Sunday, September 4, 2022

"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்செல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது"( லூக்.14:27)

"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்செல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது"
( லூக்.14:27)

ஒரு தாத்தா தனது பேரனிடம் ஒரு சிறிய விடுகதைையைப் போட்டார்.

ஒரு வீட்டுக்கு மூன்று விருந்தாளிகள் வந்திருந்தார்கள்.

அப்பா மகனைப் பார்த்து ,

"இதோ பார், மகனே, இந்த பையில் மூன்று மாம்பழங்கள் இருக்கின்றன.

இதை இதை எடுத்துக் கொண்டு போ.

நமது வீட்டிற்கு மூன்று விருந்தாளிகள் வந்திருக்கின்றார்கள்.

ஆளுக்கு ஒரு பழம் கொடு.

மூன்று பேருக்கும் மூன்று பழங்கள்.

கடைசியில் பையில் ஒரு பழம் இருக்க வேண்டும்.

 புரிகிறதா?"

"மூன்று பேருக்கும் மூன்று பழங்கள் கொடுத்தபின் பையில் எப்படி பழம் இருக்கும்?" 

"அது உனது திறமையைப் பொருத்தது."

"சரி . பையைக் கொடுங்கள்."

பையைக் கொண்டு போனவன் சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.

"நீங்கள் சொன்னபடியே கொடுத்துவிட்டேன்."

"எப்படிக் கொடுத்தாய்?"

"முதல் இரண்டு பேருக்கும் பழத்தை எடுத்துக் கொடுத்தேன்.

மூன்றாவது ஆளுக்கு பழத்தைப் பையோடு கொடுத்துவிட்டேன். 

அதாவது பையில் பழம் இருந்தது."

"Very good. இங்கு பழத்தைக் கொடுக்கும் போது செய்ததைப் போல உனது ஆன்மீக வாழ்வில் ஒரு காரியம் செய்ய வேண்டும். யோசித்து அது என்ன காரியம் என்று சொல்லு,'' 

"இதற்கு யோசிக்கவே வேண்டாம். அன்னை மரியாள் செய்தது போல செய்ய வேண்டும்.'

"அன்னை மரியாள் என்ன செய்தாள்?"

'அவள் பை. அவள் வயிற்றில் உற்பவித்த இயேசு கனி.

'இதோ ஆண்டவருடைய அடிமை' என்ற வார்த்தைகள் மூலம்  தன்னை முழுவதுமே ஆண்டவருக்கு அர்ப்பணித்து விட்டாளே.

அதன் பின் அந்த கனியுடன் தானே அர்ப்பண வாழ்வு வாழ்ந்தார்.

இயேசு வாழ்நாள் முழுவதும் தனது தந்தையின் திருச்சித்தத்தை நிறைவேற்றுவதற்காக வாழ்ந்தது போல 

மரியாளும் தந்தையின் திருச்சித்தத்தை நிறைவேற்றுவதற்காகத்தானே வாழ்ந்தாள்.

நமது ஆன்மீக வாழ்விலும் நமது அன்னையைப் போல நாமும் நம்மை முழுவதும் ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழ வேண்டும்."

"மரியாள் தன் வயிற்றில் உற்பவித்த கனியுடன்  அர்ப்பண வாழ்வு வாழ்ந்தார்..

நாம் எதனோடு அர்ப்பண வாழ்வு வாழ?"

"ஆன்மீக வாழ்வு என்பது எல்லோருக்கும் ஒன்றுதான், ஆண்டவருக்காக வாழ்தல்.

புனிதர்கள் ஆண்டவருக்காகத்தான் வாழ்ந்தார்கள்.

நாமும் அவர்களைப் போலவே வாழ வேண்டும்.

நாமும் நம்மை முழுவதும், அன்னை மரியாளை போல, அர்ப்பணித்து வாழ வேண்டும்.

அன்னை மரியாள் தன் வயிற்றின் கனியோடு தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணித்தாள்.

நமது ஆண்டவராகிய இயேசு 
தான் பட்ட பாடுகளையும்,
 சுமந்த சிலுவையையும்,
 சிலுவை மரணத்தையும் நமது பாவங்களுக்கு பரிகாரமாக தனது தந்தையிடம் ஒப்புக்கொடுத்தார்.

நாம் இயேசுவின் சீடர்கள்.

தாயைப் போல பிள்ளை,
 குருவை போல சீடன்.

நாம் நமது வாழ்வின் சிலுவைகளோடு நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.


"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்செல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது"

அதாவது, தன் சிலுவைகளைச் 
சுமந்துகொண்டு இயேசுவைப் பின் செல்பவன்தான் அவருடைய சீடன்.

இயேசுவாகிய கனியுடன் மரியாள் தன்னை அர்ப்பணித்தது போல,

இயேசு தனது சிலுவையையும் (பாடுகளையும்), சிலுவை மரணத்தையும் தன் தந்தைக்கு ஒப்புக் கொடுத்தது போல,

நாம் நமது சிலுவை வாழ்வுடன் நம்மை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்."

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நமது வாழ்க்கையே ஒரு சிலுவை என்பது போல் தோன்றுகிறது."

''கணிதத்தில் புள்ளிகளின் கணம் தான் கோடு என்பார்கள்.
(A line is a set of Points.)

மாணவர்களின் கணம்தான் வகுப்பு.

அதுபோல,

சிலுவைகளின் கணம்தான் ஆன்மீக வாழ்வு.
(Spiritual life is a set of Crosses.)"

"சிலுவை என்ற வார்த்தை நமது துன்பங்களை குறிக்கும். 

ஆன்மீக வாழ்வில் இன்பத்துக்கு இடமே இல்லையா?"

"சிலுவை என்பது நமது வாழ்வில் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மட்டுமல்ல.

ஆசைகளை அடக்கி தவ முயற்சி செய்வதும் சிலுவை தான்.

மனித வாழ்க்கை ஆசைகளால் நிறைந்தது.

ஆசையே இல்லாவிட்டால் அது வாழ்க்கை அல்ல.

உலக பொருள்களின் மீது மட்டும் நமக்கு ஆசைகள் இருந்தால் நாம் வாழ்வது லௌகீக வாழ்க்கை.

விண்ணகத்தின் மீது மட்டும் ஆசைகள் இருந்தால் நாம் வாழ்வது ஆன்மீக வாழ்க்கை.

இயேசுவின் சீடன் வாழ வேண்டியது ஆன்மீக வாழ்க்கை.

நாம் ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் நாம் உலகில் வாழும் மனிதர்கள் என்பதால் நமது வாழ்வில் உலகப் பொருள்கள் மீது ஆசை வரும்.

அவ்வாறு வரும் ஆசையை அடக்கி அதை விண்ணக வாழ்வுக்காக கடவுளுக்கு ஒப்பு கொடுக்கும் போது அது சிலுவையாக மாறிவிடுகிறது.

உதாரணத்துக்கு, பசி வரும்போது சாப்பிட ஆசைப்படுவது மனித இயல்பு. ருசியாக சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவதும் மனித இயல்புதான்.

ருசியைப் பற்றிய ஆசையை அடக்கி, நமது உணவை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து சாப்பிட்டால் அது சிலுவையாகிறது.

அதற்காகத்தான் சாப்பிடு முன்னும் சாப்பிட்ட பிறகும் செபம் சொல்கிறோம்.

நமது வாழ்நாளின் போது ஒவ்வொரு வினாடியும் ஏற்படும் ஆசையில் ஆன்மீகத்தைப் புகுத்தி அதை கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கும் போது அது சிலுவையாக மாறுகிறது.

கடவுளுக்காக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஒரு சிலுவை தான்.

தூங்குவது, எழுவது, உண்பது, உடுப்பது, வேலைக்குப் போவது, சம்பளம் வாங்குவது, அதை செல்லவழிப்பது எல்லாம் ஆண்டவருக்காக செய்யப்படும்போது அவை சிலுவைகளாக மாறி விடுகின்றன.

ஆண்டவருக்காக தூங்குபவன் ஓய்வு நேரத்தில் மட்டும் குறிப்பிட்ட கால அளவு தூங்கி அதை கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பான்.

ஆண்டவருக்காக எழுபவன் எழவேண்டிய நேரத்தில் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் எழுவான்.

ஆண்டவருக்காக உண்பவன் தான் உண்ணும் உணவை கடவுளுக்கு ஒப்பு கொடுப்பான். உணவை தந்த கடவுளுக்கு நன்றி கூறுவான்.

ஆண்டவருக்காக உடுப்பவன் உலகக் கவர்ச்சி இல்லாத ஒழுக்கமான உடையை உடுத்துவான். அரைகுறை ஆடையை அணிய மாட்டான்.


ஆண்டவருக்காக வேலைக்குப் போகின்றவன் ஆண்டவரின் திருப்திக்காக மனசாட்சியுடன் வேலை செய்வான். 

ஆண்டவருக்காக சம்பளம் வாங்குபவன் தனக்காக மட்டுமல்லாமல் பிறர் சிநேக பணிகளுக்காகவும் பயன்படுத்துவான்."

"நீங்கள் சொல்வதை பார்த்தால் மூச்சு விடுவது கூட சிலுவை போல் தெரிகிறது."

"பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணிபுரிபவர் ஓய்வு நேரத்தில் Staff roomல் ஓய்வு எடுப்பதும் பணியோடு சேர்ந்ததுதானே.

நமது வாழ்வையே சிலுவையாக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சிலுவை தான்.

வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களும், துன்பங்களும், நோய் நொடிகளும்  

கடவுளுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டு அவருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டால் அவைகளும் சிலுவைகள்தான்."

"தாத்தா, அவைகளும் சிலுவைகள்தான், என்கிறீர்கள். நான் அவைகள்தான் சிலுவைகள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்."

"வாழ்க்கை என்பது அவைகள் மட்டுமல்ல.

தனது தேவ சுபாவத்தில் இயேசுவால் சிலுவையைச் சுமக்க முடியாது.

சிலுவையைச் சுமந்து, அதில் மரித்து, அதன் மூலம் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காகத்தான் இயேசு மனிதனாகப் பிறந்தார்.


 சர்வலோகத்துக்கும் சொந்தக்காரரான கடவுளாகிய அவர் மனிதனாய்ப் பிறக்கும்போது மிக ஏழையாய்ப் பிறந்தார்.

சூசையப்பருக்குச் சொந்தமாய் வீடு இருந்தது. ஆனால் இயேசு யாரோ ஒருவருடைய மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.

சர்வ வல்லப கடவுளாகிய அவர் சாதாரண மனிதனாகிய ஏரோதுவுக்குப் பயந்து எகிப்து நாட்டுக்குச் செல்லுமளவிற்கு நிலையை ஏற்படுத்திக் கொண்டார்.

நினைத்தவுடன் உலகை உருவாக்கிய கடவுளாகிய அவர் தச்சு வேலை செய்து சாப்பிட்டார்.

நசரேத் ஊரில் தன் தாயுடன் சொந்த வீட்டில் வளர்ந்தாலும் பொது வாழ்வில் தலை சாய்க்கக் கூட இடமில்லாதவராய் வாழ்ந்தார்.

ஆக இயேசுவின் வாழ்க்கை முழுவதும் ஒறுத்தல் வாழ்வுதாவுதான், அதாவது, சிலுவை வாழ்வுதான்.

அவருடைய சீடர்களாகிய நமது வாழ்வும் ஒறுத்தல் வாழ்வாகத்தானே இருக்க வேண்டும்.

அதனால்தான் "தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்செல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது" என்கிறார்.

நாமும் ஒவ்வொரு வினாடியும் சிலுவையைச் சுமப்போம்,

இயேசுவைப் போல் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment