Tuesday, September 13, 2022

"நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்."( லூக்.7:6)

"நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்."
( லூக்.7:6)

நூற்றுவர்தலைவன் ஒருவனுடைய ஊழியன் நோயுற்றுச் சாகக்கிடந்தான்.

 தலைவன் அவன்மீது மிகுந்த பற்றுக்கொணடிருந்தான்.

அவன் இயேசுவிடம் நேரடியாக வராமல் 

யூதரின் மூப்பரை அவரிடம் அனுப்பித் தன் ஊழியனைக் காப்பாற்ற வருமாறு வேண்டினான்.


இயேசு அவர்கள்கூடப் போனார்.

 வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலிருந்தபொழுதே

 அவரிடம் நூற்றுவர் தலைவன் நண்பர்களை அனுப்பி,

 "ஆண்டவரே, இவ்வளவு

 தொந்தரை வேண்டாம்: நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்.

அதனால்தான் நானும் உம்மிடம் வரத் தகுதியற்றவன் எனக் கருதினேன். 

ஒரு வார்த்தை சொல்லும். என் ஊழியன் குணமாகட்டும்.''

என்று சொன்னான்.

அவனுடைய தாழ்ச்சி இயேசுவுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இயேசு வீட்டிற்குப் போகாமலேயே அந்த ஊழியனைக் குணமாக்கினார்.

நூற்றுவர் தலைவரின் தாழ்ச்சியை வெளிப்படுத்தும் அதே வார்த்தைகளை தான் 

நமது தாழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக

இயேசுவை நற்கருணை மூலம் வாங்குவதற்கு முன் நாம் சொல்கிறோம்.

வெறுமனே வார்த்தைகளை மட்டும் கூறினால் எந்த பயனும் இல்லை.

வார்த்தைகளின் பொருளை உணர்ந்து கூற வேண்டும்.

உணர்ந்து கூறினால் நற்கருணை விருந்தில் கலந்து கொள்ள கூடாதே என்று கேட்கலாம்.

உண்மையில் இயேசுவை நமது நாவில் வரவேற்க நமக்குத் தகுதி இல்லை என்று உணர்வதுதான் நம்மைத் தகுதி உள்ளவர்களாக மாற்றுகிறது.

இயேசு விரும்புவது உண்மையான தாழ்ச்சியைத்தான்.

அவர் விரும்பியதை நினைப்பதுதான் நம்மை அவருக்கு ஏற்றவர்களாக மாற்றுகிறது.

தாழ்ச்சிதான் புண்ணியங்களின் அரசி.

Humility is the queen of all the virtues.

இயேசு கடவுள், சர்வ வல்லவர், அளவில்லாத பரிசுத்தர்.

அவரை வரவேற்க தகுதி உள்ளவராக இருக்க வேண்டும் என்றால் அவரும் சர்வ வல்லவராகவும், அளவில்லாத பரிசுத்தராகவும் இருக்க வேண்டும்.

கடவுளைத் தவிர வேறு யாரும் சர்வ வல்லவராகவும், அளவில்லாத பரிசுத்தராகவும் இருக்க முடியாது.

"உன்னை நீ நேசிப்பது போல மற்றவர்களையும் நேசி"

என்று நமக்கு கட்டளை கொடுத்த இயேசு,

தன்னை நேசிப்பது போல நம்மையும் நேசிக்கிறார்.

அளவுள்ள நம்மை
அளவு கடந்த அன்புடன் நேசிக்கிறார்.

நம் மீது அவருக்கு இருக்கும் அளவு கடந்த அன்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்,

நம்மை போல மனிதனாக பிறந்தார்.

பாவத்தை தவிர நமது எல்லா பலகீனங்களையும் ஏற்றுக் கொண்டார்.

பலகீனர்களாகிய நாம் அவரோடு பழக வேண்டுமென்பதற்காக அவர் நமது பலகீனங்களை ஏற்றுக் கொண்டார்.

அவரால் பாவம் செய்ய முடியாவிட்டாலும்,

நமது பாவ மூட்டையை அவரே சுமந்து,

 தனது சிலுவை மரணத்தால் நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்தார்.

அளவு கடந்த பரிசுத்தராகிய அவர் பாவிகளாகிய நம்மோடு உறவாடுவதற்காக திவ்ய நற்கருணைப் பேழையில் நமக்காக இரவும் பகலும் காத்துக் கொண்டிருக்கிறார். 

நாம் பாவிகள் என்றும், அவரோடு பேச தகுதி அற்றவர்கள் என்றும் அவருக்கு தெரிந்தாலும்,

நம் மீது கொண்ட அன்பின் காரணமாக நம்மோடு பேசவும் நாம் பேசுவதைக் கேட்கவும் விரும்புகிறார்.

பாவிகளாகிய நாம் பரிசுத்தராகிய அவரைச் சந்தித்து 

நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு, '

மன்னிப்பு பெறுவதன் மூலம் பாவ நிலையிலிருந்து விடுபட்டு,

பரிசுத்த நிலையை அடைந்து,

அவரோடு பேசுவதன் மூலமும்,
 தவ முயற்சிகள் செய்வதன் மூலமும் 

பரிசுத்தத்தனத்தில் வளர வேண்டும்.

அவரளவு வளர முடியாது.

ஆனால் அவரது அருளால் நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளர வேண்டும்.

நமக்கு தகுதி இல்லை என்று நினைத்து வெளியேறி விடக்கூடாது.

எவ்வளவு தகுதியை அடைய முடியுமோ அவ்வளவு தகுதியை அவர் அருளால் அடைய வேண்டும்.

அவர் விண்ணில் இருந்து இறங்கி வந்ததே நம்மை விண்ணுக்கு ஏற்றிச் செல்வதற்காகத்தான்.

நம்மை விண்ணகத்துக்கு ஏற்றவர்களாக மாற்றுவதற்காகத் தான் இயேசு நம்மோடு தங்கியிருக்கிறார். 

தன்னை நேசிப்பது போல் நம்மையும் நேசிக்கிற நமது ஆண்டவர் 

நம்மோடு தன்னை பகிர்ந்து கொள்ள  

விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கி வந்து நம்மை போல் மனித உரு எடுத்தாரே,

நம்மை நேசிப்பது போல் நமது அயலானையும் நேசிக்கிற நாம் நமது அயலான் நிலைக்கு எப்போதாவது இறங்கியிருக்கிறோமா?

நம்மை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு நம்முடைய உதவி தேவைப்படாது.

நம்முடைய உதவி தேவைப்படுவோர் நம்மை விட தாழ்ந்த நிலையில்தான் இருப்பார்கள். 

தேவைப்படுவோருக்கு உதவும் போது அவர்கள் நிலைக்கு இறங்கி அவர்களோடு நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொள்கிறோமா?

அல்லது நமது நிலையிலிருந்து இறங்காமல் அவர்களுக்கு கொடுக்கிறோமா?

'மகிழ்வாரோடு மகிழுங்கள்:

 அழுவாரோடு அழுங்கள்.


 உங்களுக்குள் ஒன்றுபட்டு வாழுங்கள். 

உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் 

தாழ்ந்தவர்களோடு அன்பாய்ப் பழகுங்கள். 

உங்களை நீங்களே அறிவாளிகளாய்க் கருதாதீர்கள்."
(உரோமையர்.12:15, 16)

என்கிறது பைபிள்.

நாம் மாதச் சம்பளம் வாங்குபவர்களாக இருக்கலாம்.

தினச் சம்பளம் 
வாங்குபவர்களுக்கு உதவ வேண்டியிருந்தால் நம்மை அவர்களை விட உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ளக் கூடாது.

அவர்கள் நிலைக்கு இறங்கி, அவர்களோடு அவர்களாக பழகி, 
நம்மிடம் உள்ளதை அவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கொடுப்பது வேறு, பகிர்ந்து கொள்வது வேறு. 

கொடுப்பவர் கை மேலும் வாங்குபவர் கை கீழும் இருக்கும்.

 பகிர்ந்து கொள்பவர் கை சம நிலையில் இருக்கும்.

இறைமகனே மனு மகனாக மாறித்தான் மனிதர்களுக்கு உதவினார்.

இப்போதும் தன் உடலோடும், ஆன்மாவுடனும்தான் கடவுள் மனிதனாக நம்மோடு நற்கருணையில் வாழ்கிறார்.

நமது உடலையும், இரத்தத்தையும் தான் நமக்கு உணவாக தருகிறார்.

பகிர்ந்து உண்பதுதான் விருந்து. 

இருப்பவர்கள் தங்களிடம் இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இது இயேசு நமக்குக் கற்பிக்கும் பாடம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment