Monday, August 22, 2022

"நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூயதாக்குகிறீர்கள். ஆனால், உள்ளே கொள்ளையும் துர் இச்சையும் நிறைந்துள்ளன"(மத்.23:25)

"நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூயதாக்குகிறீர்கள். ஆனால், உள்ளே கொள்ளையும் துர் இச்சையும் நிறைந்துள்ளன"
(மத்.23:25)

பள்ளிக்கூட மாணவன் ஒருவன் தான் என்னென்ன பாடங்களை வீட்டில் படிக்க வேண்டும் என்று ஆசிரியர் கூறிய குறிப்புகளை ஒரு பேப்பரில் எழுதி அதை தன்னுடைய tiffin carrier ல் வைத்தான்.

வீட்டிற்கு வந்து அந்த பேப்பரை எடுக்கவும் இல்லை, வீட்டுப்பாடத்தை படிக்கவும் இல்லை.

மறுநாள் பள்ளிக்கூடத்தில் மதிய உணவு வேளையின் போது பாத்திரத்தை திறந்து, சாப்பிட ஆரம்பித்தான்.

கடைசியில் உணவை அள்ளும்போது அவன் முந்திய நாள் வைத்திருந்த பேப்பரும் கையில் வந்தது.

அவனுக்கு அம்மா மீது கோபம் கோபமாக வந்தது.

 பாத்திரத்தின் உட்பகுதியை தேய்க்காமல் வெளிப்புறத்தை மட்டும் தேய்த்து விட்டு பாத்திரத்திற்குள் சாப்பாட்டை வைத்திருக்கிறார்கள்.

மாலையில் வீட்டிற்கு வந்தவுடன் அம்மாவை பார்த்து கத்தினான்.

"பாத்திரத்தில் உள்பகுதியைத் தேய்க்காமல் சாப்பாட்டை வைத்தது எனது தப்புதான்.

 ஆனால் இதிலிருந்து நீ ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். 

வீட்டுப்பாடத்தைப் படித்து அதை மனதில் ஏற்றாமல் வெளிப்புறத்தில் uniform சட்டையை அணிந்து கொண்டு பள்ளிக்கூடம் போனது உனது தப்பில்லையா?

உன்னை மாணவன் ஆக்குவது உனது பாடமா அல்லது சீருடையா?"

"பாடம்தான். ஆனால் சீருடை அணிந்தால் தானே மாணவன் போல் தெரியும்."

"நீ படிப்பதற்காக பள்ளிக்கூடம் போகிறாயா? மாணவன் போல் தோன்றுவதற்காக பள்ளிக்கூடம் போகிறாயா?"

.நம்மில் அநேகர் எப்படி வாழ வேண்டும் என்பதை விட,

 எப்படி வாழ்வதுபோல் தோன்ற வேண்டும் என்பதையே அதிகம் விரும்புகின்றனர்.

தோன்றுவது புறம். வாழ வேண்டியது அகம்.

ஒருவனுடைய செயல்களைத் தீர்மானிப்பது அவனுடைய உள்ளம்.

உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள்தான் சொல்லாகவும், செயலாகவும் வெளிப்படுகின்றன.

நல்லதை எண்ணுபவன் நல்லதைப் பேசுவான், நல்லதைச் செய்வான்.

உள்ளத்தில் கெட்ட எண்ணங்களுக்கு இடம் கொடுப்பவன் கெட்ட செயல்களில்தான் ஈடுபடுவான்.

உடலின் வெளிப்புறத்தை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்வதால் ஆன்மாவுக்கு எந்த பயனும் இல்லை.

ஞாயிற்றுக் கிழமை காலையில் குளித்து, சுத்தமான உடை அணிந்து கோவிலுக்குப் போவதால் மட்டும் ஒருவன் திருப்பலியில் கலந்துகொள்ளத் தகுதி அடையப் போவதில்லை.

 ஆன்மாவில் பாவமாசு இல்லாமல் பரிசுத்தமாய் இருப்பது தான் திருப்பலி காண தகுதியை தரும்.

உள்ளத்தை நன்கு பரிசோதித்து பாவம் இருந்தால் பாவ சங்கீர்த்தனம் செய்து உள்ளத்தை பரிசுத்தமாக்கிய பின்தான் திருப்பலியிலும், திரு விருந்திலும் கலந்து கொள்ள வேண்டும்.

அழுக்கான உடை அணிந்து வருபவர்களிடம் ஆண்டவர் வர தயங்க மாட்டார். 

ஆனால் அழுக்கான உள்ளத்தோடு
  வருபவர்களிடம் ஆண்டவர் வர விரும்ப மாட்டார்.

 சிலர் வெளி கவர்ச்சிக்காக தகுதியற்ற உடை அணிந்து திருப்பலிக்கு வருவதால் மற்றவர்களுடைய கண் கெட காரணமாகிறார்கள்.

அதனால் மற்றவர்கள் செய்யும் பாவத்திற்கு அவர்கள் பொறுப்பாளி ஆகிறார்கள்.

சிலர் நல்ல நடிகர்கள். உள்ளத்தில் ஆயிரம் கெட்ட எண்ணங்களை வைத்துக்கொண்டு வெளியில் நல்லவர்கள் போல நடிப்பார்கள்.

 வெளிவேடதாரிகளாகிய (hypocrites) இவர்களை ஆண்டவர் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என்கிறார்.

இவை வெளிப்பார்வைக்கு அழகாக இருக்கும்..

உள்ளே அழுகிய உடல் அல்லது எலும்புக் கூடுகள் இருக்கும்.

இவர்களால் சமூகத்திற்குக் கேடு.

நம்மால் சமூகம் பயன் பெற வேண்டுமென்றால், நமது எண்ணம் நல்லதாக இருப்பதோடு,

 எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றோடொன்று முரண்பாடு இல்லாததாக இருக்க வேண்டும்.

முதலில் நமது அகத்தைச் சுத்தமாக்குவோம்.

புறம் தானாகச் சுத்தமாகிவிடும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment