"கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவன் எவனும் கடவுளின் அரசிற்குத் தகுதியற்றவன்"
(லூக்.9:62)
ஒருவன், "ஆண்டவரே, உம்மைப் பின்செல்வேன்: ஆனால் முதலில் வீட்டில் சொல்லிவிட்டுவர விடைதாரும்" என்றான்.
இயேசுவோ அவனை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவன் எவனும் கடவுளின் அரசிற்குத் தகுதியற்றவன்" என்றார்.
இறைப் பணியில் இறங்கிய பின் அதில் முழு மூச்சிடன் ஈடுபட வேண்டும்.
பிறந்து வளர்ந்த குடும்பத்தைத் துறந்து, இறைப்பணிக்கு வந்த பின் குடும்பத்தை நினைத்துப் பார்ப்பவர்கள்,
கலப்பையில் கை வைத்தபின் புறப்பட்ட வரப்பைத் திரும்பிப் பார்ப்பவர்களுக்குச் சமம்.
வயலை உழுவதற்குப் பயன்படும் கருவி கலப்பை
ஒருவன் கலப்பையில் கைவைத்து விட்டான் என்றால் உழவு உழ ஆரம்பித்து விட்டான் என்று அர்த்தம்.
ஆரம்பித்த வேலையை முடிக்காமல் வெளியே வரக்கூடாது.
ஒருவன் வேலையின்போதே வெளியே வர எண்ணினால் அவன் அந்த வேலைக்குப் பொருத்தமானவன் அல்ல.
உலகைச் சார்ந்த வேலைகளைப் பொருத்தமட்டில் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு துவக்கமும் முடிவும் உண்டு.
பள்ளிக்கூடப் படிப்பு இறுதி தேர்வுடன் முடிந்து விடும்.
ஆசிரியர் பணி 58 வயதுடன் முடிந்து விடும்.
ஆனால் இறைப் பணிக்கு முடிவே இல்லை.
இறைப் பணிக்குள் வேறு பணி எதுவும் புகவும் முடியாது.
ஒருவர் குருவானவர் ஆகிவிட்டால் இறுதிவரை குருத்துவ பணி மட்டுமே செய்ய வேண்டும்.
மக்களின் ஆன்மீக மீட்புக்காக உழைப்பது மட்டுமே குருக்களின் பணி.
ஒரு நாள் குருவானவர் ஒருவர் ஒரு முக்கியமான வேலையாக வெளியூருக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
Bike ல்ஏறி Start செய்துவிட்டார்.
அப்பொழுது ஒரு ஆள் அவசரமாக வந்து,
"சாமி, பாவசங்கீர்த்தனம்" என்றார்.
சுவாமியார் உடனே Bike ஐ off செய்து விட்டு,
கோவிலுக்குள் சென்று
பாவசங்கீர்த்தனம் கேட்ட பின்பு
ஊருக்குப் புறப்பட்டார்.
இயேசு மனிதனாக பிறந்ததே மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்காகத்தான்.
அந்த அதிகாரத்தைக் குருக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.
மருத்துவர்கள் எப்படி நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பதோடு
அவர்கள் எப்படி நலமுடன் வாழ வேண்டும் என்று வழி காட்டுகிறார்களோ,
அப்படியே குருக்களும் நமது பாவங்களை மன்னிப்பதோடு
நாம் எப்படி ஆன்மீக வாழ்வு வாழ வேண்டும் என்று வழி காட்டுகிறார்கள்.
அவர்கள் நமது ஆன்மீக வழிகாட்டிகள். (Spiritual Directors)
அவர்கள் வழிகாட்டுகிறபடி நாம் நடந்தால் விண்ணக வாழ்வை அடைவது உறுதி.
குருக்கள் பள்ளிக் கூடங்கள் நடத்துகிறார்களே, பாடம் சொல்லிக் கொடுக்கிறார்களே என்று கேட்கலாம்.
அங்கேயும் அவர்கள் பழகுவது ஆன்மாக்களுடன்தான்.
மாணவர்களின், மற்றும் சக ஆசிரியர்களின் ஆன்மீக நலன்தான் அவர்களுடைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
பள்ளிக்கூடங்களை பொது நிலையினர் வசம் ஒப்படைத்து விட்டு குருக்கள் முழுக்க முழுக்க ஆன்மீகப் பணியில் ஈடுபட்டால் இன்னும் நலமாக இருக்கும்.
பொது நிலையினருக்கும் ஆன்மீகப் பொறுப்பு இருக்கிறது.
ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் நற்செய்தியை வாழ்ந்து அறிவிக்கும் கடமை இருக்கிறது.
ஆகவே இறைப்பணி குருக்களுக்கு மட்டும் தான் என்று நினைக்கக் கூடாது.
பாவங்களை மன்னித்தல், திருப்பலி நிறைவேற்றுதல், திவ்ய நற்கருணையை அனைவருக்கும் பகிர்தல் ஆகிய பணிகள் குருக்களுக்கு மட்டுமே உரியன.
நற்செய்தியை அறிவித்தல் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பொதுவானது.
பேய்களிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒருவன் ஆண்டவர் பின் செல்ல ஆசைப்பட்டான்.
ஆனால் அவர், "நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போ. கடவுள் உனக்குச் செய்ததெல்லாம் தெரியப்படுத்து" என்று கூறி அவனை அனுப்பிவிட்டார்.
அவன் நகரெங்கும் சென்று இயேசு தனக்குச் செய்ததெல்லாம் அறிவிக்கலானான்.
இதுவே பொது நிலையினரின் நற்செய்தி பணி.
விசுவாசப் பகிர்வின் மூலம், நமது விசுவாசத்தினால் நாம் பெறும் ஆன்மீக நன்மைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நமது பகிர்வு மற்றவர்களுக்கு வழி காட்டியாக செயல்படும்.
இவ்வுலகில் நாம் செய்ய வேண்டிய பணி இறைப் பணி மட்டும்தான்.
அதை செவ்வனே செய்து இறையடி சேர்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment