Sunday, September 11, 2022

அவளைக் கண்டு ஆண்டவர் அவள்மீது மனமிரங்கி, "அழாதே." என்றார். ( லூக்.7:13).

அவளைக் கண்டு ஆண்டவர் அவள்மீது மனமிரங்கி, "அழாதே." என்றார். ( லூக்.7:13).

இயேசு நயீன் என்ற ஊருக்குச் சென்று கொண்டிருந்த போது,

இறந்த ஒருவனைத் தூக்கிக் கொண்டு வந்ததைப் பார்த்தார். 

அவன் கைம்பெண்ணான தாய்க்கு ஒரே பிள்ளை.

ஆண்டவர் அவள்மீது மனமிரங்கி, "அழாதே." என்றார்.

முன்னால் சென்று பாடையைத் தொட்டார்.

அதைத் தூக்கிவந்தவர்கள் நின்றார்கள். 

நின்றதும், "இளைஞனே, உனக்கு நான் சொல்லுகிறேன், எழுந்திரு" என்றார்.

இறந்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினான். தாயிடம் அவனை ஒப்படைத்தார்.

இயேசு சர்வ வல்லவர் மட்டுமல்ல அளவற்ற இரக்கமும் உள்ளவர் என்பதற்கு இந்த நிகழ்ச்சி சான்று.

இதைப் போன்ற புதுமைகளை வாசிக்கும் போது நாம் ஒரு முக்கியமான உண்மையை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு முறை இயேசுவின் சீடர்கள் ஒரு பிறவிக் குருடனைப் பற்றி ஒரு கேள்வி கேட்டார்கள்:

"ராபி, இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா? இவன் பெற்றோர் செய்த பாவமா?"

இயேசு, "இவன் செய்த பாவமும் அன்று, இவன் பெற்றோர் செய்த பாவமும் அன்று. கடவுளுடைய செயல்கள் இவன் மட்டில் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான்."

இயேசுவின் பதில் இந்த புதுமைக்கு மட்டுமல்ல எல்லா புதுமைகளுக்கும் பொருந்தும்.

இயேசு இறைமகன்.  

நம் அனைவரையும் படைத்தவர்.

நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருபவர்.

 பாவம் தவிர நம்முடைய மற்ற எல்லா நிகழ்வுகளும் அவருடைய நித்திய கால திட்டத்தின் படியே நடக்கின்றன. 

பாவம் மட்டும் நமது விருப்பப்படி செய்யப்படுவது.

அவருடைய ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு காரண, காரிய தொடர்பு இருக்கும்.

நாம் குறிப்பிட்ட புதுமையில் ஒருவன் பிறவியிலேயே குருடனாக பிறந்தது 

கடவுளுடைய (இயேசுவினுடைய) செயல்கள் இவன் மட்டில் வெளிப்படும் பொருட்டே,

அதாவது, இயேசு அவனை குணமாக்கி தனது இரக்கத்தை வெளிப்படுத்தும் பொருட்டே.

அப்படிப் பார்க்கும்போது விதவைத் தாயின் மகன் இறந்ததும் இயேசு அவனுக்கு உயிர் கொடுத்து தனது இரக்கத்தை வெளிப்படுத்தும் பொருட்டே.

அவனைப் படைத்தவர் அவர்தான்.

பராமரித்து வந்தவரும் அவர்தான்.

அவருடைய திட்டத்தின் படி அல்லாமல் அவன் மரணித்திருக்க முடியாது.

அவனுக்கு உயிர் கொடுப்பதன் மூலம்

கடவுள் இரக்கம் உள்ளவர் என்பதை 

அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமல்ல

 இக்காலத்தில் வாழும் மக்களுக்கும் புரிய வைக்கவே 

அவனை மரணிக்கச் செய்திருக்கிறார்.

இதுவும் இயேசு நமக்கு அறிவித்திருக்கிற நற்செய்தி தான்.

இப்பொழுது நமக்கு வருகின்ற துன்பங்களும், நோய் நொடிகளும் 
அவரது இரக்கத்தை நாம் பயன்படுத்த சந்தர்ப்பம் தருவதற்காகவே வருகின்றன.

இவை இரண்டு விதங்களில் நாம் ஆன்மீக பலன் அடைய உதவுகின்றன.

1.நம்மை கடவுளை நினைக்க வைக்கின்றன. துன்பங்களே வராவிட்டால் கடவுளை மறந்து விட வாய்ப்பு இருக்கிறது,

பசி வரும்போது தானே குழந்தை அம்மாவை தேடுகிறது!

தேவைகள் ஏற்படும் பொழுது தானே நாம் பெற்றோரை தேடுகின்றோம்!

புனிதர்களின் திருத்தலங்களுக்கு திருயாத்திரை செய்பவர்களில் பலர் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காகத்தான்,

ஆகவே ஒரு வகையில் நமக்கும் இறைவனுக்கும் மத்தியில் நெருக்கத்தை ஏற்படுத்துவது நமக்கு வரும் துன்பங்கள்தான்.

அவரது இரக்க மழையில் நம்மை நனைய வைப்பதும் அவைகள் தான்.

2. நமக்கு வரும் துன்பங்களை சிலுவைகளாக ஏற்றுக் கொண்டு அவற்றை நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுத்தால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

புனிதர்கள் இதைத்தான் செய்தார்கள்.

எல்லா புனிதர்களும் வாழ்நாள் முழுவதும் சிலுவையைச் சுமந்தவர்கள்தான்.

கடவுள் நம் மீது கொண்டுள்ள இரக்கத்தின் காரணமாகத்தான் தான் சுமந்த சிலுவையை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

கடவுளின் அன்பை மையமாக கொண்டு தியானித்தால் நமக்கு வரும் துன்பங்கள் கடவுளின் இரக்கப் பெருக்கத்தின் அடையாளங்களே என்பது புரியும்.

பாவத்தை மட்டும் தான் நாம் செய்கிறோம். நமது பாவத்துக்கு கடவுள் பொறுப்பல்ல.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுக்க துன்பங்களை அனுப்புவது கடவுள் நம் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாகத்தான்.

நாம் செய்யும் பாவ பரிகாரம் நம்மை விண்ணகத்திற்கு அழைத்து செல்கிறது.

கடவுளின் இரக்கத்தை துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் பயன்படுத்தி கொள்ளலாம்,

அவற்றை பாவ பரிகாரமாக ஏற்றுக்கொண்டு விண்ணக வாழ்வை அடைவதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த இரண்டில் மிக முக்கியமானது விண்ணக வாழ்வு என்பதை மறந்து விடக்கூடாது.

ஒரு தாய் பிரசவ வேதனையை ஏற்றுக் கொள்வது தனது குழந்தையின் முகத்தைப் பார்ப்பதற்காக,

நாம் நமக்கு வரும் துன்பங்களை பொறுமையுடன் ஏற்றுக் கொள்வது இறைவனின் முகத்தை பார்ப்பதற்காக.

துன்பங்கள் வரும்போது இறைவனின் இரக்கத்தை நினைப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment