Sunday, August 28, 2022

''நீ என்ன கேட்டாலும் அது என் அரசில் பாதியேயானாலும், உனக்குக் கொடுக்கிறேன்"(மாற்கு.6:23)

''நீ என்ன கேட்டாலும் அது என் அரசில் பாதியேயானாலும், உனக்குக் கொடுக்கிறேன்"
(மாற்கு.6:23)

ஏரோது அரசன் தான் செய்த தவறைக் கண்டித்ததற்காக அருளப்பரைச் சிறையில் வைத்திருந்தாலும்,

 அவர் நீதிமானும், புனிதருமாய் இருந்ததால், அவருக்கு அஞ்சி, அவரைப் பாதுகாத்து வந்தான்.

ஆனால் ஒரு சிறுமியின் நடனத்தில் மயங்கி,

''உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்.

 அது என் அரசில் பாதியேயானாலும், உனக்குக் கொடுக்கிறேன்" என்று வாக்குக் கொடுத்தான். 

விளைவு, அவளது விருப்பத்திற்கு ஏற்ப அருளப்பரைக் கொல்ல வேண்டியிருந்தது.

ஒரு சிறுமியின் நடனத்தில் மயங்கியதால் ஒரு புனிதரைக் கொன்றதற்காக அவன் மேல் நமக்கு கோபம் வருகிறது.

ஆனால் அனேக சமயங்களில் நாமும் கூட அப்படி நடந்து கொள்கிறோம் என்பது நமது ஞாபகத்திற்கு வருவது இல்லை.

ஏரோது அடுத்தவரைக் கொண்றான். ஆனால் நம்மில் அனேகர் தங்களைத் தாங்களே கொன்று கொள்ளுகிறார்கள்.

ஒரு வகையில் இது தற்கொலைதான்.

ஒருவன் ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து, குளித்து, நன்றாக உடையுடுத்தி பூசைக்கு புறப்பட்டு கொண்டிருந்தான்.

வீட்டில் அதிகாலையிலிருந்தே TV ஓடிக்கொண்டிருந்தது.

கோவிலுக்கு போக கால் எடுத்து வைக்கும் போது தற்செயலாக கண் TV யில் விழுந்தது

நெடுநாள் பார்க்க ஆசைப்பட்ட படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.

அதில் மயங்கி, 
''கொஞ்ச நேரம் படம் பார்த்துவிட்டு போவோமே என்று உட்கார்ந்தான்."

முடிந்தவுடன் எழுந்து வேகமாக கோவிலுக்கு நடந்தான்.

கோவில் Compound gate ஐ அடைந்தபோது, பலி செலுத்திய குரு,

"சென்று வாருங்கள் பூசை முடிந்து விட்டது" என்று கூறிக் கொண்டிருந்தார். 

சாமியாரின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து அப்படியே வீட்டுக்கு திரும்பி விட்டான்.

ஞாயிற்றுக்கிழமை கடன் பூசை என்று தெரிந்தும் போகாததால் அவன் பாவம் செய்து தனது ஆன்மாவைக் கொன்று விட்டான்.

பாவத்தின் மூலம் ஆன்மாவின் உயிராகிய புனிதம் தரும் அருளை இழக்கும் போது ஆன்மா மரிக்கிறது.  

அடுத்து நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்யும் போது தான் அது உயிர் பெறுகிறது.

ஆனால் அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் முன்பே மரணம் அடைய நேரிட்டால் மரித்த ஆன்மா நித்தியத்துக்கும் மரித்த ஆன்மாதான்.

ஏரோது செய்த பாவத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

இரண்டுமே கொலைதான். 

அனேக சமயங்களில் நாம் ஆன்மாவை கொல்லா விட்டாலும் அற்ப பாவங்களின் மூலம் அதை சுகவீனப்படுத்துவது தேவைப் படாதவற்றின் மேல் நமக்கு ஏற்படும் கவர்ச்சிதான்.

இறைவாக்கை வாசிக்கும் போதும்,
செபம் சொல்லும் போதும் அவற்றுக்கு சம்பந்தம் இல்லாத விசயங்களை நினைத்துக் கொண்டிருந்தால் நாம் நமது ஆன்மாவைக் காயப்படுத்துகிறோம்.

ஒவ்வொரு நாளும் இரவு படுக்க செல்லும் முன்பு நமது ஆன்மீக வாழ்வை சிறிது நேரம் பரிசோதித்து பார்த்தால் நாம் எத்தனை முறை ஆன்மாவை காயப்படுத்தியிருக்கிறோம் என்பது புரியும்.

இறைவனை நினைக்கும் போது அவரைப் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும்.

சுவாமியார் பிரசங்கம் வைக்கும்போது நமது மனது பிரசங்கத்தில்தான் இருக்க வேண்டும்.

மத்தியானம் சாப்பிடப் போகும் பிரியாணியில் இருக்கக் கூடாது.

விண்ணகத்திற்காக வாழும்போது மண்ணகத்தின் கவர்ச்சிகள் நம்மைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment