Tuesday, September 20, 2022

"நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போ. கடவுள் உனக்குச் செய்ததெல்லாம் தெரியப்படுத்து" (லூக்.8:39)

"நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போ. கடவுள் உனக்குச் செய்ததெல்லாம் தெரியப்படுத்து" 
(லூக்.8:39)

இயேசு நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார்,

எல்லோருக்கும் ஒரே பணிதான்,

நற்செய்தியை வாழ்ந்து, மற்றவர்களுக்கு அறிவித்தல்,

ஆனால் வெவ்வேறு வகையில்,

இயேசு ஏராளமான பேய்கள் குடியிருந்த ஒருவனிடமிருந்து 
பேய்களை எல்லாம் வெளியேற்றி அவனைக் குணப்படுத்தினார்.

வெளியேற்றப்பட்ட பேய்கள் இயேசுவின் அனுமதியுடன்

அங்கே மலையில் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்த பன்றிகளுக்குள் நுழைந்தன.

அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து மூழ்கிப்போயிற்று.

பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஊருக்குள் சென்று மக்களிடம் அறிவித்தனர்.

ஊர் மக்கள் வந்து, குணமான ஆளையும், குணமாக்கிய இயேசுவையும் கண்டனர்.

அச்சம் அவர்களை ஆட்கொண்டது.

இயேசுவுக்கு நன்றி சொல்வதற்குப் பதில் தங்களை விட்டகலும்படி அவரைக் கேட்டனர்.

பேய்கள் நீங்கியவன் "நானும் உம்மோடு வரவிடும்" என்று மன்றாடினான்.

 இயேசுவோ, "நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போ. கடவுள் உனக்குச் செய்ததெல்லாம் தெரியப்படுத்து" என்று கூறி அவனை அனுப்பிவிட்டார். 

அவன் நகரெங்கும் சென்று இயேசு தனக்குச் செய்ததெல்லாம் அறிவிக்கலானான்.

அவருடைய சீடர்கள் அவருடைய அழைப்பை ஏற்றுதான் அவர் சென்ற இடமெல்லாம் அவருடன் சென்றார்கள்.

ஆனால் பேய்களிடமிருந்து விடுவிக்கப் பட்டவன்,

நானும் உம்மோடு வருகிறேன் என்று கூறியபோது,

"நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போ. கடவுள் உனக்குச் செய்ததெல்லாம் தெரியப்படுத்து" என்று கூறினார்.

சீடர்களை அழைத்த இயேசு, "உம்மோடு வருகிறேன்" என்று சொன்னவனை ஏன் வீட்டுக்குத் திரும்பிப்போகச் சொன்னார்?

நமது மொழியில் 'வா' என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் 'போ.''

ஆனால் இயேசு இரண்டு சொற்களையும் அவர்களை அழைக்கவே பயன்படுத்தினார்

எதற்கு அழைக்க?

நற்செய்தியை அறிவிக்க அழைக்க.

அழைப்பு சொல்லில் இல்லை. பணியில் இருக்கிறது.

'வா' என்று அழைக்கப்பட்டவர்கள் 
அப்போஸ்தலரகள்.

அப்போஸ்தலரகள் என்ற வார்த்தைக்கு அனுப்பப்பட்டவர்கள் என்பது பொருள்.

அவர்களுக்கு பெரிய வியாழனன்று குருப் பட்டம் கொடுத்து,

பாவங்களை மன்னிக்கவும், திருப்பலி நிறைவேற்றவும்,
நற்செய்தியை அறிவிக்கவும் 

உலகெங்கும் அனுப்பினார்.

குணம் பெற்றவனை, "நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போ. கடவுள் உனக்குச் செய்ததெல்லாம் தெரியப்படுத்து" 

என்ற வார்த்தைகளுடன் அனுப்பியது போல,

குருத்துவ அந்தஸ்து கொடுக்கப் படாதவர்களையும்

நற்செய்தியை அறிவிக்க அனுப்பினார், இன்றும் அனுப்புகிறார்.

நற்செய்தி அறிவிப்பதோடு, பாவங்களை மன்னிக்கவும், திருப்பலி நிறைவேற்றவும்

குருக்களை அனுப்புவது போலவே.

நற்செய்தியை அறிவிக்க மட்டும்  பொது நிலையினரையும் அனுப்புகிறார்.

ஆக கிறிஸ்தவர்கள் அனைவருக்கும்,
(குருக்கள் + பொது நிலையினர்)
தேவ அழைத்தல் இருக்கிறது.

அதாவது எல்லோருமே இயேசுவால் அனுப்பப் பட்டிருக்கிறோம்.

இப்பொழுது கேட்கலாம்:

குருக்கள் தத்துவசாஸ்திரம், தேவசாஸ்திரம், விவிலியம் போன்றவற்றை ஆழமாகப் படித்து, பயிற்சி கொடுக்கப்பட்டு அனுப்பப் படுகிறார்கள்.

அவர்கள் கொடுக்கப் பட்ட பணியைச் சிறப்பாகச் செய்கிறார்கள்.

பொது நிலையினராகிய நாம் எந்த படிப்பும் படிக்காமல், எந்த பயிற்சியும் பெறாமல்

வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும்போதே அனுப்பப் பட்டால்

நம்மால் என்ன செய்ய முடியும்?

நாம் தனியாகப் போராடவில்லை.

போராட்டத்தின்போது கடவுள் நம்மோடு இருக்கிறார்.

குருக்களோடு இருந்து அவர்களை வழிநடத்தும் அதே கடவுள்தான் நம்மோடும் இருந்து, நம்மை வழிநடத்துகிறார்.

"கடவுள் உனக்குச் செய்ததெல்லாம் தெரியப்படுத்து" என்று குணமான ஆளுக்குச் சொன்ன அதே வார்த்தைகளை நமக்கும் சொல்கிறார்.

"நான் உன்னோடிருந்து உன்னை வழி நடத்திக் கொண்டிருப்பதை உன் அயலானிடம் சொல்.

அதற்கு சாஸ்திரங்கள் எதுவும் படிக்க வேண்டியதில்லை.

நான் காட்டும் வழியில் நீ நடந்தாலே போதும்.

நீ நடப்பதைப் பார்க்கும். உன் அயலான் உன்னில் என்னைக் காண்பான்.

அதாவது  நீ என்னை அவனுக்கு அறிமுகப்படுத்துவாய்.

என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான் நீ வாழ்ந்து போதிக்கும் நற்செய்தி.

நீ தனியாக வாழவில்லை. என்னோடுதான் வாழ்கிறாய்.

உன்னைப் பார்ப்பவர்கள் என்னைப் பார்க்காதிருப்பார்களா?

நல்ல கிறிஸ்தவ வாழ்க்கை மூலம் என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த உன்னை நான் அழைக்கிறேன்."

இயேசுவின் அழைப்பின்படி வாழும் பொது நிலையினரிடமிருந்துதான் குருக்கள் அழைக்கப் படுகின்றார்கள்.

குருக்களின் முதல் குருமடம் பொது நிலையினரின் குடும்பம்தான்.

ஒரு குருவானவர் ஆயராகத் திருநிலைப் படுத்தப் பட்ட பின்பு, அந்த விழாவைக் கொண்டாட தன் பெற்றோரை அழைத்திருக்கிறார்.

அவர்களிடம் ஆயருக்குரிய அவருடைய மோதிரத்தைக் காண்பித்திருக்கிறார்.

அவருடைய தாய் அவளுடைய திருமண மோதிரத்தைக் காண்பித்து,

"இந்த மோதிரம் என் கைக்கு வந்திருக்காவிட்டால், அந்த மோதிரம் உங்கள் கைக்கு வந்திருக்காது," என்றார்.

பொது  நிலையினரின் முக்கியத்துவத்தை எடுத்துக் 
காட்டவே இயேசு தனது 33 ஆண்டு கால வாழ்வில்

30 ஆண்டுகள்  திருக்குடும்பத்தில் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

பொதுநிலையினரும் இயேசுவால் அழைக்கப்பட்டவர்களே என்பதை உணர்ந்து 

அழைப்பிற்கு ஏற்ப வாழ்வோம்.

குடும்பத்துக்கு ஒரு குருவைப் பெற்றுத் தருவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment