Wednesday, August 24, 2022

சுதந்திரமாக வாழ்வதும், கீழ்ப்படிந்து, வாழ்வதும்எதிர்ச் செயல்களா?. (தொடர்ச்சி)

சுதந்திரமாக வாழ்வதும், கீழ்ப்படிந்து வாழ்வதும்
எதிர்ச் செயல்களா?
(தொடர்ச்சி)

"தாத்தா, அப்பா என்னை பார்த்து,

"நாளை Merit scholarship test. ஒன்று நடைபெறுகிறது. அதை எழுத உனக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. அதை எழுதி வெற்றி பெற்றால் உனக்கு merit scholarship கிடைக்கும். அதை பயன்படுத்தி படித்தால் வேலை வாய்ப்புகள் நிறைய இருக்கும்.''

 என்று சொன்னால்,

அவர் தருகிற சுதந்திரம் தேர்வு எழுதி பயன் பெறுவதற்காகத்தான்.

அதேபோல கடவுள் நம்மைப் பார்த்து, "எனது கட்டளைகளைக் கடை பிடித்தால் நிலை வாழ்வு கிடைக்கும்" என்று சொன்னால்

 அதற்கு "எனது கட்டளைகளைக் கடை பிடியுங்கள்" என்று தான் அர்த்தம். 

நம்முடைய சுதந்திரத்தைப் பயன்படுத்தி இறைவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தால் நமது சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துகிறோம் என்று தான் பொருள்.

ஆகவே சுதந்திரமாக வாழ்வதும் கீழ்படிவதும் ஒன்றுதான். (அதாவது சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தினால்.)

நான் சொல்வது சரியா, தாத்தா?"

", Super correct. அன்னை மரியாளும் இதைத்தான் செய்தாள்.

கவிரியேல் சம்மனசு கடவுளது செய்தியை அவளுக்கு அறிவித்த போது, நமது அன்னை, தனது சுதந்திரத்தை இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுத்துவிட்டு,

''"இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" என்றாள்.

அடிமைக்கு சுதந்திரம் கிடையாது.

மரியாள் தனது சுதந்திரத்தையே சுதந்திரமாக  கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டாள்.

அவளது வாழ்வே அர்ப்பண வாழ்வுதான்.

ஒரு வினாடி கூட அவள் தனக்காக வாழவில்லை, கடவுளுக்காக மட்டுமே வாழ்ந்தாள்.

அன்னையின் மீது உண்மையான பக்தி உள்ளவர்கள் அவளைப் போலவே செயல்பட வேண்டும்.

தாயைப் போலவே பிள்ளைகளும் இருக்க வேண்டும்.

உண்மையான விசுவாச வாழ்வு அர்ப்பண வாழ்வு தான்.

நமது சுதந்திரத்தை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு,

"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"

என்று நமது ஆண்டவரை போல் கூற வேண்டும்.

இயேசுவைப் பொருத்தமட்டில், அவர் கடவுள். அவரது விருப்பமும் தந்தையின் விருப்பமும் ஒன்றுதான். ஏனெனில் தந்தையோடும், தூய ஆவியோடும் அவர் ஒரே கடவுள்.

கடவுளாகிய அவர் யாருக்கும் அடிமையாக முடியாது.

ஆனால், அவரது வார்த்தைகளை நாம் சொல்லி செபித்தால்,

"என் விருப்பம் அன்று," என்று சொல்லும் போது நாம் கடவுளுடைய அடிமைகள் என்று ஏற்றுக் கொள்கிறோம்.

அவரது விருப்பம் நிறைவேற வேண்டும், நமது விருப்பம் அல்ல.

அன்னை மரியாள் "இதோ ஆண்டவருடைய அடிமை" என்று கூறும் போதே கடவுளது விருப்பத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டாள்.

ஆண்டவரது அடிமையாக வாழ்வதுதான் உண்மையான சுதந்திர வாழ்வு.

 முழுமையான சுதந்திரத்தோடு நம்மை நாமே ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழும் வாழ்வு."

"ஆண்டவரைப் போலவும் அன்னை மரியாளைப் போலவும் நம்மால் வாழ முடியுமா தாத்தா?"

", வாழ முயற்சிக்கலாமே.

உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

Be perfect, even as your heavenly Father is perfect.”
(மத். 5:48)

அவரது தந்தையைப் போலவே நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று விரும்பும் இயேசு 

 அவரைப் போலவும், அவரது அன்னையைப் போலவும் நாம் வாழ ஆசித்தால் வேண்டாம் என்றா சொல்வார்?

தந்தையைப் போலவும், மகனைப் போலவும், அன்னை மரியாளைப் போலவும் நம்மால் எப்படி வாழ முடியும் என்று கேட்க வேண்டாம்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று இயேசு வாக்கு கொடுத்திருக்கிறார்.

அதற்கான வரத்தை அவரிடமே கேட்போம்.

கட்டாயம் தருவார்."

''பாடுகள் பட்டு மரிப்பதற்காகவே மனிதனாக பிறந்த இயேசு ஏன்

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்."

என்று செபித்தார்?''

",இயேசு மனிதனாக பிறந்தது நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு மரிக்க.

நமது மனித பலகீனம் தான் நமது பாவங்களுக்கு காரணம்.

இயேசு சர்வ வல்லவ கடவுள். அவரால் பாவம் செய்ய முடியாது.
ஏனெனில் கடவுளுடைய விருப்பத்திற்கு எதிராக செயல்படுவது தான் பாவம்.

பாவம் செய்ய முடியாத இயேசு மனித பலகீனங்களை ஏற்றுக்கொண்டு தான் மனிதனாகப் பிறந்தார்.

மனித பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும்போதே நாம் நமது பலகீனத்தால் பாவம் செய்ய நமக்கு சோதனைகள் ஏற்படும் போது 

அவற்றை எப்படி வெல்ல வேண்டும் என்று நமக்கு போதிக்க இயேசு ஆசைப்பட்டார்.

அதனால் தான் செபிக்கச் செல்லும்போதே 

"சோதனைக்கு உட்படாதபடி செபியுங்கள்"

என்று மூன்று அப்போஸ்தலர்களிடம் சொல்லிவிட்டு சென்றார்.

பலகீனத்தினால் பாவம் செய்ய  சோதனை எப்படி வரும், 
அதை நாம் எப்படி வெல்ல வேண்டும் என்று நமக்கு செயல் மூலம் காண்பிக்கவே அவருக்கே சோதனையை வர அனுமதித்தார்.

தனது நற்செய்தி பணியை ஆரம்பிக்கும் போதே பசாசு அவரை சோதிக்க அனுமதித்ததை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

அவரே அனுமதித்த சோதனையால்தான் தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற மனிதனாக பிறந்த இயேசு,

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்." என்று கேட்டார்.

சோதனையை எப்படி வெல்வது என்று நமக்கு போதிக்கவே,

"எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்.

இது செயல்முறைக் கல்வி. 

நமக்கு பாவம் செய்ய சோதனை வரும் போது நாம் கடவுளைப் பார்த்து,

''தந்தையே, எனது விருப்பத்தை நிறைவேற்ற எனக்கு வரும் சோதனையை அகற்றி 

உமது விருப்பத்தை நிறைவேற்ற வரம் தாரும்" என்று செபிக்க வேண்டும்.

இது சோதனை நேரத்தில் செபிக்க இயேசுவே கற்றுத்தரும் செபம்.

இன்னொரு உண்மையையும் மனதில் கொள்ள வேண்டும்.

நற்செய்தி பணியின் ஆரம்பத்திலும்,
இறுதியிலும்  மனிதனான தனக்கு சோதனை வர அனுமதிக்கிறார்.

அதை வெல்லும் வழியையும் கற்றுத் தருகிறார்.

சோதனைகளைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை,

இறைவனது சித்தத்தை நிறைவேற்றுவதையே வாழ்வின் குறிக்கோளாக கொண்டவர்களை சோதனைகளால் வெல்ல முடியாது என்ற பாடத்தை கற்றுத் தருகிறார்.

இறைவனது சித்தப்படி நடப்பவர்கள் இறைவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பார்கள்.

அவர்கள் தான் இறைவன் தங்களுக்குத் தந்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துபவர்கள்."

''அதாவது

இறைவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிபவர்கள் = இறைவன் தந்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துபவர்கள்.

சுதந்திரமாக வாழ்வதும், கீழ்ப்படிந்து வாழ்வதும் எதிர்ச் செயல்கள் அல்ல.

இணைந்த செயல்கள்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment