Monday, August 15, 2022

பணக்காரன் விண்ணரசில் நுழைவது அரிது." (மத். 19:23)

"பணக்காரன் விண்ணரசில் நுழைவது அரிது." (மத். 19:23)

"தாத்தா, பணக்காரன் விண்ணரசில் நுழைவது அரிது." என்று ஆண்டவர் சொல்கிறார்.

அப்படியானால் பிச்சைக்காரர்கள் மட்டும்தானே மோட்சத்திற்குப் போக முடியும்!

மற்ற எல்லோரிடமும்தான் பணம் ஏதாவது ஒரு உருவத்தில் இருக்கிறதே!"

", அதாவது பணம் உள்ளவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் என்கிறாய், அப்படித்தானே."

"ஆமா. இல்லாதவர்கள் எல்லாம் ஏழைகள் என்றால் உள்ளவர்கள் எல்லாம் பணக்காரர்கள்தானே."

",அப்படியானால் பிச்சைக்காரர்களும் பணக்காரர்கள் தானே.

அவர்கள் பணத்தை தானே பிச்சையாக எடுக்கிறார்கள்."

"அப்படியானால் யாருமே மோட்சத்திற்குப் போக முடியாது என்கிறீர்களா?"

",நான் அப்படிச் சொல்லவில்லை.
ஆண்டவரும் அப்படிச் சொல்லவில்லை."

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே." என்றுதான் ஆண்டவர் கூறியிருக்கிறார்."

''அப்படியானால் பணக்காரர்களுக்கு கடவுளின் அரசு கிடையாது என்றுதானே அர்த்தம்.

எல்லோரிடமும்தான் பணம் இருக்கிறதே."

",வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் பேசுகிறாய்.

பணம் உள்ளவர்கள் எல்லாம் பணக்காரர்கள் அல்ல.

பணம் இல்லாதவர்கள் எல்லாம் ஏழைகளும் அல்ல."

"நீங்கள் சொல்வது புரியவில்லை. யார் பணக்காரர்கள்?
 யார் ஏழைகள்?"

",பணத்தின் மீது பற்று உள்ளவன் பணக்காரன்.

பணத்தின் மீது பற்று இல்லாதவன் ஏழை.

'ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்:' என்றால் 

'உலக செல்வத்தின் மீது பற்று இல்லாதவர்களே, நீங்கள் பேறு பெற்றோர்' என்பது பொருள்.

நாம் பற்று கொள்ள இரண்டு விதமான செல்வங்கள் இருக்கின்றன.

1. விண்ணகச் செல்வம். இதன் மீது பற்று உள்ளவர்கள் விண்ணக வாழ்வை அடைவதற்காகவே இவ்வுலகில் வாழ்வார்கள். அவர்களுக்கு விண்ணகம் உறுதி.

2,உலகச் செல்வம். இதன் மீது பற்று உள்ளவர்களிடம் விண்ணகச் செல்வத்தின் மீது பற்று இருக்காது. இவர்கள் உலக செல்வத்தை அடைவதற்காகவே வாழ்வார்கள். விண்ணக வாழ்வு இவர்களுக்கு கிடைக்காது."

"பணமே இல்லாதவர்கள் கூட அதன் மீது பற்றுடன் வாழ்ந்தால் பணக்காரர்கள் தான் என்கிறீர்கள்."

",ஆமா. கையில் நிறைய பணம் இருந்தாலும் அதன் மீது பற்று இல்லாமல் விண்ணக வாழ்வின் மீது மட்டும் பற்று உள்ளவர்கள் ஏழைகளே. 

உலகப் பற்று இல்லாமல் வாழ்பவர்கள் பேறு பெற்றவர்கள், ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் விண்ணரசு உரியது."

"இன்னும் புரியவில்லை. பணம் வேண்டுமென்றால் அதை சம்பாதிக்க வேண்டும். அப்படியானால் பணத்தை சம்பாதிக்கிறவர்கள் எல்லோரும் அதன் மீது பற்று உள்ளவர்கள் தானே.

படித்து பட்டம் பெற்று வேலை தேடுகின்றவர்கள் அதிக சம்பளம் தரும் வேலைக்கு ஆசைப்படுவார்களா? 

அல்லது சம்பளமே தராத வேலைக்கு ஆசைப்படுவார்களா?

வாங்குகின்ற சம்பளத்தின் மீது எப்படி பற்று இல்லாமல் இருக்கும்?

அப்படியானால் சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள் யாருக்கும் விண்ணகம் கிடைக்காதா?"

",பாடப் புத்தகம் வாங்குவதற்காக அப்பாவிடம் பணம் கேட்கிறாய் என்று வைத்துக்கொள்வோம்.

உனக்கு ஆசை பணத்தின் மீதா பாடப் புத்தகத்தின் மீதா?"

"பாடப் புத்தகத்தின் மீது ஆசை இருப்பதால் தானே அதை வாங்க பணம் கேட்கிறேன்.

அப்பாவிடம் வாங்கிய பணத்தை அழகு பார்க்காமல் கடைக்காரரிடம் கொடுத்து விடுவேன். அவர் பதிலுக்கு பாடப் புத்தகம் தருவார்."

",இறைவனுக்கு சேவை செய்வதற்காக பணம் சம்பாதித்தால் உனக்கு பணத்தின் மீது பற்றா இறைவன் சேவை மீது பற்றா?"

"இறைப் பணி மீது தான் பற்று."

"இப்போவாவது புரிகிறதா?" 

", புரிகிறது. உலகில் வாழ்பவர்கள் எல்லோரிடமும் அதன் செல்வம் இருக்கும். அதை இறைப்பணியில் செலவழிக்க வேண்டும்.

உலகச் செல்வத்தை இறைபணியில் செலவழித்தால் அந்த செல்வமும் விண்ணகச் செல்வமாக மாறிவிடும்."

"நான் ஒரு ஒப்புமை சொல்கிறேன்.

நான் சென்னைக்கு செல்ல விரும்பினால் என்னிடம் உள்ள பணத்தை பேருந்து கட்டணத்திற்காக இழந்து தான் 

பேருந்தில் சென்னைக்கு செல்ல முடியும்.

 இழக்க முடியாத அளவிற்கு பணத்தின் மீது எனக்கு பற்று இருந்தால் சென்னைக்கு செல்ல முடியாது. அதை பார்த்துக் கொண்டே வீட்டில் இருக்க வேண்டியதுதான்.

அதேபோல நான் என்னுடைய உலக செல்வத்தை இறைப் பணிக்காக இழந்தால்தான் 

இறைவன் வாழும் விண்ணகத்திற்கு என்னால் செல்ல முடியும்.

இழக்க முடியாத அளவுக்கு எனக்கு உலக செல்வத்தின் மீது பற்று இருந்தால் என்னால் விண்ணகம் செல்ல முடியாது."

", Correct. விண்ணக வாழ்வை அடையும் நோக்கத்தோடு இவ்வுலகில் வாழ்பவன்தான் விண்ணக செல்வத்தின் மீது பற்று உள்ளவன்.

உலக வாழ்வை மட்டுமே எண்ணி வாழ்பவன் உலகின் மீது பற்று உள்ளவன்.

அவனுக்கு விண்ணக வாழ்வின் மீது பற்று இல்லாததால் விண்ணகம் செல்ல முடியாது.

அதனால்தான் ஆண்டவர்

பணக்காரன், 

அதாவது பணத்தின் மீது மட்டும் பற்று உள்ளவன், 

விண்ணரசில் நுழைவது அரிது.

என்றார்."

"நம்மிடம் உள்ள உலக செல்வத்தை பிறர் அன்புப் பணிகளில் செலவழித்தால் அதை இறைவனுக்காகவே செலவழிக்கிறோம்.

நம்மிடம் உள்ளதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதன் மூலம் இறை பணி செய்வோம்.

உலக செல்வத்தின் உதவியால் விண்ணக செல்வதை ஈட்டுவோம்.

பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்போம்.

தாகமாய் இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுப்போம்.

சுகம் இல்லாமல் இருப்பவர்களுக்கு மருத்துவ உதவி செய்வோம்.

இதைப் போன்ற எண்ணற்ற பிறரன்பு பணிகளில் உலக செல்வத்தைச் செலவழித்தால் நமக்கு விண்ணக வாழ்வு உறுதி.

பிறருக்காக வாழ்வதன் மூலம் இறைவனுக்காக வாழ்வோம்.


இறைவனோடு நிலை வாழ்வு வாழ்வோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment