடு சேர்ந்து சிலுவையைச் சுமப்பது எளிது.

வாழ்வில் கஷ்டங்கள் வரும்போது இயேசுவை நினைத்துக் கொண்டிருந்தால், நமது கஷ்டங்கள் கஷ்டங்களாகவே தெரியாது.
 
நமக்காக இயேசு சுமந்த சிலுவையை நினைத்துப் பார்த்தால் நமது சிலுவை சிலுவையாகவே தெரியாது.

இயேசுவாகத்தான் தெரியும்.

கஷ்டங்கள் வரும்போது இயேசு பாடுபட்ட சுரூபத்தை கையில் எடுத்து அவரது முகத்தை உற்று நோக்கினால் 

நமது கஷ்டங்கள் அவர் பட்ட கஷ்டங்களுக்கு முன்னால் கஷ்டங்களாகவே தெரியாது.

அவர் சுமந்த சிலுவைக்கு முன் நமது சிலுவை எம்மாத்திரம்?

உலக அனுபவத்தில் நமது மனதிலுள்ள பாரத்தை நம் மேல் உண்மையான அன்பு உள்ளவர்களோடு பகிர்ந்து கொண்டால் 

  நமது பாரம் குறைவதை அனுபவ பூர்வமாக பார்த்திருக்கிறோம்.

ஆன்மீகத்தில் நமது மனதில் உள்ள பாரத்தை நம் மேல் உண்மையான அன்பு உள்ள இயேசுவோடு பகிர்ந்து கொண்டால் மனப் பாரம் குறையும்.

தினமும் நமது சிலுவையைச் சுமப்போம்,

இயேசுவோடு சுமப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment