மகிமையின் சின்னம்.
பெரிய வெள்ளி இல்லாவிட்டால் உயிர்த்த ஞாயிறு இல்லை.
வெள்ளிக் கிழமை இயேசு சிலுவையில் மரித்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் உயிர்த்தெழுந்தார்,
வெள்ளி கிழமை துக்க தினம்.
ஞாயிற்றுக்கிழமை மகிமையின் தினம்.
வெள்ளி கிழமை இயேசு சிலுவையில் மரித்ததால் அதைத் துக்கத்தின் அடையாளமாகத்தானே கருத வேண்டும்.
ஆனால் நாம் அதை மகிமையின் அடையாளமாகக் கருதுகிறோமே, ஏன்?
ஏனெனில் சிலுவையில் மரித்தது மகிமையின் உறைவிடமாகிய இயேசு.
நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்கு அடையாளமே சிலுவைதான்.
இயேசுவின் காலம் வரை சிலுவை குற்றவாளிகளைத் தண்டிக்கும் கருவியாகத்தான் இருந்தது.
அதாவது தண்டனை என்னும் அவமானத்தின் சின்னமாக இருந்தது.
இயேசு குற்றவாளி அல்ல. ஆனால் பரிசேயர்கள் அவர் குற்றவாளி என பொய்க் குற்றம் சாட்டி, அதற்கு தண்டனையாக, அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.
ஆனாலும் இயேசு மனுக்குலத்தின் பாவங்களை எல்லாம் சுமந்து அவற்றுக்கு பரிகாரமாக தன்னையே சிலுவையில் பலியாக்கினார்.
உண்மையில் சிலுவையில் அறைந்து கொல்வதற்காக இயேசு தன்னையே கையளித்தார்.
அதனால் தான் தன்னையே சிலுவையில் பலியாக்கினார் என்று கூறுகிறோம்.
இயேசுவின் காலம் வரை அவமானத்தின் சின்னமாக இருந்த சிலுவை,
இயேசு அதில் மரித்து நமது பாவங்களை வென்றதால் அது வெற்றியின் சின்னமாக மாறியது.
இன்று நாம் அதை வெற்றியின் சின்னமாகத்தான் பயன்படுத்தினோம்.
கிறிஸ்தவ வாழ்வு என்றாலே அது சிலுவையின் வாழ்வு தான்.
நாம் சிலுவையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சிலுவைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
காலையில் படுக்கையிலிருந்து எழும்போதே சிலுவை அடையாளம் வரைந்து கொண்டுதான் எழுதுகிறோம்.
சிலுவையின் மீது படுத்திருந்த நாம் சிலுவைக்காகவே வாழப் போகிறோம் என்பதற்கான அடையாளம் அது.
இரவில் படுக்கும் போது சிலுவை அடையாளம் வரைந்து அதன் மேல் படுக்கிறோம்.
சிலுவையில் படுத்து ஆணிகளால் அறையப்பட்ட இயேசுவின் ஞாபகமாகவே தூங்குகிறோம்.
அதே ஞாபகத்தில் தான் காலையில் எழுகிறோம்.
சிலுவை அடையாளம் வரையும் போது
"தந்தை, மகன், தூய ஆவியின் " பெயராலே வரைகிறோம்.
சிலுவையின் மீது, சிலுவைக்காக வாழும் நாம் பரிசுத்த தம திரித்துவத்தின் மகிமைக்காகவே வாழ்கிறோம் என்பதன் அடையாளமாகவே,
சிலுவை அடையாளம் வரைந்து
படுக்கிறோம், எழுகிறோம், தொடர்ந்து வாழ்கிறோம்.
இதன் அடையாளமாகத்தான் நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வின் முன்னும், பின்னும் சிலுவை அடையாளம் வரைகிறோம்.
குளிக்கும்போது சிலுவை அடையாளம் வரைந்து தான் முதல் குவளைத் தண்ணீரை மேலே ஊட்டுகிறோம்.
சிலுவை அடையாளத்தோடுதான் குளியலறையை விட்டு வெளியே வருகிறோம்.
சாப்பிடும் முன்பும், பின்னும் சிலுவை அடையாளம் வரைகிறோம்.
அலுவலகம் செல்ல வாகனத்தில் ஏறும் போதும், அதிலிருந்து இறங்கும்போதும்,
அலுவலகத்தில் வேலைக்காக அமரும் போதும், வேலை முடிந்து எழும்போதும்,
வீட்டுக்கு திரும்பும்போதும், வீட்டிற்கு வந்த பின்னும் சிலுவை அடையாளம் வரைகிறோம்.
நாம் சொல்லும் செபங்களில், திருப்பலிக்கு அடுத்து, மிகவும் சக்தி வாய்ந்த செபம்,
சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு சொல்லும்,
"தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே ஆமென்."
என்ற செபம்தான்.
இதில் நம்மை படைத்த, மீட்ட, அர்ச்சிக்கும் கடவுளின் பெயராலே, அவரை நோக்கியே செபிக்கிறோம்.
சர்வ வல்லவரின் பெயராலே சொல்லும் செபத்திற்கு ஈடான வல்லமை வேறு செபத்திற்கும் இருக்க முடியாது.
திருப்பலியை இந்த செபத்தோடு ஆரம்பித்து, இதோடுதான் நிறைவு செய்கிறோம்.
நமது கிறிஸ்தவ வாழ்வு ஞானஸ்தானத்தின் போது குருவானவர் நமது தலையில் மீது வரையும் சிலுவை அடையாளத்தில் ஆரம்பித்து,
கல்லறையில் வரையப்படும் சிலுவை அடையாளத்தோடு விண்ணுலகில் தொடர்கிறது.
இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நமது வாழ்வு பலி வாழ்வாக இருக்க வேண்டும்.
நாம் நம்மீது சிலுவை அடையாளம் வரையும் போது நமது ஞாபகத்தில் இருக்க வேண்டியவை,
1. திரி ஏக இறைவனுக்குள் நுழைகிறோம்.
2. அவருடைய பாதுகாப்பில் தான் வாழ்கிறோம்.
3.இறைவன் பெயரால் என்ன செய்தாலும் வெற்றி நிச்சயம்.
4.சிலுவையின் பாதை நம்மை விண்ணகத்திற்கு உறுதியாக அழைத்துச் செல்லும்.
5.சிலுவையில் இயேசு பட்ட வேதனை நமக்கு நித்திய பேரின்பத்தை தருவதற்காகவே.
நமது வாழ்வில் வரும் சிலுவையும் நம்மை நித்திய பேரின்பத்திற்கு அழைத்துச் செல்லும்.
6. சிலுவை அடையாளம் வரைபவர்கள் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே.
7.ஒவ்வொரு முறை சிலுவை அடையாளம் வரையும் போதும் நமது மீட்புக்காக வேண்டிக் கொள்வது போல அவர்களது மீட்புக்காகவும் வேண்டிக் கொள்வோம்.
8.நாம் வாழ்வது சிலுவையில், சிலுவைக்காகவே.
ஆகவே நமது வாழ்வில் வரும் சிலுவைகளை,
அதாவது துன்பங்களை,
மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு,
அவற்றை நமது மீட்புக்காகவும்,
உலகத்தினர் அனைவரின்
மீட்புக்காகவும் கடவுளிடம் ஒப்புக் கொடுப்போம்.
9. இயேசு சிலுவையைச் சுமந்து, அதில் மரித்து உலகை மீட்பதற்காகவே உலகிற்கு வந்தார். நாம் இயேசு கிறிஸ்துவின் சீடர்கள். குருவைப் போலவே வாழ்வோம்.
10 இவ்வுலகிலும், மறுவுலகிலும் இயேசுவுடனே வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment