Thursday, October 20, 2022

கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார்." (ஆதி. 1:27)



"கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார்." (ஆதி. 1:27)

"தாத்தா, இப்போது நான் உங்களிடம் கேட்கப் போகும் கேள்வி மிகவும் முக்கியமானது."

", ஏன் முக்கியமானது."

"ஏனென்றால் இது கடவுளையும், அவரால் அவரது சாயலில் படைக்கப் பட்ட மனிதனையும் பற்றியது.''

", சரி, கேள்."

"கடவுள் மனிதனைப் படைக்கு முன்,

"நமது சாயலாகவும் பாவனையாகவும் மனிதனைப் படைப்போமாக: 

அவன் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், மிருகங்களையும், பூமி முழுவதையும், பூமியின் மீது அசைவன ஊர்வன யாவற்றையும் ஆளக்கடவன்" என்றார்.

சாயலைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் அசலைப் (original) பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் எப்படி இருப்பார் என்று ஆதியாகமத்தில் முதல் அதிகாரத்தில் குறிப்பிடப் படவில்லை.

இறைமகன் மனிதனாகப் பிறந்த பின்புதான் பரிசுத்த தமதிரித்துவத்தைப் பற்றிய இரகசியம் இயேசுவால் வெளிப்படுத்தப் பட்டது. (Revealed)

மனிதன் எவ்வாறு கடவுளின் சாயலில்,

 அதாவது, பரிசுத்த தமதிரித்துவத்தின்  சாயலில் படைக்கப்பட்டான் 

என்பதைக் கொஞ்சம் விளக்குகிறீர்களா?"

", அருளப்பர் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் முதல் வசனத்தை வாசி."

"ஆதியிலே வார்த்தை இருந்தார்:

 அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், 

அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்."

", இதில் வார்த்தை (Word)  என்று குறிப்பிடப்படுபவர் யார்?"

"இயேசு."

", கடவுள் என்று குறிப்பிடப்படுபவர் ?"

"தந்தையும், (அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார்,)   

 மகனும். (அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.)"

", ஆக தந்தையும் கடவுள், மகனும் கடவுள்.

மகன் கடவுளோடு, கடவுளாக இருக்கிறார். ஆக, தந்தையும் மகனும் ஒரே கடவுள்."

"தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களும் ஒருவருள் ஒருவர் ஒரே கடவுளாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்.

மூவரும் ஒருவர் என்ற பரிசுத்த தமதிரித்துவத்தின் சாயலில் மனிதன் எப்படிப் படைக்கப் பட்டான் என்பதை மட்டும் சொல்லுங்கள்."

", பேரப்புள்ள, டிக்கட் எடுத்தவுடன் ஊருக்குப் போய் விட முடியாது.

பயணம் செய்ய வேண்டும்.

பயணம் முடியுமுன்னே ஊரைக் காட்டுங்கள் என்று சொல்லக் கூடாது."

"சரி, பயணம் செய்வோம்."

", மகனை எந்த வார்த்தையால் அருளப்பர் குறிப்பிடுகிறார்?"

"வார்த்தை."

", தெரிந்ததிலிருந்து தெரியாததுக்குப் பயணிப்போம்.

 வார்த்தை எங்கே பிறக்கிறது?"

"சிந்தனையில்."

", மகன் வார்த்தை என்றால் தந்தை யார்?"

"சிந்தனை"

",சிந்தனையிலிருந்தும், வார்த்தையிலிருந்தும் புறப்படுவது எது?"

"செயல்."

", இப்போ கவனி.

செயல் தூய ஆவி

தந்தை சிந்திக்கிறார்.
மகன் பிறக்கிறார்.
தூய ஆவி செயல்புரிகிறார்.

மீட்பின் வரலாற்றில் பரிசுத்த தம திரித்துவம் எவ்வாறு செயல்படுகிறது என்று கூறு பார்ப்போம்."

"தந்தையிடமிருக்கும் வார்த்தை நம்மை மீட்பதற்காக மனுவுருவானார்.
  
தனது மீட்புப் பணியை தூய ஆவியின் மூலம் செயல் படுத்திக் கொண்டிருக்கிறார்.

தந்தை படைத்தார்.
மகன் மீட்டார்.
தூய ஆவி ஒவ்வொரு ஆன்மாவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
மூவரும் ஒரே கடவுள்

ஆகவே இப்படியும் சொல்லலாம்.

கடவுள் படைத்தார்.
கடவுள் மீட்டார்.
கடவுள் ஒவ்வொரு ஆன்மாவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மனித உரு எடுத்தது மகன் மட்டுமே."

",பரிசுத்த தம திருத்துவத்தைப் பற்றிய இந்த உண்மையிலிருந்து உனது கேள்விக்குரிய பதிலைக் கண்டுபிடி பார்ப்போம்."

"மூன்று ஆட்கள் ஒரே  கடவுள்.

மூன்று தத்துவங்கள் ஒரு மனிதன்.

மனிதன் சிந்திக்கிறான்.

சிந்தனையிலிருந்து பிறப்பது வார்த்தை.

வார்த்தைதான் சிந்தனையை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறது.

சிந்தனையிலிருந்தும், வார்த்தையிலிருந்தும் (சொல்லிலிருந்தும்) வருவது தான் செயல்.

சிந்தனையும், சொல்லும், செயலும் ஒன்றுபோல் இருந்தால்தான் உண்மையான மனிதன்.

உண்மையான மனிதன் நினைப்பதைச்  சொல்வான்.

சொல்வதைச் செய்வான்.

உள்ளொன்றை நினைத்து, புறமொன்றைப் பேசி, இன்னொன்றைச் செய்பவன் உண்மையான மனிதன் அல்ல. 

நமது சிந்தனை தந்தையின் சாயல்.
சொல் மகனின் சாயல்.
செயல்  தூய ஆவியின் சாயல்.


தந்தை, மகன், தூய ஆகிய மூவருக்கும் ஒரே ஞானம், ஒரே வல்லமை, ஒரே தேவ சுபாவம் இருப்பதால் மூவரும் ஒரே கடவுள்.

மனிதனை கடவுள் தன் சாயலில் படைத்ததன் காரணமே மனிதனின் சிந்தனையில் தான் எந்நாளும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

கடவுளின் சாயலை மனிதன் உணர்ந்து அதை எப்போதும் தன்னில் காப்பாற்ற வேண்டும் என்று ஆசைப் பட்டால்

அவனது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் கடவுள் மட்டுமே இருக்க வேண்டும்.

அதாவது கடவுளையே எப்போதும், நினைக்க வேண்டும்,  அவரைப் பற்றி மட்டும் பேச வேண்டும், அவரது மகிமைக்காகவே செயல் புரிய வேண்டும்.

அதாவது கடவுளுக்காகவே வாழ வேண்டும்.

கடவுளுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவன் மட்டுமே கடவுளின் சாயலில் வாழ்கிறான்.

உலகுக்காக மட்டும் வாழ்பவன் கடவுள் கொடுத்த சாயலை இழந்து  விடுகிறான்.

சரியா, தாத்தா?"

"Super சரி. சிந்தனையிலும்,  சொல்விலும், செயலிலும் கடவுளுக்காக வாழ்கிறோமா  என்பதை சிந்தித்துப் பார்ப்போம்."

 லூர்து செல்வம்.

No comments:

Post a Comment