Sunday, August 21, 2022

நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவற்றை விட்டுவிட்டீர்கள்.( மத்.23:23)

நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவற்றை விட்டுவிட்டீர்கள்.
( மத்.23:23)

  ஒருவன் விலை கொடுத்து ஒரு மாம்பழத்தை வாங்கி, அதன் தொலியை மட்டும் உரிந்து சாப்பிட்டு விட்டு, உள்ளே உள்ள பழத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டால்,

அவனை என்னவென்று அழைக்கத் தோன்றும்.

மன நிலை பாதிக்கப் பட்டவன் என்றுதானே!

மோயீசன் எழுதிக் கொடுத்த திருச்சட்டப்படி வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை கோவிலுக்குக் கொடுத்து விட்டு,

அதே திருச்சட்டம் போதிக்கும் நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவற்றை விட்டுவிட்ட மறைநூல் அறிஞர்களையும், பரிசேயரகளையும் எப்படிப்பட்டவர்கள் என்று அழைக்கலாம்?

காணிக்கையை செலுத்த வேண்டாம் என்று ஆண்டவர் சொல்லவில்லை.

ஆனால் நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவற்றை வாழ்வாக்க வேண்டும் என்று தான் சொல்கிறார்.

கடவுளுக்கு தேவை நமது பணம் அல்ல, வாழ்க்கை.

விசுவாசமும், நீதியும், இரக்கமும் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல.

நெல்லை Rice mill க்குக் கொண்டு போய், குத்தி, அரிசியை அங்கேயே போட்டு விட்டு, உமியை மட்டும் வீட்டுக்குக் கொண்டு வந்தால்,

அதைச் சமைத்துச் சாப்பிட முடியுமா?

ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு போய், காணிக்கை போட்டுவிட்டு, பூசை நேரத்தில் பராக்கு பார்த்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தால் பூசைக்கு உரிய பலன் கிடைக்குமா?

அதே போல் தான் ஆண்டவருக்கு விருப்பமான விசுவாசம், நீதி, இரக்கப்படி வாழாமல்,

 காணிக்கையை மட்டும் ஒழுங்காய் கொடுத்து வந்தால்

நமது வாழ்க்கை ஆண்டவருக்கு ஏற்றதாக இருக்குமா?

கோவிலுக்கு கட்டாயம் காணிக்கை கொடுக்க வேண்டும்.

ஆனால் ஆண்டவர் சொன்னபடி வாழாவிட்டால் காணிக்கையால் எந்த பயனும் இல்லை.

வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை காணிக்கையாக கொடுக்க வேண்டுமா?

இது பழைய ஏற்பாட்டு சட்டம்.

நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியை செய்ய வேண்டும் என்றுதான் தாய்த் திருச்சபை கூறுகிறது.

திருச்சபை சொல்கிறபடி வாழ்வோம்.

ஆண்டவருக்கு ஏற்ற கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு,

நமது ஞான மேய்ப்பர்களுக்கு உதவ காணிக்கையும் செலுத்துவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment