(மாற்கு1:40)
இயேசுவை நோக்கி ஒரு தொழுநோயாளி
முழந்தாளிட்டு செய்த செபம்:
"நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்"
இயேசு அவன்மீது மனமிரங்கி கையை நீட்டி, அவனைத் தொட்டு சொன்னது,
"விரும்புகிறேன், குணமாகு."
உடனே தொழுநோய் அவனைவிட்டு நீங்க, அவன் குணமானான்.
தொழுநோயாளியின் நோய்
அரோசிகமாக இருக்கலாம்,
ஆனால் அவன் செய்த செபம் நாம் எல்லோரும் பின்பற்றக் கூடியது.
அவன் ஆண்டவரை நோக்கி,
நாம் எல்லோரும் வழக்கமாக கேட்பதை போல
''என் நோயை குணமாக்கும்" என்று சொல்லவில்லை.
"நீர் விரும்பினால்
என்னைக் குணமாக்க உம்மால் கூடும்"
அதாவது,
"ஆண்டவரே, உமக்கு விருப்பம் இருந்தால்
என்னைக் குணமாக்க உம்மால் முடியும்."
தனது வேண்டுதலை விட கடவுளின் சித்தத்திற்கு முதலிடம் கொடுக்கிறான்.
அவன் சுகமாக விரும்பியது உண்மை. ஆனால் அது கடவுளின் சித்தப்படி நடக்க வேண்டும் என்பதை அவனது செபம் நமக்கு உணர்த்துகிறது.
கர்த்தர் கற்பித்த செபத்தில் நமக்கு வேண்டியதை கேட்பதற்கு முன்னால்,
"உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!"
என்று இறைவனின் திருவுளம் நிறைவேற வேண்டுகிறோம்.
இப்படி வேண்டதான் கர்த்தர் கர்ப்பித்தார்.
நல்ல சம்பளம் தரக்கூடிய ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறோம்.
அது கிடைக்க இறைவனிடம் எப்படி வேண்ட வேண்டும்?
"விண்ணக தந்தையே, நான் இப்போது கேட்கப் போவது என்னுடைய ஆன்மீக வாழ்க்கைக்கு உதவியாக இருக்குமா இடைஞ்சலாக இருக்குமா என்பது எனக்குத் தெரியாது.
ஆனால் உமக்கு தெரியும்.
நான் ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறேன்.
அது எனக்கு கிடைக்க வேண்டும் என்பது உமது சித்தமானால் எனக்கு கிடைக்கச் செய்யும்.
அது உமக்கு விருப்பம் இல்லையென்றால் அந்த வேலை வேண்டாம்.
என்ன வேலை கிடைக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ, அதைப் பெற்றுத் தாரும்."
"நான் ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன்.
இந்த திருமணம் உமது விருப்பத்திற்கு ஏற்றதாக இருந்தால் நடத்தி வையும்.
ஏற்றதாக இல்லாவிட்டால் நடத்த வேண்டாம்.
நீரே எனக்கு உரிய பெண்ணை முடிவு செய்யும்.
உமது சித்தப்படி நடக்கவே உலகில் நான் வாழ்கிறேன்.
உமது சித்தம் நிறைவேறட்டும்."
சில ஆண்டுகளுக்கு முன்னால் நம் நாட்டில் சுனாமியினால் ஆயிரக்கணக்கானோர் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்தார்கள்.
இயற்கை கடவுளுடைய படைப்பு.
கடவுளுடைய சித்தத்திற்கு எதிராக அது செயல்படாது.
ஏன் சுனாமியால் ஆயிரக்கணக்கானோரை கடவுள் அழித்தார்?
அதற்கு ஒரே பதில் தான்.
அது அவருடைய சித்தம்.
அவரது ஒரே மகன் இயேசுவின் பாடுகளின்போது நடந்தவற்றைத் தியானித்தால் அவரது சித்தம் பற்றி புரியும்.
இயேசுவின் நற்செய்தி அறிவிக்கும் வாழ்வின்போது பலமுறை அவரை கைது செய்ய அவரது எதிரிகள் திட்டமிட்டிருந்தார்கள்.
ஆனால் தந்தை திட்டமிட்ட நேரம் இன்னும் வராததால் அவர் அவர்கள் கையில் அகப்படவே இல்லை.
கடைசி இரவு உணவு சாப்பிட்டபின் கெத்சேமனி தோட்டத்திற்குச் சென்றால் அவருடைய எதிரிகள் அவரை பிடிக்க வருவார்கள் என்று அவருக்கு தெரியும்.
யூதாஸ் அவரை முத்தமிட்டு காட்டி கொடுப்பான் என்றும் அவருக்குத் தெரியும்.
அவருடைய எதிரிகள் அவரை கைது செய்து கல்தூணில் கட்டி வைத்து அடிப்பார்கள்,
முள்முடி சூட்டி அடித்து, அவமானப்படுத்துவார்கள்,
சிலுவையை சுமக்க வைப்பார்கள்,
சிலுவையில் அறைந்து கொல்வார்கள் என்றெல்லாம் அவருக்கு தெரியும்.
ஆனாலும் அவருடைய அப்போஸ்தலர்களுடன் அவர் அங்கே சென்றார்.
ஏனென்றால் அதுவே அவரது தந்தையின் சித்தம்.
தந்தையின் சித்தம்தான் மகனின் சித்தமும்.
தந்தையின் சித்தப்படிதான் எல்லாம் நடக்கும் என்பது நமக்கு புரிந்து விட்டால் நமது வேண்டுதல்களின் முறையே மாறிவிடும்.
"இயேசுவே, எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை தாரும். நாங்கள் வேளாங்கண்ணி அன்னையின் ஆலயத்திற்கு சென்று காணிக்கை செலுத்துகிறோம்" என்று நேர்ச்சை செய்ய மாட்டோம்.
",இயேசுவே, உமக்கு சித்தமிருந்தால் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை தாரும்" என்று மட்டும் வேண்டுவோம்.
உவரி அந்தோனியார் கோவிலில் இருக்கும் அதே இயேசு தான் நமது கோவிலிலும் இருக்கின்றார்.
நாம் எங்கே இருந்து செபம் செய்தாலும் அந்தோனியாருக்கு கேட்கும்.
திருத்தலங்களுக்குத் திரு யாத்திரை போவதை விட கடவுளின் சித்தப்படி வாழ்வதுதான் முக்கியம்.
திருத்தலங்களுக்குத் திரு யாத்திரை போக வேண்டாம் என்று சொல்லவில்லை.
அது கடவுளின் சித்தப்படி நடப்பதின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
நமது சித்தப்படி நடப்பதற்காக போவதை விட கடவுளின் சித்தப்படி நடப்பதற்காக போவது ஒரு பக்தி முயற்சி.
திரு யாத்திரைகள் இயேசுவை மற்றவர்களுக்கு அறிவிக்க உதவியாக இருக்க வேண்டும்.
உண்மையான விசுவாச வாழ்வுக்கு முதலிடம் கொடுப்போம்.
இறைவனின் சித்தப்படி நடப்பது தான் உண்மையான விசுவாச வாழ்வு.
திருவிழாக்கள், திரு யாத்திரைகள் போன்றவை அதற்கு உதவியாக இருக்க வேண்டும்.
"நான் விரும்பவுது அன்று, நீர் விரும்புவதே ஆகட்டும்"
என்ற இயேசுவின் செபமே அவருடைய சீடர்களாகிய நமது செபமாக இருக்கட்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment