பயணம் என்றாலே அதற்கு ஒரு துவக்கமும், முடியும் இருக்க வேண்டும்.
தென்காசியிலிருந்து மதுரைக்குப் பயணிப்பதாக வைத்துக் கொள்வோம்.
தென்காசியில் இரயிலில் ஏறுவது துவக்கம். மதுரையில் இறங்குவது முடிவு.
மதுரையில் இறங்குவதற்காகத் தான் தென்காசியில் ஏறுகிறோம்.
இறங்குவதற்காகத்தான் ஏறுகிறோம்.
தென்காசியில் ஏறிய நம்மை மதுரையில் இறக்கி விடாமல் இரயில் போய்க் கொண்டேயிருந்தால் மகிழ்ச்சி அடைவோமா? வருத்தப் படுவோமா?
வருத்தப் படுவது மட்டுமல்ல, இறக்கிவிடும்படி சம்பந்தப்பட்ட அதிகாரியைக் கேட்போம்.
ஆக, முடிவை நோக்கி அல்லாமல் யாரும் பயணத்தை ஆரம்பிக்க மாட்டார்கள்.
படிப்பதற்காகக் கல்லூரியில் சேர்வதே படிப்பை முடித்து வெளியேறுவதற்காகத்தான். முடிவேயில்லாமல் படித்துக் கொண்டேயிருப்பதற்காக அல்ல.
இவ்வுலக வாழ்க்கை ஒரு பயணம்.
பிறப்பு அதன் ஆரம்பம். இறப்பு அதன் முடிவு.
பிறந்து வாழ்வதே இறப்பதற்காகத்தான்.
பிறப்பு இவ்வுலக வாழ்வின் ஆரம்பம்.
இறப்பு மறுவுலக வாழ்வின் ஆரம்பம்.
மறுவுலக வாழ்வு நிலையானது.
மறுவுலக நிலையான வாழ்வை அடைவதற்கே இவ்வுலகில் வாழும் நிலையற்ற வாழ்வு.
மறுவுலக வாழ்வு இவ்வுலக மரணத்தில் ஆரம்பிப்பதால்
நிலை வாழ்வை நோக்கமாகக் கொண்டு வாழ்வோர் அதன் ஆரம்பமாகிய மரணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பர்.
மதுரைக்கு நடந்து பயணிக்க பல நாட்கள் ஆகும்.
இரயிலில் பயணிக்க மூன்று மணி நேரம் தான்.
தென்காசியில் புறப்பட்ட இரயில் இடையில் எங்கும் நிற்காமல் வேகமாக பயணித்து இரண்டே மணி நேரத்தில் மதுரையை அடைந்து விட்டால் மகிழ்வோமா? வருந்துவோமா?
நிச்சயமாக மகிழ்வோம். ஏனெனில் நமது நோக்கம் மதுரைக்குச் செல்வது, பயணித்துக் கொண்டேயிருப்பது அல்ல.
சிலர் நூறு ஆண்டுகள் வாழ்ந்து மரணிக்கின்றனர், அதாவது நிலை வாழ்வை அடைகின்றனர்.
சிலர் எண்பது ஆண்டுகள் வாழ்ந்து நிலை வாழ்வை அடைகின்றனர்.
ஒருவர் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தவுடன் நிலை வாழ்வை அடைய நேரிட்டால் அவர் மகிழ வேண்டுமா? வருந்த வேண்டுமா?
நிலை வாழ்வை நோக்கி அவர் வாழ்ந்தால் கட்டாயம் மகிழ்வார்.
ஏனெனில் வாழ்க்கைப் பயணமே நிலை வாழ்வை அடைவதற்காகத் தான்.
"உடலைக் கொன்றபின் அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சாதீர்கள்."
என்று ஆண்டவர் ஏன் சொல்கிறார்?
வேதபோதக நாடுகளில் கிறிஸ்தவ சமயத்தின் எதிரிகள்
கிறிஸ்தவர்கள் இயேசுவை மறுதலிக்கும்படி உடல் ரீதியான துன்பங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.
நாம் விசுவாசத்தில் உறுதியாக இருந்தால் நமது ஆன்மாவை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
அவர்களால் நமக்குக் கொடுக்க முடிந்த மிகப் பெரிய துன்பம் நம்மைக் கொல்வது.
அவர்கள் நம்மைக் கொன்றால்
நாம் உடனடியாக விண்ணக வாழ்வை அடைந்து விடுவோம்.
அவர்களைப் பார்த்து நாம் பயப்படத் தேவையில்லை.
நம்மை விண்ணகத்திற்கு அனுப்புபவர்களைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும்?
உண்மையில் மகிழ வேண்டும்.
இயேசுவுக்காக வாழ்ந்தவர்கள் அவருக்காகக் கொல்லப் படும்போது மகிழ்ச்சியுடன்தான் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள்.
தங்களைக் கொன்றவர்கள் மனம் திரும்ப கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்திருப்பார்கள்.
நம்மைக் கொல்லும் நமது எதிரிகள் நமது மரணத்திற்குப் பின் நம்மை என்ன செய்ய முடியும்?
நம்மை ஒன்றும் செய்ய முடியாதவர்களை பார்த்து நாம் ஏன் அஞ்ச வேண்டும்?
என்று நம் ஆண்டவர் கேட்கிறார்.
ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.
மரணம் தானாக வந்தாலும் சரி, மற்றவர்களால் வந்தாலும் சரி
நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
ஏனெனில் அதன் வழியாக நாம் நுழையப் போவது கடவுளோடு வாழப்போகும் பேரின்ப நிலை வாழ்வு.
கடவுள் நம்மைப் படைத்தது நிலை வாழ்வுக்காகத்தான்.
தேர்வு எழுதுகிற மாணவன் அதில் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி அடைவான்.
உலகில் வாழும் நாம் நமது மரணத்தின் மூலம் நிலை வாழ்வுக்குள் நுழைந்தால் நாமும் மகிழ்ச்சி அடைவோம்.
பிறந்து துன்பங்கள் நிறைந்த உலகிற்குள் நுழைந்தோம்.
இறந்து பேரின்பம் நிறைந்த நிலை வாழ்வுக்குள் நுழைவோம்.
இறப்பு வரும்போது வரட்டும்,
அது வரும்போது மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment