Sunday, October 30, 2022

"ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தம்போன்றவர்களிடத்தில் மிக்க விவேகமுள்ளவர்களாய் இருக்கின்றனர்." (லூக்.16:8)

"ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தம்போன்றவர்களிடத்தில் மிக்க விவேகமுள்ளவர்களாய் இருக்கின்றனர்."
(லூக்.16:8)

பணி நீக்கம் செய்யப் பட்ட கண்காணிப்பாளன் தனது பிழைப்புக்கு வழி செய்யும் வகையில் 

முதலாளியிடம் கடன் வாங்கியவர்களின் கடன் கணக்கை மாற்றி எழுத வைக்கிறான்.

ஆன்மீகப் பார்வையில் அவன் செய்தது தவறு.

ஆனால் உலகப் பார்வையில் அவன் விவேகமானவன்.

இரண்டும் எதிர் எதிர் பார்வைகள்.

உலகப் பார்வையில் இலஞ்சம்u வாங்குபவன் பிழைக்கத் தெரிந்தவன். வாங்காதவன் பிழைக்கத் தெரியாதவன்.

ஆன்மீகப் பார்வையில் இலஞ்சம் வாங்குவது பாவம், வாங்காதது புண்ணியம்.

உலகின் மக்கள் உலக ரீதியில் விவேகிகளாய் இருக்கிறார்கள்.

ஆனால் ஒளியின் மக்களுக்கு, ஆன்மீக ரீதியில் விவேவிகளாக இருக்கத் தெரியவில்லை.

உலகில் நமது ஆன்மாவைத் தவிர நமது உடல் உட்பட மற்ற எல்லாம் அழியக்கூடிய லௌகீகப் பொருட்கள் தான்.

லௌகீகச் செல்வத்தை இயேசு அநீத செல்வம் என்கிறார்.

ஏனெனில் அது நாம் செய்யும் அநேக பாவங்களுக்குக் காரணமாகவும், உதவியாகவும் இருக்கிறது.

பணம் நம்மிடம் இருப்பதால்தானே இலஞ்சம் கொடுக்கிறோம்.

பண ஆசையால்தானே திருடுகிறோம்.

 "அநீத செல்வத்தைக் கொண்டு

நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள். 

அது உங்களைக் கைவிடும்பொழுது, 

இவர்கள் உங்களை முடிவில்லாக் கூடாரங்களில் ஏற்றுக்கொள்வார்கள்."
என்று ஆண்டவர் சொல்கிறார்.

அந்த  செல்வம் நம்மைக் கைவிடும்.

 ஆனால் நாம்  சம்பாதித்த நண்பர்கள் நம்மைக் கைவிட மாட்டார்கள்.

அவர் நண்பர்கள் என்று சொல்வது உலகைச் சார்ந்த நண்பர்களை அல்ல.

முடிவில்லாக் கூடாரங்களில், அதாவது, மோட்சத்தில் வாழும் நண்பர்களை.

மோட்சத்தில் வாழும் அனைவரும் நமது நண்பர்கள்தான்.

நாம் புண்ணியம் செய்யும்போது மோட்சத்தில் வாழும் அனைத்து புண்ணியவான்களும் நமது நண்பர்கள் ஆகி விடுகிறார்கள்.

அநீத செல்வத்தைக்கொண்டு எப்படி புண்ணியம் செய்வது?

அநீத செல்வத்தை இலஞ்சமாகக் கொடுக்கும் போது நாம் பாவம். செய்கிறோம்.

அதே செல்வத்தை ஏழைகளுக்குக் கொடுத்து உதவும்போது நாம் புண்ணியம் செய்கிறோம்.

செல்வத்தைப் பிறரன்பு பணிகளுக்காகப் பயன் படுத்தும் போது நாம் இறைவனோடும், மோட்ச வாசிகளோடும் உறவில் நெருக்கம் ஆகிறோம்.

நமது உலக செல்வத்தை பிறரன்புப் பணிகளுக்காகச் செலவு செய்யும்போது

புனித அந்தோனியார் மோட்சத்தில் வாழும் நமது நண்பர், .

ஒரு வேலை கிடைக்க உதவ வேண்டும் என்று அந்தோனியாரிடம் வேண்டி விட்டு,

நமது செல்வத்தை இலஞ்சமாகக் கொடுத்து வேலை வாங்கிவிட்டு,

வேலை கிடைத்ததற்கு அந்தோனியாருக்கு நன்றி சொல்ல உவரிக்குச் சென்றால்,

அது அவரைக் கேலி செய்வதற்குச் சமம்.

"அந்தோனியாரே, மூன்று இலட்சம் லஞ்சம் கொடுத்து ஒரு வேலை வாங்கியிருக்கிறேன், உமக்கு நன்றி" என்று சொன்னால்,

''உனது பாவத்திற்கு நான் துணை நிற்கவில்லை. எனக்கு எதற்கு நன்றி?

நீ நன்றி சொல்ல வேண்டிய ஆள் யாரும் மோட்சத்தில் இல்லை.

இலஞ்சம் கொடுக்க உன்னைத் தூண்டியவன் சாத்தான்.

பாவத்திற்கு நன்றி சொல்ல பரலோக வாசிகளைத் தேடி வராதே" என்பார்.

நம்முடைய செல்வத்தை ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு,

"அந்தோனியாரே, எனக்காக வேண்டிக் கொள்ளும்." என்று செபிக்க வேண்டும்.

நமது செபம் கேட்கப்படும்.

விண்ணகப் பாதையில் நடக்க விரும்புகிறவர்கள் தங்கள் செல்வத்தை அயலானுக்கு உதவ பயன் படுத்த வேண்டும்.

வெற்றிகரமாக நடக்க விண்ணக நண்பர்கள் உதவுவார்கள்.

நாம் ஒளியின் மக்கள்

விவேகமாக செயல்படுவோம்.

உலக செல்வங்களைக் கொண்டு விண்ணகத்தில் நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்வோம்.

நாம் அங்கேதான் நாம் சம்பாதித்த நண்பர்களுடன் இறைவனோடு நிலை வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment