Wednesday, September 21, 2022

"வழிப்பயணத்திற்குக் கோலோ, பையோ, உணவோ, பணமோ, ஒன்றும் எடுத்துச் செல்லாதீர்கள். இரண்டு உள்ளாடைகளை யாரும் வைத்திருக்க வேண்டாம்."(லூக்.9:3)

"வழிப்பயணத்திற்குக் கோலோ, பையோ, உணவோ, பணமோ, ஒன்றும் எடுத்துச் செல்லாதீர்கள். இரண்டு உள்ளாடைகளை யாரும் வைத்திருக்க வேண்டாம்."
(லூக்.9:3)

இயேசு இறையரசைப்பற்றிச் செய்தியை அறிவிக்க தனது சீடர்களை அனுப்பும்போது 

"வழிப்பயணத்திற்குக் கோலோ, பையோ, உணவோ, பணமோ, ஒன்றும் எடுத்துச் செல்லாதீர்கள். இரண்டு உள்ளாடைகளை யாரும் வைத்திருக்க வேண்டாம்."

என்ற அறிவுரையைக் கூறுகிறார்.

எதற்காக இந்த அறிவுரை?'

இயேசுவின் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் ஏதாவது ஒரு நற்செய்தி போதனை அடங்கியிருக்கும்.

இயேசு அருளப்பரிடம் ஞானஸ்தானம் பெற்று,

40 நாட்கள் உண்ணா நோன்பு இருந்த பிறகுதான்,

நற்செய்தி போதனையை ஆரம்பித்தார்.

உண்ணா நோன்பு இருந்த பிறகு, 
நற்செய்தி போதனையை ஆரம்பிக்குமுன் சாத்தான் அவரைச் சோதித்தான்.

முதல் சோதனை உணவைப் பற்றியது.

நோன்பு இருந்ததால் பசியாய் இருந்த அவரிடம்,

"நீர் கடவுளின் மகனானால் அப்பமாக மாறும்படி இந்தக் கல்லுக்குச் சொல்லும்" என்றது.

நற்செய்தி போதனையை ஆரம்பிக்கும் முன் இந்த சோதனையைக் கொடுக்க சாத்தானுக்கு இறைமகன் இயேசு அனுமதி கொடுத்தது 

நமக்கு ஒரு பாடம் கற்பிப்பதற்காகத்தான்.

நற்செய்திப் பணிக்கு உணவு ஒரு இடையூராக இருக்கக் கூடாது.

அதாவது நற்செய்திப் பணி நேரத்தை உணவு அபகரித்துக் கொள்ளக் கூடாது.

நற்செய்திப் பணியாளர்கள் தங்கள் முழு கவனத்தையும், நேரத்தையும் நற்செய்திப் பணிக்கே அர்ப்பணிக்க வேண்டுமே தவிர,


உணவு, பணம் போன்ற இவ்வுலகைச் சார்ந்த பொருட்களை ஈட்டுவதற்காக அல்ல.

அவை இவ்வுலகில் உயிர் வாழத் தேவைதான்.

ஆனால் அவை இல்லாவிட்டாலும் நற்செய்தி பணி நில்லாமல் தொடர வேண்டும்.

அதனால் தான் சாத்தான் கல்லை அப்பமாக மாற்ற சொன்னபோது,

"மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று, கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர்வாழ்கிறான்" என்று சொன்னார்.

கடவுள் வாயினின்று வரும்  சொல்தான் இறைவாக்கு,  அதாவது, நற்செய்தி.

இயேசு நற்செய்தி அறிவித்த போது தன்னோடு கோல், பை, உணவு, பணம் போன்ற பொருட்களை எடுத்துச் செல்லவில்லை.

எங்கே உணவு கிடைத்ததோ அங்கே சாப்பிட்டார். அவரது சொற்களில் குற்றம் காண்பதற்கு என்றே அவரை பின் சென்ற பரிசேயர்கள் வீடுகளில் கூட சாப்பிட்டிருக்கிறார்.

இரவில் தூங்குவதற்கு அவருக்கு சொந்தமான வீடு கூட இல்லை.

"மனு மகனுக்கு தலை சாய்க்கக் கூட இடமில்லை" என்று அவரே சொல்லியிருக்கிறார்.

இரவு நேரத்தை செபத்தில் தான் செலவழித்தார். 

அவரைப் போலவே அவரது சீடர்களும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்  

கோல், பை, உணவு, பணம் போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டாம் என்று கூறினார்.

அவரது இந்த அறிவுரை அன்று நற்செய்தியை அறிவிக்கச் சென்ற சீடர்களுக்கு மட்டுமல்ல,

இன்று நற்செய்தி அறிவிக்கின்றவர்களுக்கும் பொருந்தும். 

நற்செய்தியை அறிவிக்கின்றவர்களுக்கு வேண்டிய உணவை, 

மற்றும் தேவையானவற்றைக்,

 கொடுப்பது நற்செய்தியைக் கேட்பவர்களது கடமை.

"நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும்" என்பது தாய்த் திருச்சபையின் கட்டளை.

நற்செய்தி பணியினர் நற்செய்தியை அறிவிப்பதற்காக மட்டுமே வாழ்கின்றார்கள்,

பணத்தையும், உணவையும், மற்ற பொருள்களையும் ஈட்டுவதற்காக அல்ல.

நற்செய்திப் பணியினர் இவ்வுலகப் பொருட்கள் மீது ஆர்வம் காட்டினால் நற்செய்தி பணி மீது உள்ள ஆர்வம் குறைந்து விடும்.

எதிர் மறை விளைவுகளைக் கூட ஏற்படுத்தும்.

யூதாஸ் பணத்தின் மீது ஆர்வம் காட்டியதன் விளைவு நமக்குத் தெரியும்.

உலகப் பொருட்கள் மீது ஆர்வம் காட்டக்  கூடாது என்ற அறிவுரை

நற்செய்தியைக் கேட்டு வாழ வேண்டியவர்களுக்கும் பொருந்தும்.

நற்செய்திப் பணியாளர்களைப் போலவே நற்செய்தியைக் கேட்பவர்களும் இயேசுவை போல் தான் வாழ வேண்டும்.

நற்செய்தியை ஒழுங்காக வாழ ஆரம்பித்தால் இவ்வுலகப் பொருட்கள் மீது உள்ள நாட்டம் மறைய ஆரம்பித்து விடும்.

இறைவனுக்கும், பணத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது என்பதுவுமே நற்செய்தி தான்.

பணத்தை இறைப் பணிக்காக ஈட்டுவது ஆன்மீகம்.

பணத்தை பணம் என்பதற்காகவே ஈட்டுவது உலகியல்,

நாம் நற்செய்தியின்படி ஆன்மீக வாழ்வு வாழ ஆரம்பித்தால்  பணத்தின் மீதான நாட்டம் முடிவுக்கு வந்துவிடும்.

பணத்தின் மீது நாட்டம் ஏற்பட்டால் 
ஆன்மீக வாழ்வு  முடிவுக்கு வந்துவிடும்.

ஆகவே இயேசுவின் சொற்படி உலகப் பொருட்கள் மீது உள்ள ஆசையை விடுவோம்.

நற்செய்தி வாழ்வின் மீது ஆர்வம் கொள்வோம். 

இயேசுவையே சோதித்த சாத்தான் இப்போது சும்மா இருப்பானா?

அவனுடைய வேலையே சோதிப்பது தானே.

"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்" என்று விண்ணகத் தந்தையை நோக்கி வேண்டுவோம்.

நம்மை தந்தையின் கையில் ஒப்படைத்துவிட்டு 

மகன் போதித்த நற்செய்தியின் வழி வாழ்வோம்.

தூய ஆவி நமக்கு துணையாக இருப்பார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment