Wednesday, October 5, 2022

"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: தேடுங்கள், கண்டடைவீர்கள்: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்."(லூக்.11:9)

"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: தேடுங்கள், கண்டடைவீர்கள்: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்."
(லூக்.11:9)

ஒரு நாள் ஆங்கில வகுப்பில் Active voice, Passive voice பற்றி பாடம் நடத்திவிட்டு, யாருக்காவது, ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் என்று சொன்னேன்.

ஒரு பையன் எழுந்து நின்று, 

"சார், ஒரு எண்ணை ஒரு பின்னத்தால் வகுக்க, அதை மாற்றிப் போட்டு பெருக்கு என்று சொல்லுகிறார்களே, ஏன் சார்?" என்று கேட்டான்.

"இது என்ன பாடத்தில் உள்ள சந்தேகம்?"

"கணக்குப் பாடம், சார்."

"நான் என்ன பாடம் நடத்தினேன்?"

"English Grammar."

" English Grammar வகுப்பில் அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மட்டுமே கேட்க வேண்டும்.

கணக்குப் பாடத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கணக்குப் பாட நேரத்தில் கேட்க வேண்டும். புரிகிறதா?"

"புரிகிறது, சார்.''

நம்மில் அநேகர் இந்த பையனைப் போல் தான் நடந்து கொள்கிறோம்.

கடவுள் உலகத்தையும் அதில் உள்ள அனைத்து பொருட்களையும் படைத்து நம்மிடம் ஒப்படைத்திருந்தாலும்,

அவர் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஆன்மீக வாழ்க்கையையே.

உலகப் பொருள்களை நமது ஆன்மீக வாழ்வுக்காகத்தான் பயன்படுத்த வேண்டும்.

பாவம் ஆன்மீக வாழ்வின் எதிரி.

இயேசு மனிதனாகப் பிறந்தது பாவத்திலிருந்து நம்மை மீட்பதற்காகத்தான்.

அதாவது ஆன்மீக மீட்புக்காகத்தான்.

அவர் போதித்த நற்செய்தி ஆன்மீக வாழ்வைச் சார்ந்தது.

ஆன்மீகம் பற்றி போதித்துக் கொண்டிருப்பவர்,

" கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்."

என்று சொன்னால் நாம் எதைக் கேட்க வேண்டும்?

ஆன்மீகம் சார்ந்த உதவிகளை கேட்க வேண்டும்.

",இயேசுவே, எனது பாவங்களுக்கு மன்னிப்பு கொடுங்கள்."

என்று நாம் கேட்டால் நிச்சயமாக மன்னிப்பு கொடுக்கப்படும்.

ஏனெனில் 
நமது பாவங்களிலிருந்து நம்மை மீட்பதற்காகத்தான் 

அவர் மனிதனாக பிறந்து,

 நற்செய்தி அறிவித்து, 

பாடுகள் பட்டு, 
சிலுவையில் தன்னையே பலியாக்கினார். 

பாவங்களிலிருந்து பாவமன்னிப்பு மூலம் மீட்பு பெற்ற பின்,

புண்ணியங்கள் நிறைந்த ஆன்மீக வாழ்வு வாழ வேண்டும்.

ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான உதவிகளைக் கடவுளிடம்  கேட்க வேண்டும்.

கட்டாயம் கிடைக்கும்.

ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான உதவிகளைக் கேட்கும்போது, இயேசு எதைத் தந்தாலும் அது நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவியாகவே இருக்கும்.

கஷ்டங்களைத் தந்தாலும் அது இயேசுவோடு நாமும் சிலுவையை சுமப்பதற்காகத்தான்.

சிலுவையில் மூலம் கிடைக்கும் ஆன்மிக பலன்கள் கஷ்டங்கள் மூலம் கிடைக்கும்.

சிலுவையைச் சுமப்பதினால் இவ்வுலகில் நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்கிறோம்,

மறுவுலகில் நமது பேரின்பத்தின் அளவை அதிகரிக்கிறோம்.

விண்ணுலக பேரின்பத்தை அதிகமான அளவு அனுபவித்து கொண்டிருக்கும் புனிதர்கள் எல்லோரும் இவ்வுலகில் துன்பங்கள் வடிவில் சிலுவையைச் சுமந்தவர்கள் தான்.

இயேசுவின் அன்னை மரியாள் கூட வாழ்நாள் முழுவதும் வியாகுலங்கள் வடிவில் சிலுவையைச் சுமந்தவள்தான்.

அவரை வளர்த்த சூசையப்பருக்கு அவர் கடவுள் என்பது தெரியும்.

"குழந்தையை எடுத்துக் கொண்டு எகிப்துக்குப் போங்கள்." என்று
சம்மனசு சொன்னபோது,

"நாம் நாடோடிகளாய் அலைய வேண்டாம்." என்று குழந்தை இயேசுவிடம் அவர் கேட்கவில்லை.

சொன்னதைச் செய்தார்.

சூசையப்பர் இறந்தது வாத நோயினால்தான். இயேசுவின் மடியில் தலையை வைத்துதான் இறந்தார்.

தன்னை குணமாக்கும்படி அவர் இயேசுவிடம் கேட்கவில்லை

அன்னை மரியாள் கூட, "உங்கள் வளர்ப்புத் தந்தையை குணமாக்குங்கள்." என்று மகனிடம் கேட்கவில்லை

கடவுள் சித்தத்தை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள்.

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்."

என்று இயேசு வேண்டியது கூட
துன்பகலத்திலிருந்து தப்பிப்பதற்காக அல்ல.

அதற்காக தந்தையிடம் செபித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஏனெனில் தந்தையும், அவரும் ஒரே கடவுள்தான்.
 
பாவம் தவிர மற்ற எல்லா மனித பலகீனங்களை அவர் நமக்காக ஏற்றுக் கொண்டதாலும், நமக்கு ஒரு பாடம் கற்பிக்கவும் அவ்வாறு செபித்தார். 

"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்பதுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: தேடுங்கள், கண்டடைவீர்கள்: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்

அவர் கேட்கச் சொன்னது ஆன்மீக வாழ்க்கைக்கான உதவிகளை.

தேட .சொன்னது இறைவனை.

தட்டச் சொன்னது இறைவனின் இதயத்தை.

சைக்கிளில் போவதற்காக பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லை,

பள்ளிக்கூடத்தில் படிப்பதற்காகத் தான் சைக்கிளில் போகிறோம்.

பஸ்ஸில் ஏறுவதற்காக குற்றாலம் போகவில்லை, 

 குற்றாலம் போவதற்காகத்தான் பஸ்ஸில் ஏறுகிறோம்.

கிறிஸ்தவனாக வாழ்வது இவ்வுலகப் பொருட்களைப்
 பயன்படுத்துவதற்காக அல்ல.

இவ்வுலகப் பொருட்களைப் பயன்படுத்துவது கிறிஸ்தவனாக வாழ்வதற்காகத்தான்.

இந்த உண்மையை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால்

 எதைக் கேட்டாலும் ஆன்மீக வளர்ச்சிக்காகத்தான் கேட்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment