Thursday, September 29, 2022

"அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்."(லூக்.10:2)

"அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்."
(லூக்.10:2)

முதலில் அப்போஸ்தலர்களை ஒருவர் ஒருவராக நற்செய்தி அறிவிக்க அனுப்பிய நம் ஆண்டவர்,

அடுத்து, வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, 

தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் அவர்களை இருவர் இருவராகத் தமக்குமுன்னால் அனுப்பினார்.


 அவர்களைப் பார்த்து அவர் கூறினார்: 

"அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்."

நற்செய்திப் பணியை விவசாயப் பணியாக உருவகப் படுத்தி சொல்கிறார்.

மிகுதியாக அறுவடை செய்ய வேண்டியதிருக்கிறது.

அறுவடைக்கு வந்திருக்கும் ஆட்களோ குறைவு.

அதிகமான ஆட்களை அனுப்பும்படி அறுவடை நிலத்திற்கு உரியவரைக் கேளுங்கள் என்று ஆண்டவர் சொல்கிறார்.

அதாவது, நற்செய்தி அறிவிக்கப் பட வேண்டிய இடம் அதிகம்,  

அறிவிக்க  அதிகமான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். 

ஆனால் வந்திருக்கும் ஆட்களோ குறைவு.

அதிகமான நற்செய்திப் பணியாளர்களை அனுப்பும்படி நற்செய்தியின் ஆண்டவரை மன்றாடுங்கள் என்று சொல்கிறார். 

இங்கே நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

இயேசுதான் நற்செய்தியின் ஆண்டவர்.

நற்செய்தி பணிக்கான ஆட்களை தேர்ந்தெடுப்பவரும் அவரே.

பன்னிரண்டு அப்போஸ்தலர்களையும், 

வேறு எழுபத்திரண்டு சீடர்களையும் தேர்ந்தெடுத்தவர் அவரே.

யாரும் சொல்லி தேர்ந்தெடுக்கவில்லை, அவராகவேதான் தேர்ந்தெடுத்தார்.

எழுபத்திரண்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்தவர் இன்னும் அதிகமாகத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

ஆனால் அவர் அவர்களைப் பார்த்து,     

"தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்." என்று சொன்னார்.

இதை தியானித்துப் பார்க்கும் போது நம்மை பார்த்து சொல்வதற்காகவே அவர்களிடம் சொன்னது போல் தெரிகிறது.

ஏனெனில், அவரது வார்த்தைகள் எழுதப்பட்டு நமக்கு வந்து சேரும் என்பது அவருக்கு தெரியும்.

நம்மை கேளாமல் தான் நம்மைப் படைத்தார்.

ஆனால் அதற்கு மேல் நமக்கு தேவையானவற்றை அவரிடம் கேட்டு பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

முழுமையாக சுதந்திரத்தோடு நம்மை படைத்து,  

அந்த சுதந்திரத்தை பயன்படுத்தி,

 அவரோடு நெருங்கிய நட்போடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

ஒரு குழந்தை தன் தாயுடன் நெருக்கமாக இருக்க வேண்டுமென்றால் 

அதற்கு தேவைகள் இருக்க வேண்டும், அவை அதன் தாய் மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

அதற்கு பசி இல்லாவிட்டால் அது தாயைத் தேடாது.

பிள்ளைகளின் தேவைகள்தான் அவர்களை பெற்றோர்களோடு நெருக்கப்படுத்துகின்றன.

அதேபோல் நமது தேவைகள் தான் நம்மைப் படைத்த கடவுளோடு நம்மை நெருக்கமாக வாழ உதவுகின்றன.

ஆகவே தான் நமக்கு தேவைகளை கொடுத்து,

"கேளுங்கள் தரப்படும்." என்று சொல்கிறார்.

நற்செய்தி அறிவிப்பு பணி விஷயத்திலும் இதையேதான் பின்பற்றுகிறார்.

"உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்.

உலகமோ பெரியது.

நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டிய ஆள்களோ அதிகம்.

ஆகவே நற்செய்தி அறிவிப்பில் உங்களுக்கு உதவியாக இருக்கும் படி அதிகமாக பணியாளர்களை என்னிடம் கேளுங்கள்.

நீங்கள் கேட்கிறபடி உங்களுக்கு உதவியாளர்களை நான் அனுப்புவேன்.

நீங்கள் கேளாமலேயே என்னால் பணியாளர்களை அனுப்ப முடியும்.

ஆனாலும் நற்செய்தி பணியாளர்களுக்கும் எனக்கும் எப்போதும் நெருக்கமான உறவு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் 

"என்னிடம் கேளுங்கள், அனுப்புவேன்"

 என்று சொல்கிறேன். 

என்னை நினைத்துக் கொண்டுதான்  நீங்கள் பணி புரிய வேண்டும்.

நான் உங்களை படைத்ததே எனது அளவில்லாத அன்பை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காகத்தான்.

உரையாடல் மூலமாகத்தான் உறவு வலுப்படும்.

நீங்கள் என்னோடு எப்பொழுதும் பேசிக் கொண்டிருக்க வேண்டும்,

எனது அன்புப் பகிர்வை அனுபவிக்க வேண்டும்

என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

ஆகவே அன்பு பிள்ளைகளே உங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக மட்டுமல்ல,

நற்செய்திப்பணி தேவைகளுக்காகவும்  ஒவ்வொரு வினாடியும் என்னோடு  பேசுங்கள்.

எனது அன்பிலும், மகிழ்ச்சியிலும் பங்கு பெறுங்கள்.''

நமது ஆண்டவரின் விருப்பப்படி அவரிடம் கேட்போம்,

எப்போதும் கேட்டுக்கொண்டேயிருப்போம்.

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நாம் இயேசுவின் ஞாபகத்தில் இருக்கிறோம்.

அதேபோல அவரும் நமது ஞாபகத்தில் இருக்க வேண்டும்,

அதற்காக அவரோடு எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.

நிலைவாழ்வு என்றாலே முடிவில்லாத காலம் நம் ஆண்டவரோடு நெருக்கமான உறவில் வாழ்வதுதான்.

வாழ்வோம், என்றென்றும் இயேசுவின் உறவில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment