திமிர்வாதக்காரனை நோக்கி -- "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ" என்றார்" ( மாற்கு.2:10,11)
இயேசு அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்று,
அதன் பின்பு நாற்பது பகலும், நாற்பது இரவும் நோன்பிருந்து,
அதன் பின்புதான் தனது நற்செய்திப் பணியை ஆரம்பித்தார்.
அவர் தச்சுத் தொழில் செய்து வாழ்ந்த நாசரேத்தூரை விட்டு,
செபுலோன், நப்தலி நாட்டில் கடலோரமாயுள்ள கப்பர்நகூமுக்கு வந்து குடியிருந்தார்.
அங்கிருந்துதான் இயேசு, "மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவிக்கத் தொடங்கினார்.
ஒரு நாள் அவர் வீட்டில் இருந்தபோது அவர் சொல்வதை கேட்பதற்காகவும், அவர் கையால் குணம் பெறவும் ஏராளமான மக்கள் வந்தார்கள்.
அவர்களுக்கு அவர் போதித்துக் கொண்டிருந்தபோது திமிர்வாதக்காரன் ஒருவனை நால்வர் சுமந்து கொண்டு வந்தனர்.
கூட்ட மிகுதியால் அவர்முன் அவனைக் கிடத்த முடியாமல் அவர் இருந்த வீட்டின் மேல்தட்டைப் பிரித்து, திறப்பு உண்டாக்கி, திமிர்வாதக் காரன் படுத்திருந்த படுக்கையை இறக்கினர்.
இயேசு நற்செய்தி அறிவிக்கச் சென்ற இடத்தில் எல்லாம் நற்செய்தியை அறிவித்ததோடு,
தன்னைப் பார்க்க வந்த நோயாளிகளை எல்லாம் குணமாக்கினார்.
ஏன் நோயாளிகளைக் குணமாக்கினார்?
அதிலும் நற்செய்திப்பணி இருந்ததால்தான்.
நற்செய்திப் பணிக்கும், நோயாளிகளைக் குணமாக்கியதற்கும் என்ன சம்பந்தம்?
நற்செய்திப் பணியின் நோக்கம் என்ன?
இறைவனிடம் மக்களுக்கு விசுவாசத்தை வளர்த்தல்.
பாவ மன்னிப்பு.
விசுவாச வாழ்க்கை வாழ்ந்து,
பாவ மன்னிப்பு பெற்றால் தான் நம்மால் விண்ணகம் செல்ல முடியும்.
விசுவாசம் இறைவன் நமக்கு இனாமாகத் தரும் ஒரு பரிசு. அதை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்வது நமது கடமை.
தன்னிடம் சுகம் பெற வருவோர்க்கெல்லாம் இயேசு முதலில் விசுவாசத்தைப் பரிசாக அளிக்கிறார்.
அடுத்து அவர்களது பாவங்களை மன்னிக்கிறார்.
பாவங்களை மன்னிக்கிறார் என்றாலே அதற்கான மனஸ்தாபத்தையும் பரிசாக அளித்திருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
அடுத்து குணமளிக்கிறார்.
குணமளித்த பின்,
"உனது விசுவாசம் உன்னை குணமாக்கிற்று என்கிறார்.
திமிர்வாதக்காரனை குணமாக்கிய புதுமையில்,
அவர்கள் விசுவாசத்தைக் கண்டு
(அதாவது அவர் அளித்த பரிசை ஏற்றுக் கொண்டதை கண்டு)
திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
அதன் பின்,
''மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"
திமிர்வாதக்காரனை நோக்கி -- "நான் உனக்குச் சொல்லுகிறேன்:
எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ" என்றார்.
என்றதும், அவன் எழுந்து தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு எல்லாருக்கும் முன்பாக வெளியேறி சென்றான்."
அவருக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டு என்பதை நிரூபிப்பதற்காகத்தான் அவனை குணமாக்குகிறார்.
கடவுள் ஒருவருக்கே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு.
ஆகவே தான் செய்த புதுமையினால் தான் கடவுள் என்பதையும் நிரூபிக்கிறார்.
இயேசு மண்ணுலகில் மனிதனாக பிறந்ததே நமது பாவங்களை மன்னிப்பதற்காகத்தான்.
அவரது பாடுகள், சிலுவை மரணம் உட்பட,
அவரது ஒவ்வொரு செயலும்,
அதை நோக்கமாக கொண்டதாகவே இருக்கும்.
இந்த உண்மையை நாம் ஒவ்வொருவரும் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கடவுளிடம் ஏதாவது ஒரு உதவியை கேட்கும் போது,
முதலில் நமது விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடுத்து நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற வேண்டும்.
இந்த இரண்டும் இருந்தால் தான் நாம் கேட்கும் உதவி கிடைக்கும்.
ஒருவருக்கு ஒரு நோய் வருகிறது என்றால்
கடவுள் அவரது விசுவாசத்தை உறுதிப்படுத்தி
அவரது பாவங்களை மன்னிக்க விரும்புகிறார்
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே பசி வருகிறது.
நாம் நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தி, பாவ மன்னிப்பும் பெறவே நமக்குத் துன்பங்கள் ஏற்படுகின்றன.
இதை உணர்ந்து செயல்பட்டால் நாம் ஒவ்வொரு நிமிடமும் நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தி, பாவ மன்னிப்பும் கேட்போம்.
நமக்கு கஷ்டங்கள் வரும்போது நான் செய்ய வேண்டிய முதல் வேலை,
நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தும்படி இறைவனிடம் வேண்ட வேண்டும்.
கஷ்டங்கள் நீங்க வேண்டுமென்று ஆசித்தால் கடவுளை நோக்கி,
"ஆண்டவரே உமக்கு சித்தம் இருந்தால் எனது கஷ்டங்களை நீக்கியருளும்." என்று செபிக்க வேண்டும்.
நமது விசுவாசம் நன்கு உறுதிப்பட்டால் நாம் இப்படி செபிப்போம்:
"ஆண்டவரே நீர் எங்களுக்காக பாரமான சிலுவையை சுமந்தீர்.
நான் எனக்கு வந்திருக்கும் கஷ்டங்களை எனது பாவங்களுக்கு பரிகாரமாகவும்,
உமது மகிமைக்காகவும்
சிலுவையாய்ச் சுமக்க எனக்கு வேண்டிய அருள் உதவி செய்யும்."
இன்று விண்ணுலகில் வாழும் புனிதர்கள் இவ்வுலகில் வாழும்போது தங்களுக்கு வந்த கஷ்டங்களை பொறுமையோடு சிலுவையாய் சுமந்தவர்கள்தான்.
புனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள பக்தி நமது ஆன்மீக வாழ்வில் அவர்களைப் பின்பற்ற நமக்கு உதவ வேண்டும்.
அதற்கான அருள் வரத்தை ஆண்டவரிடம் கேட்டு வேண்ட வேண்டும்.
நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தவும்,
நமக்கு பாவ மன்னிப்பை பெற்றுத் தரவுமே
நமக்குத் துன்பங்கள் வருகின்றன.
துன்பங்கள் வரும்போது இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment