"ஆம், உங்கள் தலைமயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது. அஞ்சாதீர்கள். ஏனெனில், குருவிகள் பலவற்றிலும் நீங்கள் மேலானவர்கள்." (லூக்.12:6)
விண்ணகத் தந்தையின் பிள்ளைகளாகிய நாம் பாவம் தவிர வேறு எதற்கும் அஞ்ச வேண்டாம்.
தாயின் மடியிலோ, இடுப்பிலோ அமர்ந்திருக்கும் குழந்தை எதற்காவது பயப்படுகிறதா?
உலகத் தாயைப் பொறுத்த மட்டில் அவள் பயத்துக்கு அப்பாற்பட்டவள் அல்ல.
"என் பிள்ளையை எப்படி வளர்த்து ஆளாக்க போகிறேனோ?" என்று பயம் கூட அவளிடம் இருக்கலாம்.
ஆனால் அவள் பிள்ளை அவளோடு இருக்கும்போது எதற்கும் பயப்படாது.
இது குழந்தையின் மன நிலை.
நமது விண்ணகத் தந்தைக்கு நாம் குழந்தைகள்தான்.
அவர் சர்வ வல்லவர்.
சர்வத்தையும் படைத்தவர் அவரே.
அவரால் முடியாதது எதுவும் இல்லை.
பிரபஞ்சத்தில் அவரால் படைக்கப்பட்ட உயிரற்ற பொருட்களையும்,
ஊர்வன, நடப்பன, பறப்பன, போன்ற மிருகங்களையும்
ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வரும் கடவுள்,
முடிவற்ற காலம் தன்னோடு பேரின்பத்தில் வாழ்வதற்கென்றே,
தன் சாயலில் படைத்த மனிதனை
பராமரிக்காமலிருப்பாரா?
நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அவருக்கு தெரியும்.
மிருகங்களை விட நாம் மேலானவர்கள்.
"படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக.'' இது தமிழ் மொழி.
அனைத்து பொருட்களையும் நமக்காகப் படைத்தார்.
நம்மை தனக்காகப் படைத்தார்.
அவருக்காகவே படைத்து, அவருடைய பாதுகாப்பிலேயே நம்மை வைத்திருக்கும் போது
நம்மைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
செடி வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்.
படைத்தவர் பராமரிப்பார்.
ஆகவே, நம்மை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு,
படைத்தவருக்காக வாழ்வதில் மட்டும் கவனத்தை செலுத்துவோம்.
நம்மை முழுவதும் இறைவனது பராமரிப்பில் விட்டுவிட்டு,
நமக்காக அல்லாமல்,
இறைவனுக்காக மட்டும் வாழ்வோம்.
நமது சிந்தனை, சொல்,
செயல் அனைத்தும் இறைவனுக்காகவே இருக்க வேண்டும்.
இறைவனை எப்படி திருப்திப் படுத்துவது என்பது பற்றியே நமது சிந்தனை இருக்க வேண்டும்.
இறைவனை மகிமைப்படுத்துவதற்காகவே நாம் செயல் புரிய வேண்டும்.
நாம் பயன்படுத்தும் கார் நாம் ஓட்டும் இடத்திற்கெல்லாம் செல்கிறது.
இறைவனால் பயன்படுத்தப்படும் நாம் அவர் சொன்னதையெல்லாம் செய்ய வேண்டும்.
நம்மை தனது விருப்பப்படி பயன்படுத்த அவருக்கு முழு உரிமை உண்டு.
புனித பிரான்சிஸ் அசிசியாரை ஏழ்மையை வாழ்ந்து போதிக்கவும்,
ஐந்து காய வேதனையை அனுபவிக்கவும் பயன்படுத்தினார்.
புனித அல்போன்சாளை உடல் நோயால் அவதிப்படவும், அந்த அவதியை தனக்கு ஒப்புக்கொடுக்கவும் பயன்படுத்தினார்.
புனித கல்கத்தா தெரெசாளை தொழு நோயாளிகளுக்கு சேவை செய்ய பயன்படுத்தினார்.
புனித சவேரியாரை உலகெங்கும் பயணம் செய்து நற்செய்தியை அறிவிக்க பயன்படுத்தினார்.
புனித அந்தோனியாரை புதுமைகள் செய்து தன்னை மகிமைப் படுத்த பயன்படுத்தினார்.
செருப்பைக் காலில் போடவும், தொப்பியைத் தலையில் வைக்கவும் பயன்படுத்துகிறோம்.
"எனக்குத் தலை வேண்டும்" என்று செருப்பு கேட்டால் கொடுப்போமா?
நாம் என்ன செய்ய வேண்டும் என்று இறைவனுக்குத் தெரியும்.
அதன்படிதான் நாம் செயல்புரிய வேண்டும், நமது விருப்பப்படி அல்ல.
இறைவன் விருப்பமே நமது விருப்பமாக இருக்க வேண்டும்.
குருவிகளுக்கு கால்கள் இருக்கின்றன.
ஆனாலும் அவை பறந்தே பயணிக்கின்றன.
எனெனில் அதுவே அவற்றைப் படைத்தவரின் விருப்பம்.
நாம் குருவிகளை விட எவ்வளவோ மேலானவர்கள்.
நாமும் விண்ணகத் தந்தையின் விருப்பப் படியே செயல் புரிவோம்.
"உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!"
என்று விண்ணகத் தந்தையை நோக்கி செபிக்க நம் ஆண்டவர் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற வேண்டியவர்கள் நாம்தான்.
இதுதான் இயேசுவின் விருப்பம்.
இயேசு விரும்புகிறபடி வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment