(லூக்17:17)
இயேசு பத்து தொழு நோயாளிகளைக் குணமாக்கினார்.
அவர்களுள் ஒருவன் மட்டும்
தான் குணமடைந்ததால் உரத்த குரலில் கடவுளை மகிமைப் படுத்தியதோடு ,
இயேசுவிடம் வந்து,
அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றிசெலுத்தினான்.
இயேசு அவனைப் பார்த்து,
"பத்துப்பேரும் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?"
என்று கேட்டார்.
அவரது இந்த கேள்வியைப் பற்றி தியானிக்கும்போது
இரண்டு விதமான எண்ண ஓட்டங்கள் மனதில் ஓடின..
முதலாவது, குணமான பத்து பேரில் ஒன்பது பேருக்கு பெற்ற உதவிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை.
இன்று கூட, உலகில் வாழ்கிற மக்களில் அநேகருக்கு தங்களை ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்து
ஒவ்வொரு விநாடியும் பராமரித்து வரும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று தோன்றவேயில்லை.
தங்களால் எல்லாம் செய்ய முடியாது என்று அவர்களுக்கு தெரியும்.
ஆனாலும் எல்லாவற்றையும் தாங்களாகவே சாதித்து விட்டதாக எண்ணி பெருமை பட்டுக் கொள்கிறார்கள்.
கடவுளைப் பற்றி நினைப்பதே இல்லை.
அநேகர் தாங்கள் சாதிக்க வேண்டிய காரியங்களுக்காக இறைவனை வேண்டுகிறார்கள்.
இறைவன் அருளால் சாதித்த பின் அருளைத் தந்த இறைவனுக்கு நன்றி கூற மறந்து விடுகிறார்கள்.
சிலர் நன்றி கூற மறப்பதில்லை. ஆனால் நன்றியாக கோவிலில் காணிக்கை போட்டு விட்டு. தங்கள் கடமை முடிந்து விட்டதாக எண்ணுகிறார்கள்.
காணிக்கை செலுத்துவது நல்லதுதான்.
ஆனால் கடவுள் எதிர்பார்ப்பது வாழ்க்கை வடிவிலான காணிக்கையை.
நமது வாழ்க்கையால் நன்றி கூற வேண்டும்.
நமது பிறரன்பு செயல்கள் நிறைந்த வாழ்க்கை மூலம் நன்றி கூற வேண்டும்.
நமது பொருளாதார நிலையை மேன்மைப் படுத்தும்படி வேண்டுகிறோம்.
வேண்டும் போதே நமது ஆன்மீக வாழ்வை மையப்படுத்தி வேண்ட வேண்டும்.
அம்மன்றாட்டு கேட்கப் பட்ட பின், கிடைத்த பொருளை பிறரன்புக் காரியங்களுக்காகச் செலவிட்டு, இறைவனது அருளை ஈட்ட வேண்டும்.
இறைவன் பெயரால் ஏழைகளுக்கு உதவுவதின் மூலம் நாம் விண்ணகத்தில் அருள் செல்வந்தவர்களாக மாறுவோம்.
அன்னை மரியாள் உலகில் மிகப்பெரிய ஏழை. ஆனால் ஆன்மீக ரீதியில் அருள் நிறைந்தவள்.
அவள்தான் மக்களில் மிகப் பெரிய அருட்செல்வி.
நமது பிள்ளைகளுக்கு அருட்செல்வி என்று அன்னையின் பெயரை வைத்தால் மட்டும் போதாது,
அருள் செல்வத்தால் அவர்களை வளர்க்க வேண்டும்.
அன்னை மரியாள் தன்னை இறைவனின் தாயாக்கிய தன் மகனுக்கு தனது வாழ்க்கையால்தான் நன்றி கூறினாள்.
தங்களைத் தாங்களே தாழ்த்துபவர்கள் விண்ணகத்தில் உயர்த்தப்படுவார்கள் என்று ஆண்டவர் கூறினார்.
அன்னை மரியாள் தன்னை
" இதோ ஆண்டவரின் அடிமை." என்றாள்.
இயேசு அவளை விண்ணக அரசியாக்கினார்.
"பத்துப்பேரும் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?"
என்ற இறைவாக்கு ஏற்படுத்திய முதல் எண்ண ஓட்டம் இது.
இரண்டாவது எண்ண ஓட்டம்:
இந்த கேள்வியை ஆண்டவர் யாரிடம் கேட்டார்?
கிடைத்த உதவிக்கு நன்றி சொல்ல வந்தவரிடம் கேட்டார்.
நாம் இறைவன் மூலம் பெற்ற உதவிக்கு நன்றி சொல்ல அவரிடம் செல்லும்போது,
இதே மாதிரியான கேள்வியை நம்மிடமும் கேட்பார் என்று தோன்றுகிறது.
அதன் அடிப்படையில்தான் நமது தியானம்.
இறைவனிடமிருந்து பெற்ற உதவிகளுக்கு நன்றி சொல்ல வேண்டியது நாம் மட்டுமல்ல,
நம்மை சுற்றி வாழும் மற்ற மக்களும்தான்.
நன்றி சொல்ல வந்த குணமடைந்த நோயாளி பத்து பேரில் ஒருவன்.
அவனிடம் ஆண்டவர்
"மற்ற ஒன்பது பேரை எங்கே"
என்று கேட்டார்.
நாம் பத்து பேரில் ஒருவனாக இருக்கலாம்,
அல்லது,
ஆயிரம் பேரில் ஒருவனாக இருக்கலாம்.
எண்ணிக்கை முக்கியமல்ல.
நம்மை சுற்றி வாழ்பவர்களில் நாம் ஒருவன்.
நாம் பெற்ற நன்மைக்கு நன்றி கூற ஆண்டவரிடம் போகிறோம்.
ஆண்டவர் நம்மிடம் கேட்கிறார்:
",நீ மட்டும் வந்திருக்கிறாயே, நன்மை பெற்ற மற்றவர்களை எங்கே?"
"நான் வந்திருக்கிறேன். மற்றவர்களைப் பற்றி தெரியவில்லை, ஆண்டவரே."
",நீ சொல்வது உண்மை, ஆனால் சரியில்லை."
"ஆண்டவரே, புரியவில்லை."
",மற்றவர்களைப் பற்றி உனக்குத் தெரியவில்லை என்பது உண்மை.
ஆனால் தெரியாதிருப்பது சரியில்லை.
நான் உனக்கு என்ன கட்டளைகள் கொடுத்திருக்கிறேன்?"
"எல்லாவற்றுக்கும் மேலாக உம்மை நேசிக்க வேண்டும். என்னை நான் நேசிப்பது போல எனது அயலானையும் நேசிக்க வேண்டும்."
",என்னை நீ நேசிக்கிறாயா?"
'நேசிக்கிறேன், ஆண்டவரே."
",உனது அயலானை நேசிக்கிறாயா?"
''நேசிக்கிறேன், ஆண்டவரே."
",அப்படியானால் நீ என்னை நேசிப்பது போல உனது அயலானும் என்னை நேசிக்க வேண்டும் என்று நீ விரும்ப வேண்டும் அல்லவா."
"ஆம், ஆண்டவரே."
'',நீ நன்றி கூற வந்திருப்பது போல் உனது அயலானும் வரவேண்டும் என்று நீ விரும்ப வேண்டும் அல்லவா."
"ஆம், ஆண்டவரே."
",உண்மையிலேயே நீ விரும்பினால் அவர்களையும் அழைத்து வந்திருப்பாய் அல்லவா."
"மன்னிக்க வேண்டும், ஆண்டவரே. நான் செய்தது தவறுதான்.
நான் மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தது உண்மைதான். ஆனால் அவர்கள் அதை அனுசரிக்கிறார்களா என்பதை கவனிக்கத் தவறிவிட்டேன்.
இனி மற்றவர்களும் நற்செய்தியை அனுசரித்து மற்றவர்களும் மீட்பு பெற நான் முயற்சி செய்வேன்."
",மற்றவர்கள் முன் நீ அவர்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீயே வாழ்ந்து முன்மாதிரி காட்ட வேண்டும்.
ஆசிரியர் வகுப்பிற்கு சரியான நேரத்தில் வந்தால்தான் மாணவர்களும் சரியான நேரத்தில் வருவார்கள்."
"ஏற்றுக்கொள்கிறேன், ஆண்டவரே.
இனி நானும் வாழ்ந்து, மற்றவர்களையும் வாழ வைப்பேன்.".
",நீ விண்ணகப் பாதையில் தனியாக நடக்கக்கூடாது.
உன்னைச் சுற்றி வாழ்பவர்களோடு நடக்க வேண்டும்."
"ஆகட்டும், ஆண்டவரே."
நாம் விண்ணக பாதையில் நடப்போம்.
நம்முடன் எத்தனை பேரை அழைத்துச் செல்ல முடியுமோ அத்தனை பேரை நம்மோடு அழைத்துச் செல்வோம்.
அனைவரும் விண்ணகம் செல்ல அனைவரும் ஆசிக்க வேண்டும், அதற்காக முயற்சிக்க வேண்டும் என்பதுதான் நம் அனைவரையும் படைத்த கடவுளின் ஆசை.
கடவுளின் ஆசையை நிறைவேற்ற வேண்டியது தான் நமது கடமை.
நமது கடமையை செய்வோம்.
பங்குச் சாமியாரைப் பாருங்கள்.
தன்னோடு தனது பங்கு மக்கள் அனைவரும் விண்ணகத்திற்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
நாமும் இறைவன் உதவியோடு அவரைப் பின்பற்றுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment