Sunday, September 18, 2022

"எவனும் விளக்கை ஏற்றிப் பாத்திரத்தால் மூடுவதில்லை: கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. உள்ளே வருபவர் ஒளியைக் காணும்படி அதை விளக்குத் தண்டின் மீது வைப்பான்." (லூக்.8:16)

"எவனும் விளக்கை ஏற்றிப் பாத்திரத்தால் மூடுவதில்லை: கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. உள்ளே வருபவர் ஒளியைக் காணும்படி அதை விளக்குத் தண்டின் மீது வைப்பான்."
  (லூக்.8:16)

"நானே உலகின் ஒளி" என்று கூறிய நமது ஆண்டவர்,

"உலகிற்கு ஒளி நீங்கள்." என்றும் கூறியிருக்கிறார்.

நாம் ஆண்டவரைப் போலவே வாழ வேண்டும்,

நமது வாழ்க்கையில் மறு இயேசுவாக திகழ வேண்டும் 

என்பதைத்தான் இப்படி கூறியிருக்கிறார்.

அனைத்தையும் மக்களுக்கு காட்டும் ஒளி தானே மறைவாக இருக்க முடியாது.

யாரும் விளக்கைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்கமாட்டார்கள்,

மாறாக, வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்பொருட்டு, விளக்குத் தண்டின்மீது வைப்பார்கள்.

இயேசு மக்களுக்கு ஒளியாக திகழ்வது போல,

ஒளியாகிய நாமும் மனிதர்முன் ஒளிர வேண்டும்.

ஒளி தன்னை மட்டுமல்ல, நான் படும் பொருட்களை எல்லாம் மக்களுக்குக் காட்டும்.

நாம் ஒளியாக இருந்தால் நாம் செய்யும் நல்ல செயல்களும் மக்களுக்கு தெரியும்.

நல்லவை யாவும் கடவுளிடமிருந்தே வருகின்றன.

கடவுளின் அருளால் நாம் செய்யும் 
நற்செயல்களைக் கண்டு,.

மக்கள் கடவுளை மகிமைப்படுத்த வேண்டும்.

நமது நல்ல செயல்களை மக்கள் பார்க்க வேண்டும் என்று நாம் வாழ்வது நம்மை நாமே விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அல்ல,

கடவுளை மகிமைப்படுத்துவதற்கே.

நாம் எதை செய்தாலும் ஆண்டவரின் அதிமிக மகிமைக்காகவே செய்ய வேண்டும்.

நமது செயல்களில் மக்கள் நமது ஆண்டவரைப் பார்க்க வேண்டும்.

பார்த்து அவரை அறிந்து அவரிடம் வரவேண்டும்.

நமது வாழ்க்கை வெளிப்படையான நற்செய்தி அறிவிப்பு வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

வார்த்தைகள் மூலம் நற்செய்தியை அறிவிப்பதோடு,

வாழ்க்கையில் மூலமும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

நமது ஆண்டவரும் இப்படித்தான் செய்தார்.

அனைவரையும் நேசியுங்கள் என்று சொன்ன இயேசு அவரே அனைவரையும் நேசித்தார்.

தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள் என்று சொன்ன இயேசு,

தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்ன இயேசு,

தங்களுக்கு சுகம் வேண்டும் என்று கேட்ட அனைத்து நோயாளிகளையும் குணமாக்கினார்.

அவரை பின்பற்றும் நாமும் நமது வார்த்தைகளை செயல்களாக மாற்றினால் தான் நம்மை பார்ப்போம் நம்மில் இயேசுவைப் பார்ப்பார்கள்.

இயேசுவே உலகின் ஒளி. 

அவரது ஒளியைப் பிரதிபலிக்கும் நாம் நமது வாழ்க்கையில் மூலம் நாம் பெற்ற இயேசுவை அனைத்து மக்களுக்கும் கொடுக்க வேண்டும்.

இயேசுவைப் போல வாழ்வோம்.
இயேசுவாகவே வாழ்வோம்.

நமது வாழ்க்கையின் மூலம் இயேசுவை அனைவருக்கும் அளிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment