(1 திமோ2:6)
(தொடர்ச்சி)
", பேரப்புள்ள, 'நேற்று கடைசியில் நீ கேட்ட கேள்வியைத் திரும்பவும் கேளு."
"கடவுள் மாறாதவர். மாறாமையை தனது இயல்பாக (Nature)க் கொண்ட கடவுளை மாற்ற முடியாது.
அவருடைய திட்டங்கள் யாவும் நித்தியமானவை.
நம்மை எப்படி வழி நடத்த வேண்டும் என்று அவர் நித்திய காலமாக திட்டமிட்டிருக்கிறார்.
மாறாத கடவுளின் நித்திய கால திட்டத்தை எப்படி நமது செபத்தாலோ புனிதர்கள் செபத்தாலோ மாற்ற முடியும்?"
",பேரப்பிள்ளை உன்னுடைய கேள்வியில் ஒரு பிழை இருக்கிறது."
"கேள்வியில் ஒரு பிழையா? தேர்வு எழுதுகிறவன் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் எழுத வேண்டும்.
கேள்வியில் பிழை உள்ளது என்று எழுதினால் எப்படி மதிப்பெண் கிடைக்கும்?"
",யாராவது உன்னிடம் 'இந்தியாவை ஏன் ஒரு தீவு என்று அழைக்கிறோம்?' என்று கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய்?"
"கேள்வி தவறு என்று சொல்வேன்."
",அதைத்தான் நானும் சொல்கிறேன்."
"என்ன பிழை?"
",மாறாத கடவுளின் நித்திய காலத் திட்டத்தை மாற்ற நாமோ புனிதர்களோ செபிக்கவில்லை.
செபிக்கிற சாதாரண மக்களுக்கு நம்மைப் படைத்தவர் கடவுள், நாம் கேட்டதைத் தருவார் என்று மட்டும் தெரியும். கடவுளின் திட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாது.
புனிதர்களுக்கு கடவுளின் திட்டத்தைப் பற்றித் தெரியும். அதை மாற்ற செபிக்க மாட்டார்கள்."
"அப்படியானால் கேள்வி எப்படி இருக்க வேண்டும்?"
",கேள்வியை விடு, நான் சொல்வதைக் கேள்.
கடவுள் நிறைவானவர். (Perfect)
ஆகவே அவரால் மாற முடியாது.
குறைவானது (Imperfect) மட்டுமே வளர்ச்சி அடைய மாற வேண்டும்.
மனிதர்கள் குறைவானவர்கள். ஆகவேதான் மாறிக் கொண்டேயிருக்கிறோம்.
கடவுளுடைய அன்பு மாறாதது. கடவுள் நம்மை நித்திய காலமாக அன்பு செய்கிறார். அந்த அன்பு ஒருபோதும் மாறாது.
நாம் பாவம் செய்யும்போது நாம்தான் அவர்மீது நாம் கொண்டுள்ள அன்பை இழக்கிறோம். மாறுகிறோம்.
ஆனால் நம்மீது கடவுளுக்கு இருக்கும் அன்பு மாறாது.
லூசிபெரை (Lucifer) எந்த அளவு நேசித்தாரோ அதே அளவுதான் சாத்தானையும் நேசிக்கிறார்.
மோட்ச வாசிகளை எந்த அளவு நேசிக்கிறாரோ, அதே அளவு நரகவாசிகளையும் நேசிக்கிறார்.
மோட்ச வாசிகள் அந்த அன்பை அனுபவிக்கிறார்கள்.
நரகவாசிகளால் அனுபவிக்க முடியாது.
நாம் பாவம் செய்யும்போது நாம்தான் அவரை விட்டு பிரிகிறோம்.
நமது பாவத்திற்கு மனஸ்தாபப்பட்டு நம்மை ஏற்றுக் கொள்ளும்படி கடவுளை மன்றாடுகிறோம்.
அவரும் ஏற்றுக் கொள்கிறார். நாம் மாறுகிறோம்.
உனக்கு இப்போது ஒன்று புரிந்திருக்கும். நாம் மாறுவதற்காகத் தான் செபிக்கிறோம், கடவுளை மாற்றுவதற்காக அல்ல.
கடவுளின் எல்லா திட்டங்களும் நமது நன்மைக்கே. அவற்றை ஏன் மாற்ற வேண்டும்?"
"கடவுள் மாறாதவர், மனிதனாய்ப் பிறந்த இயேசு?"
",இயேசுவைப் பற்றி கேள்வி கேட்கும் போதெல்லாம் ஒரு முக்கியமான உண்மையை மனதில் வைத்திருக்க வேண்டும்.
இயேசுவுக்கு இரண்டு சுபாவங்கள் அவர் முற்றிலும் கடவுள்(Fully God) முற்றிலும் மனிதன்.(Fully Man)
தேவ சுபாவத்தில் தந்தையோடும் பரிசுத்த ஆவியோடும் ஒன்றானவர்.
நித்தியர். துவக்கமும் முடிவும் இல்லாதவர்.
மனித சுபாவத்தில் மரியாளின் வயிற்றில் மனிதனாய் உற்பவித்தார்.
பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார், பாடுகள் பட்டார், மரித்தார்.
நம்மை போலவே துவக்கமும் முடிவும் உள்ளவர்.
பாவம் தவிர மற்ற எல்லா பண்புகளிலும் அவர் முழுமையான மனிதர்.
நமக்காகவே சர்வ வல்லவராகிய அவர், பாவம் தவிர, மற்ற மனித பலகீங்களை தன்னுடையவையாக ஏற்றுக் கொண்டார்.
மரணமே அடைய முடியாத இறைமகன் நமக்காக சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டார்."
"தாத்தா, ஒரு நிமிடம்.
மாறவே முடியாத இறைவனின் மகன் நம்மை மீட்பதற்காக,
தந்தையின் சித்தத்தை நிறைவேற்றி,
மாற்றத்திற்கு உட்பட்ட, மனித குலத்தில் பிறந்து,
பாடுகள் பட்டு, மரித்திருக்கும் போது
நாம் துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக,
செபத்தின் மூலம்,
அவரது விருப்பத்தை மாற்ற முயல்வது அறியாமை.
அவரது விருப்பப்படி நாம் மாறுவோம்.
பாவிகளாய் இருந்தால் பாவ சங்கீர்த்தனம் செய்து பரிசுத்தர்களாய் மாறுவோம்.
நாம் பரிசுத்தர்களாய் மாற அவரது அருள் வரம் கேட்டு செபிப்போம்.
நாம் மாறி, அவரது விருப்பப்படி நடப்பது ஒன்றே விண்ணகம் செல்ல வழி.
மண்ணில் வாழும்போது விண்ணக வாழ்வுக்கு ஏற்றவர்களாக மாறுவோம்.
"இயேசுவே, எங்களை உமக்கு ஏற்றவர்களாக மாற்றும்.
உமக்காக, உமக்காக மட்டுமே, நாங்கள் வாழ வரம் தாரும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment