Monday, August 1, 2022

"கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே.".(1 திமோ2:6)(தொடர்ச்சி)

"கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே.".
(1 திமோ2:6)
(தொடர்ச்சி)

"பேரப்புள்ள, நேற்று நீ கேட்ட கேள்வியை திரும்பவும் சொல்லு. "

கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே."

என்று புனித சின்னப்பர் சொல்லியிருக்கிறாரே.

இயேசு ஒருவர் தானே நம்மையும் கடவுளையும் இணைப்பவர்.

நமது ஆன்மீக வாழ்வுக்கு இயேசுவின் உதவி மட்டும் போதாதா?

நம் மீது கொண்ட அன்பினால் மனிதனாக பிறந்து நமக்காக பாடுகள் பட்டு மரித்தவர் நாம் வேண்டினால் கேட்க மாட்டாரா?

ஏன் புனிதர்களையும் உதவிக்கு அழைக்கிறோம்?"

",கடவுளையும் மனிதரையும் இணைப்பவர் இயேசுவே என்பதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

தனது பாடுகளாலும், சிலுவை மரணத்தாலும் நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு,

நாம் இழந்து விட்டிருந்த இறையுறவை திரும்பவும் பெற்றுத் தந்தவர் அவர்.

அதாவது நமது மீட்பர் இயேசு ஒருவரே.

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நம்மிடம் சொன்னவரும் அவர் ஒருவரே.

புனிதர்கள் மீது நாம் வைத்திருக்கும் பக்தியினால் இயேசுவைப் பற்றிய எந்த உண்மையும் மாறி விடப் போவதில்லை.

இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசம் சிறிதும் குறையப் போவதில்லை.

மாறாக நமது விசுவாசம் அதிகரிக்கும்.

இப்போது நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லு.

புனிதர்கள் யார்?

பதில் இரண்டே வார்த்தைகளில்."

"நமது சகோதரர்கள்."

", எப்படி நமது சகோதரர்கள்?"

"கத்தோலிக்க திருச்சபை என்னும் நமது ஆன்மீகக் குடும்பத்தின் உறுப்பினர்கள். நம் அனைவருக்கும் ஒரே தந்தை, விண்ணகத் தந்தை.

நம் அனைவருக்கும் ஒரே மீட்பர், இயேசு கிறிஸ்து."

", நமது குடும்ப உறுப்பினர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள்?"

"1 இவ்வுலகில்.
2, உத்தரிக்கிற ஸ்தலத்தில்.
3. மோட்சத்தில்."

", இயேசு நமக்குக் கொடுத்துள்ள முக்கிய கட்டளைகள் யாவை?" 

"எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி.

உன்னை நேசிப்பது போல் உனது அயலானையும் நேசி."

", அயலான் யார்?"

" இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் நமது அயலான்கள்தான்."

", குடும்ப உறுப்பினர்களை நேசிக்க வேண்டுமா?"

"சந்தேகம் இல்லாமல். அவர்களும் 
நமது அயலான்கள்தானே!"

", எப்படி நேசிக்க வேண்டும்?"

"நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நேசிக்க வேண்டும்.

அதாவது உள்ளத்தில் உள்ள அன்பு சொல்லிலும், செயலிலும் வெளிப்பட வேண்டும்."

",எப்படி எல்லாம் நமது அன்பை வெளிப்படுத்தலாம்?"

அவர்களோடு அன்போடு பேசலாம். அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்யலாம்."

அவர்களுக்குத் தேவையானதை கொடுக்கலாம்.

அவர்களால் செய்ய முடியாததை அவர்களுக்காக செய்து கொடுக்கலாம்.

அவர்களுக்காக அவர்களுக்காகப் பரிந்து பேசலாம்."

", பரிந்து பேசுவதற்கு ஒரு உதாரணம் கொடு."

"நான் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பையன் பள்ளியில் சேர்வதற்காக வருகிறான்.

என்னிடம் வந்து உதவி கேட்கிறான்.

நான் தலைமை ஆசிரியரிடம் சென்று அவனுக்காக பரிந்து பேசி Admission பெற்றுக் கொடுக்கலாமே."

",அவனுக்கு தலைமை ஆசிரியரை தெரியாது. நீ அவனுக்காக பரிந்து பேசுவாய். அவனுக்கு ஏற்கனவே அவரை தெரிந்திருந்தால் நீ பரிந்து பேச வேண்டிய அவசியம் இல்லையே."

",தாத்தா, எனக்கு என்னுடைய அப்பாவை நன்கு தெரியும்.

 ஆனாலும் எத்தனை முறை எனது அம்மா அப்பாவிடம் எனக்காக பரிந்து பேசியிருக்கிறார்கள் தெரியுமா!

அன்பு தான், தாத்தா, முக்கியம். அன்பு இருந்தால் யாருக்காக வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் பகிர்ந்து பேசுவோம்."

",குடும்ப அங்கத்தினர்கள் ஒருவருக்காக ஒருவர் பரிந்து பேசுவது ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அன்பின் காரணமாகத்தான்.

நமது விண்ணக தந்தை இறைவன்.

மோட்ச வாசிகளும், உத்தரிக்கிறவர்களும்,
உலகில் வாழும் நாமும்

ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம்.

மோட்ச வாசிகள் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டார்கள். அவர்களுக்காக யாரும் பரிந்து பேச வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் அவர்கள் உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காகவும், உலகில் வாழும் நமக்காகவும் இறைவனிடம் பரிந்து பேசலாம்.

உத்தரிக்கிற ஆன்மாக்கள் நமக்காகப் பரிந்து பேசலாம்.

நாம் உலகில் வாழ்பவர்களுக்காகவும், உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காகவும் பரிந்து பேசலாம்.

உலகில் வாழும் நாம் ஒருவருக்காக ஒருவர் இறைவனிடம் பரிந்து பேசும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நமது இல்லங்களுக்கு வந்து நமக்காக செபிக்கும்படி மற்றவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

நாமும் மற்றவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களுக்காக செபிக்கிறோம்.

அதில் யாரும் குறை காண்பதில்லை.

அதேபோல்தான் விண்ணகத்தில் வாழும் புனிதர்களிடமும் நமக்காக செபிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இதில் என்ன தவறு இருக்கிறது?"

"தாத்தா, தவறு எதுவும் இல்லை என்று நமக்குத் தெரியும்.

புனிதர்கள் வேண்டாம் என்பவர்கள் கேட்பது

 சர்வ வல்லவராகிய கிறிஸ்து நமது ஒரே மீட்பராகவும், கேட்டதைத் தருபவராகவும் இருக்கும்போது ஏன் மனிதர்களாகிய புனிதர்களின் உதவியை நாட வேண்டும் என்றுதான்."

"உன்னிடம் அப்படி கேட்பவர்களிடம் நீ கேள்:  

அப்பா, அம்மா உயிரோடு இருக்கும்போது குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளக் கூடாதா?

நாம் எல்லோரும் கிறிஸ்துவின் குடும்பத்தில் உறுப்பினர்கள்.

ஒருவரை ஒருவர் நேசிக்கவும் ஒருவருக்கொடுவர் உதவி செய்யவும் கடமைப்பட்டவர்கள்.

இருந்தாலும், இறந்தாலும் கிறிஸ்துவில் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே.

கிறிஸ்து நம்மோடு எப்போதும் இருப்பது போல அவரோடு இணைந்து விண்ணில் வாழும் புனிதர்களும், மற்றவர்களும் நம்மோடுதான் இருக்கிறார்கள்.

நாம் அனைவரும் இறையன்பிலும் பிறரன்பிலும் கிறிஸ்துவோடு இணைந்து இருக்கிறோம்.

நமது இறையன்பும், பிறரன்பும் 
வெறும் சிந்தனையில் மட்டும் இருந்தால் போதுமா?

சொல்லிலும், செயலிலும் வெளிப்பட வேண்டாமா?

சொல்லிலும், செயலிலும் வெளிப்பட முடியாத அன்பினால் என்ன பயன்?

கடவுள் அளவு கடந்த அன்பு உள்ளவர் என்பது நமக்கு எப்படி தெரியும்?

நம்மைப் படைத்து, பராமரித்து வருவதால் தானே.

தனது பாடுகளினாலும், சிலுவை மரணத்தினாலும் தானே இயேசு நம் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தினார்.

இன்றும் திவ்ய நற்கருணை மூலம் அவரையே நமக்கு உணவாகத் தந்து தானே தனது அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

உண்மையான அன்பினால் செயல்படாமல் இருக்க முடியாது.

இது உலக வாசிகளுக்கும் விண்ணக வாசிகளுக்கும் பொருந்தும்.

நமக்காக பரிந்து பேசுவதன் மூலமும், நமக்கு வேண்டிய உதவிகள் செய்வதன் மூலமும் விண்ணகவாசிகள் தங்கள் அன்பை வெளிப் படுத்துகின்றார்கள்.

நாம் ஒருவரோடொருவர் எண்ணங்களை பரிமாறிக் கொள்வது நமது ஒற்றுமையான குடும்ப உணர்வுக்கு அடையாளம்.

ஒருவரை ஒருவர் நேசியுங்கள் என்று நம்மிடம் கூறிய இயேசு நமது அன்பை அவர் மூலமாக பரிமாறிக் கொள்ளும்போது மிகவும் மகிழ்ச்சி அடைவார்.

புனிதர்களிடம் செபிக்கும் போது நமது அன்பை அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமக்காக அவர்கள் இயேசுவிடம் பரிந்து பேசும்போது நம் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

 நாம் இவ்வாறு அன்பை பரிமாறி கொள்வது தான் ஒருவரை ஒருவர் நேசியுங்கள் என்று சொன்ன இயேசுவுக்குப் பிடிக்கும்."

" கடவுள் மாறாதவர். மாறாமையை தனது இயல்பாக (Nature)க் கொண்ட கடவுளை மாற்ற முடியாது.

அவருடைய திட்டங்கள் யாவும் நித்தியமானவை.

நம்மை எப்படி வழி நடத்த வேண்டும் என்று அவர் நித்திய காலமாக திட்டமிட்டிருக்கிறார்.

மாறாத கடவுளின் நித்திய கால திட்டத்தை எப்படி நமது செபத்தாலோ புனிதர்கள் செபத்தாலோ மாற்ற முடியும்?"

(தொடரும்.)

லூர்து செல்வம்.



.

No comments:

Post a Comment