Sunday, June 8, 2025

"என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!"(மத்தேயு நற்செய்தி 5:11)



"என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!"
(மத்தேயு நற்செய்தி 5:11)

இயேசு என்று சொன்னவுடன் ஞாபகத்துக்கு வருவது சிலுவை தான்.

சிலுவையை நினைக்கும் போது ஞாபகத்துக்கு வருவது இயேசுவின் பாடுகளும், மரணமும்.

அவரைப் பாடுபடுத்தியவர்கள் அவர்மீது  இல்லாத பொல்லாத குற்றச் சாட்டுகளைச் சுமத்தினார்கள்.

ஓய்வு நாளுக்கு ஆண்டவரே இயேசு தான்.

அவர் ஓய்வு நாளில் நோயாளிகளைக் குணமாக்கியதைக் குற்றம் என்றார்கள்.

கடவுளே தேவ தூசணம் பேசியதாக அவர் மேல் குற்றம் சாட்டினார்கள்.

இயேசு மறுமொழியாக அவர்களிடம், "இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்" என்றார். (அரு.2:19)

இயேசு தன்னைப் பற்றி சொன்ன முன்னறிவிப்பை அவர் கோவிலைப் பற்றிச் சொன்னதாக யூத மதப் பெரியவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

அவர்கள், "இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்" என்று கூறினார்கள். 
(மத்தேயு நற்செய்தி 26:61)


 இயேசு, " மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறியதை . 
கடவுளைப் பழித்துரைப்பதாகக் குற்றம் சாட்டினார்கள்.


உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, "இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. 


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இவன் சாக வேண்டியவன்" எனப் பதிலளித்தார்கள். 
(மத்தேயு நற்செய்தி 26:64-66)

இப்படியே இயேசுவின் மேலே இல்லாதவை பொல்லாதவை யெல்லாம் சொல்லி யூத மதத் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

நாம் அவருடைய சீடர்கள். அவருக்கு நேர்ந்ததே நமக்கும் நடக்கும்.

அப்போது நாம் மகிழ வேண்டும், இயேசுவுக்குக் கிடைத்தது நமக்கும் கிடைத்திருக்கிறது.

நாம் இயேசுவின் சீடர்கள் என்று மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தம்.

நாம் பேறுபெற்றவர்கள்.

மற்றவர்கள் நம்மைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை சொல்லி நமது பெயரைக் கெடுக்கும் போது நாம் கவலைப்பட வேண்டாம்,

ஏனெனில் நாம் வாழ்வது அவர்களைத் திருப்திப்படுத்துவநற்காக அல்ல,

கடவுளுக்காக வாழ்கிறோம்.

அவருக்கு நம்மைப் பற்றித் தெரியும்.

மற்றவர்கள் நம்மைக் கெடுத்துப் பேசும் போது அதைச் சிலுவையாக ஏற்றுக் கொண்டு‌ 

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக் கொடுப்போம்.

லூர்து செல்வம்

Saturday, June 7, 2025

பெந்தகோஸ்து திருநாளும், தூய ஆவியும்.



பெந்தகோஸ்து திருநாளும், தூய ஆவியும்.

"என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்." (அரு.14:26)

இயேசு தான் தேர்வு செய்த 12 சீடர்களுக்கும் மூன்று ஆண்டுகள் பயிற்சி கொடுத்தார்.

அவர்கள் இயல்பாக ஆன்மீகத்தில் வளர அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தார்.

அவர்கள் மூலமாக தனது நற்செய்தியை உலகெங்கும்  அறிவிக்க வேண்டும் என்பது அவர் திட்டம்.

ஆனால் சுயமாக அல்ல, மூவொரு கடவுளின் வல்லமையின் உதவியோடு அவர்கள் சேவை செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம். அப்போதுதான் அவர்களுடைய செயல்பாடுகளில் தவறுகள் ஏற்படாது.

அதனால்தான் உலகம் முடியும் மட்டும் தனது சீடர்களுடன் இருப்பதற்காக திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

அதோடு தம திரித்துவத்தின் மூன்றாவது ஆளாகிய தூய ஆவி அவர்களை விசுவாசத்தில் திடப்படுத்தி, அவர்களோடு தங்கி தான் நிறுவிய திருச்சபையை வழிநடத்த ஏற்பாடு செய்தார்.

பெந்தகோஸ்து திருநாளன்று உலகெங்கிலும் வாழ்ந்த யூதர்கள் எருசலேமுக்கு வருவது வழக்கம்.

அந்நாளில் சீடர்கள் போதனையை ஆரம்பித்தால்தான் ஒரே நேரத்தில் நிறைய பேரை மனம் திருப்ப வசதியாக இருக்கும்.

ஆகவே தான் அந்நாளில் தூய ஆவி சீடர்கள் மீது இறங்க ஏற்பாடு செய்தார்.

தூய ஆவி இறங்கி வந்த வினாடியில் சீடர்கள் இயேசுவின் போதனையில் உறுதி அடைந்து போதனையை ஆரம்பித்தார்கள்.

அன்று கத்தோலிக்கத் திருச்சபையின் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது.

முதல் நாளே மூவாயிரம் பேர் திரு முழுக்குப் பெற்றார்கள்.

அதன்பின் பன்னிரு சீடர்களும் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று நற் செய்தியைப் போதித்தார்கள்.

ரோமைப் பேரரசு   சீடர்கள் நற் செய்தியை அறிவிக்கத் தடை விதித்தது.

ஆனால் சீடர்கள் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை.

தூய ஆவி அவர்களைத் திடப்படுத்தினார்.

அரசு இயேசுவுக்குச் செய்ததை அவர்களுக்கும் செய்தது.

சீடர்கள் துணிச்சலாக தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள்.

வேத சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து.

இயேசு உலகம் முடியும் வரை நம்மோடு வாழ்வது போல தூய ஆவியும் நம்மோடு வாழ்கிறார், நம்மை வழி நடத்துகிறார்.

ஒரு உண்மையை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மகனும் தூய ஆவியும் வெவ்வேறு ஆட்கள், ஆனால் ஒருவருள் ஒருவர் இருக்கின்றனர்.

தந்தை, மகன், தூய ஆவி மூவரும் ஒரே கடவுளாய் இருப்பதால், மூவொரு இறைவன் தான் நம்மை வழி நடத்துகிறார்.

தந்தை நம்மைப் படைத்தார்.

மகன் மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, மரித்து நம்மை மீட்டார்.

தூய ஆவி நம்மை வழிநடத்துகிறார்.

ஆயினும் மூவரும் ஒரே கடவுள்.

கடவுள் தம திரித்துவம்.

ஆகவே நம்மைப் படைத்து, மீட்டு, வழி நடத்துபவர் திரி ஏக கடவுள்தான்.

நாம் சுவாசிப்பது முதற்கொண்டு அனைத்து செயல்களையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் செய்வோம்.

லூர்து செல்வம்

Friday, June 6, 2025

வளர்ச்சி இல்லாவிட்டால் தளர்ச்சி



வளர்ச்சி இல்லாவிட்டால் தளர்ச்சி.

ஒரு கிணறு.
கிணற்றில் தண்ணீர்.
இறைப்பதற்கு ஒரு வாளி.
கிணற்றை ஒட்டி ஒரு தொட்டி.
வாளியைக் கொண்டு தண்ணீர் இறைத்து தொட்டிக்குள் ஊற்ற வேண்டும்.

தொட்டி நிறைந்தவுடன் ஒரு போணியைக் கொண்டு தண்ணீரைக் கோதிக் குளிக்க வேண்டும்.

குளிப்பதற்காக வந்த நண்பர் கட்டப்பட்டுத் தண்ணீர் இறைத்து தொட்டிக்குள் ஊற்றினார்.
ஊற்றினார், ஊற்றினார், ஊற்றினார்.


வெகு நேரம் ஊற்றியும் தொட்டி நிரம்பியபாடில்லை.

களைத்துப் போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு, இறைப்பதற்காகப் போகுமுன் தொட்டியைப் பார்த்தார்.

உள்ளே ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை.

தொட்டியை ஆராய்ந்தார்.
தொட்டியைக் கழுவும் போது தண்ணீரை வெளியேற்றுவதற்காக தொட்டியின் அடியில் இருந்த துவாரம் திறந்தேயிருந்தது.

இவர் தண்ணீர் இறைத்து ஊற்ற ஊற்றத் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தால் தொட்டி எப்படி நிறையும்?

இது ஒரு ஒப்புமை.

எதற்கு ஒப்புமை?

நமது ஆன்மீக வாழ்விலும் இதே போல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

ஆன்மாவை ஒரு தொட்டியாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

தொட்டியைப் பயன்படுத்த வேண்டுமானால் முதலில் அது சுத்தமாக இருக்க வேண்டும்.

 நாம் ஆன்மீகத்தில் வளர வேண்டுமானால் முதலில் அது பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

பரிசுத்தம் என்றால் பாவம் இல்லாத நிலைமை.

இரு வகைப் பாவங்கள், சாவான பாவம், அற்பப் பாவம்.

சாவான பாவம் உள்ள ஆன்மா ஆன்மீக ரீதியாக இறந்த ஆன்மா.

இறந்த ஆன்மா ஆன்மீகத்தில் இயங்க முடியாது.

முதலில் சாவான பாவத்திலிருந்து விடுதலை பெற்றால்தான் ஆன்மாவால் இயங்க முடியும்.

கிணற்றின் அருகே உள்ள தொட்டியை குளிப்பதற்கு ஏற்றதாக மாற்ற வேண்டுமானால் முதலில் நல்ல தண்ணீரால் அதைக் கழுவி, அழுக்குத் தண்ணீரை அதற்கென்று போடப்பட்ட துவாரம் வழியாக வெளியேற்றிவிட்டு, துவாரத்தை அடைத்துவிட வேண்டும்.

அப்புறம் அதை நல்ல தண்ணீரால் நிரப்ப வேண்டும்.

நமது ஆன்மா சாவான பாவ நிலையில் இருந்தால் மனத்தாபம் 
(Contrition), பாவ சங்கீர்த்தனம்
(Confession) ஆகியவை கலந்த அருள் தண்ணீரால் அதைக் கழுவி ஆன்மாவைப் பரிசுத்தமானதாக மாற்ற வேண்டும்.

அதன்பின் ஆன்மாவை ஆண்டவரின் அருள் வரங்களால் நிரப்ப வேண்டும்.

நிரப்பப்பட்ட அருள் வரங்கள் கசியாதபடி (leak ஆகாதபடி)
கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அற்பப் பாவங்கள், 

ஆன்மீக வாழ்வில் ஆர்வமின்மை,

 செபத்தின் மூலம் இறைவனோடு உரையாடாமல் இருத்தல்,

இறைவன் சித்தம் என்ன என்று தெரிந்தும் அதை நிறைவேற்றாமல் இருத்தல்

போன்ற காரணங்களால் அருள் வரங்கள் கசிந்து அதன் அளவு குறையும்.

இது தொடர்ந்தால் பழையபடி   சாவான பாவத்தில் விழ நேரிடலாம்.

ஆகவே பாவ சங்கீர்த்தனத்தின் மூலம் நாம் பெற்ற பரிசுத்தத் தனத்தை இழக்காமல் ஆன்மாவைப் பாது காக்க வேண்டும்.

பரிசுத்தத் தனத்தைப் பாது காக்க அதில் வளரவேண்டும்.

ஆன்மீகம் சார்ந்த செயல் முயற்சிகள் மூலம்,

அதாவது நற்செயல்கள் மூலம்,

அருள் வரங்களை ஈட்டிக் கொண்டேயிருக்க வேண்டும்.

24 மணி நேரமும், ஒவ்வொரு வினாடியும் இறைவனோடு செபத்தில் இணைந்திருக்க வேண்டும்.

எப்படி நாள் முழுவதும் செபிப்பது?

காலையில் எழுந்ததும் அன்றைய நாளில்,  சுவாசித்தல் உட்பட, நாம் செய்யவிருக்கும் அத்தனை செயல்களையும் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்துவிட வேண்டும்.

இதனால் நமது ஒவ்வொரு அசைவும் செபமாக மாறிவிடும்.

செபம் என்றாலே இறைவனோடு ஒன்றித்திருத்தல்.

பாலோடு நீர் ஒன்றிக்கும் போது நீரும் பாலாகி விடுகிறது.

இறைவனோடு ஒன்றித்திருக்கும் போது நாம் இன்னும் பரிசுத்தம் ஆவோம்.

பாவம் நம்மை அணுகாது.

நற் செயல்களால் நமது அயலானோடும், 

(அயலானுக்குச் செய்வதை இறைவனுக்கே செய்கிறோம்.)

செபத்தால் நேரடியாக இறைவனோடும் ஒன்றித்திருந்தால்

நாம் பரிசுத்தத் தனத்தில் வளர்ந்து கொண்டேயிருப்போம்.

இவை இரண்டையும் செய்யாதிருந்தால் நாம் ஆன்மீகத்தில் பின் நோக்கி நகர்வோம், அதாவது, தளர்வோம்.

ஒரு நிலத்தில் முட்செடிகள் நிறைந்துள்ளன.

அதில் பயிர்த்தொழில் செய்ய முடியாது.

பயிர்த்தொழில் செய்ய விரும்புகிறவர் முதலில் முட்செடிகளை அப்புறப்படுத்தி

நிலத்தைப் பண்படுத்த வேண்டும்.

பண்படுத்திய பின் பயிரேற்ற வேண்டும்.

பயிரேற்றினால் நாம் பாய்ச்சும் நீராலும், இடும் உரத்தாலும் நிலம் மேலும் மேலும் வளம் உள்ளதாக மாறும்.

பண்படுத்திவிட்டு பயிர் ஏற்றாமல்
போட்டால் பழையபடி முட்செடிகள் முளைக்க ஆரம்பித்து விடும்.

பாவ சங்கீர்த்தனம் செய்து ஆன்மாவை பரிசுத்தம் ஆக்குவோம்.

இடைவிடாத செபத்தாலும், நற்செயல்களாலும் பரிசுத்தத் தனத்தில் வளர்வோம்.

நிலை வாழ்வை ஈட்டுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, June 5, 2025

"ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?"" என்றார். (அரு.21:17)



"ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?"" என்றார். (அரு.21:17)

மீனவர்களான இராயப்பர், அந்திரேயா, அருளப்பர், யாக்கோபு ஆகியோர் மீன் பிடிக்கும் தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றியவர்கள்.

அவர் அவர்களை இரவும் பகலும் தன்னோடே வைத்திருந்து பயிற்சி அளித்தார்.

ஆனால் அவர் சொன்னது அவர்கள் காதில் ஏறியதே தவிர கருத்தில் ஏறியதாகத் தெரியவில்லை.

இயேசுவை இறைமகன் என்பதை ஏற்றுக் கொண்ட இராயப்பரால்
அவர் எதற்காக உலகுக்கு வந்தாரோ அதை, அதாவது அவரது பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கெத்சமனித் தோட்டத்தில் அவரை
 தலைமைக் குருக்களும், கோவில் காவல் தலைவர்களும் மூப்பர்களும் கைது செய்தபோது சீடர்கள்  அவரை விட்டு ஓடிப் போனார்கள்.

தலைமை குரு இயேசுவை விசாரித்துக் கொண்டிருந்த போது இராயப்பர் அவர் யாரென்றே தெரியாது என்று மூன்று முறை மறுதலித்தார். 

அருளப்பர் எப்படியோ கல்வாரி மலைக்கு வந்து சேர்ந்தார்.

இயேசுவின் மரணத்துக்குப் பின் சீடர்கள் யூதர்கள் தங்களையும் கைது செய்து விடுவார்கள் எனப் பயந்து ஜான் மாற்கின் வீட்டில் ஒளிந்து கிடந்தார்கள்.

இயேசு உயித்ததைக்கூட அவர்களால் நம்பமுடியவில்லை.

அப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளிகளுக்கு அவர்கள் தங்கியிருந்த அறையில் இயேசு இரண்டு முறை காட்சி கொடுத்தார்.

ஒரு நாள் இராயப்பருக்கு மீன் பிடிக்க ஆசை வந்து விட்டது.

விட்டு வந்த தொழில் மீது ஆசை வரலாமா?

நான் மீன்பிடிக்கப் போகிறேன்" என்றார். 

அவரோடு இருந்த மற்ற சீடர்கள், "நாங்களும் உம்மோடு வருகிறோம்" என்று போய்ப் படகில் ஏறினார்கள்!

அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. 

காலையில் இயேசு கடற்கரையில் காட்சி கொடுத்து,

 "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்" என்றார்.

 அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. 

இராயப்பர் வேகமாக ஆண்டவரிடம் வந்தார்.

மற்றவர்களும் வலையை இழுத்துக் கொண்டு வந்தார்கள்.

இயேசு அவர்களுக்கு அப்பமும், மீனும் உண்ணக் கொடுத்தார்.

சீடர்களின் விசுவாசக் குறைவைப் பார்த்து இயேசுவுக்குக் கோபம் வரவில்லை.

இப்படிப்பட்டவர்களிடம் தான் தனது திருச்சபையை ஒப்படைக்கப் போகிறார்.

குறைகளால் நிறைந்தவர்களிடம் தான் தனது பரிசுத்தத் திருச்சபையை உலகெங்கும் பரப்பும் பொறுப்பைக் கொடுக்கப் போகிறார்.

தன்னை மூன்று முறை மறுதலித்தவரைத்தான் திருச்சபையின் தலைவராக்கப் போகிறார்.

அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். 

அவர் , "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார்.

 இயேசு அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்" என்றார். 

இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். 

அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார். 

இயேசு அவரிடம், "என் ஆடுகளை மேய்" என்றார். 

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று கேட்டார்.

 "உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, 

அவரிடம், "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?"" என்றார். இயேசு அவரிடம், ""என் ஆடுகளைப் பேணிவளர் என்றார் .

இயேசு அனைவருடைய உள்ளங்களை அறிந்த கடவுள்.

இராயப்பர் அவரை நேசிப்பது இயேசுவுக்குத் தெரியும்.

தெரிந்தும் ஏன் இயேசு மூன்று முறை "என்னை நேசிக்கிறாயா?"  என்று கேட்டார்?

இயேசுவுக்கு சீடர்களைப் பற்றி முழுமையாகத் தெரியும்.

ஆனால் சீடர்களுக்கு இயேசுவைப் பற்றி முழுமையாகத் தெரியாது.

குருவைப் பற்றி சீடர்கள் தெரிந்திருக்க வேண்டும்.

மூன்று ஆண்டு காலமும் தன்னுடைய சொல்லாலும் செயலாலும் இயேசு தன்னைப் பற்றி சீடர்களுக்கு வெளிப்படுத்தியதைத் தான் நற்செய்தி என்கிறோம்.

இயேசு இறைமகன். 
தம திரித்துவத்தின் இரண்டாம் ஆள்.
தந்தையோடும், தூய ஆவியோடும் ஒரே கடவுளாய் வாழ்பவர்.
உலகை மீட்பதற்காக தந்தையால் அனுப்பப்பட்டவர்.
அன்பும், இரக்கமும் உள்ளவர்.
பாவிகளை நேசிப்பவர்.
தன்னை வெறுப்பவர்களையும் நேசிப்பவர்.

இது போன்ற எண்ணற்ற வெளிப்பாடுகளின் தொகுப்பு தான் நற்செய்தி நூல்கள்.

இயேசுவைப் பற்றி தாங்கள் அறிந்ததை உலகத்தில் வாழும் அனைவருக்கும் அறிவிப்பது தான் சீடர்களின் பணி.

இயேசுவுக்கும், இராயப்பருக்கும் அன்பு  பற்றிய இன்றைய உரையாடலில் இயேசு தன்னைப்பற்றி என்ன வெளிப்படுத்தியிருக்கிறார்?

இராயப்பர் இயேசு மீது கொண்டுள்ள அன்பைத் தன்னிடம் அறிக்கையிட வேண்டும் என்று இயேசு விரும்பினார்.

அதற்கு இயேசு இராயப்பருக்கு உதவுகிறார்.

அந்த விருப்பம் இருந்திருக்காவிட்டால் ,

''இராயப்பா, என் மீது உனக்குள்ள அன்புக்குப் பரிசாக உன்னை என் திருச்சபைக்குத் தலைவன் ஆக்குகிறேன்"

என்று மட்டும் சொல்லியிருக்கலாம்.

மூன்று முறை "என்னை நேசிக்கிறாயா?" என்று கேட்டிருக்க மாட்டார். 

இயேசுவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?

 ஆண்டவரிடம் 
"அதைத் தாருங்கள், இதைத் தாருங்கள்" என்று கேட்பதை விட 

"இயேசுவே உம்மை நேசிக்கிறேன்"

"Jesus, I love you.''

என்று நமது அன்பை வெளிப்படுத்தும் செபம் தான் மிகச் சிறந்த, வல்லமை வாய்ந்த செபம்.

நாம் நமது அன்பை அறிக்கை இட்டுக் கொண்டிருந்தால் மட்டும் போதும்.

நமக்கு‌ வேண்டியதை நாம் கேட்காமலே நமக்குத் தருவார்.

"இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன்."

வாயால் சொல்வதை விட மனதால் சொல்வது சிறந்தது.

மனது ஒரு நிலைப்பட்டிருக்க வேண்டும்.

மனம்  இறை அன்பால் நிறைந்திருக்க வேண்டும்.

I love you, Jesus.

லூர்து செல்வம்.

Wednesday, June 4, 2025

"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்." (அரு.17:21)



"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்." (அரு.17:21) 

திரி ஏக கடவுள் மனிதனைத் தன் சாயலில் படைத்தார்.

"தாயைத் தண்ணீர்க் கிணற்றில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க வேண்டாம்."

என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

மகளைப் பெண் பார்க்க விரும்புபவர்கள் வீட்டுக்குப் போக வேண்டாம்,

தாயைத் தண்ணீர்க் கிணற்றில் பார்த்தால் போதும்,

 தாயைப் போல பிள்ளை.

மனிதனில் இறைவனின் சாயல்.


1. தந்தை, மகன், தூய ஆவி - மூன்று ஆட்கள், ஒரு கடவுள்.

மனிதன்- சிந்தனை, சொல், செயல் - மூன்று தத்துவங்கள், ஒரே ஆள்.

2. தந்தையின் சிந்தனையில் பிறப்பவர் வார்த்தை.

(ஆதியில் வார்த்தை இருந்தார்.
வார்த்தை கடவுளோடு இருந்தார்)

மனிதனின் சிந்தனையில் பிறப்பது சொல் (வார்த்தை)

3. தந்தையிடமிருந்தும், மகனிடமிருந்தும் புறப்படுபவர்  தூய ஆவி. திருச்சபையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தூய ஆவி.


மனிதனின் சிந்தனை, சொல் ஆகியவற்றிலிருந்து புறப்படுவது செயல். 

4. மூன்று ஆட்களுக்கும்   ஒரே சித்தம்.

மனிதனின் சிந்தனை, சொல், செயல் மூன்றிலும் ஒரே விருப்பம்.
(சிந்தித்ததைச் சொல்ல வேண்டும். சொன்னதைச் செய்ய வேண்டும்.)

5. கடவுள் அன்பு மயமானவர்.
மனிதனின் வாழ்க்கையே அன்பு செய்வது தான்.

கடவுள் மனிதனைத் தன் சாயலில் படைத்தார்.

ஆனால் மனிதன் தனது பாவத்தினால் அந்தச் சாயலைப் பழுது படுத்தி விட்டான்.

பழுது படுத்தப்பட்ட சாயலை மீட்கவே இறைமகன் மனுமகனாய் பிறந்தார்.

அதற்காகத்தான் பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பலியாக்கினார்.

அவரது வாழ் நாளின் இறுதி நாள் வெள்ளிக்கிழமை.

அதற்கு முந்திய நாள் வியாழக் கிழமை இரவில் கெத்சமனித் தோட்டத்தில் அவருடைய பாடுகள் ஆரம்பித்து விட்டன.

அதற்கு முன் John Mark ன் இல்லத்தின் மேல் மாடியில் நடைபெற்ற இறுதி இரவு உணவின் போது 

தனது சீடர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே தன் தந்தையிடம் இவ்வாறு செபித்தார்,

''எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! 

தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல்

 அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! 

இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்."

" தந்தையே, நாம் மூன்று ஆட்களாக, ஒரே கடவுளாய் இருப்பது போல எனது சீடர்களும் 
ஒன்றாய் இருப்பார்களாக! 

நாம் மூவரும் அன்பினால் ஒருவருள் ஒருவராக,  ஒன்றாய், ஒரே கடவுளாய் இருக்கிறோம்.

நமது சாயலில் மனிதர்களைப் படைத்தோம்.

(அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். ......என்றார். 
(தொடக்கநூல் 1:26)

ஆனால் அவர்கள் பாவத்தினால் அன்பை இழந்து ஒன்றாய் வாழாமல் பிரிந்து கிடக்கிறார்கள்.

நாம் மூவரும் அன்பினால் ஒருவருள் ஒருவராக  ஒன்றாய் இருப்பது போல அவர்களும் அன்பினால் ஒருவருள் ஒருவர் வாழ வேண்டும்.

அப்படி வாழ்ந்தால் தான் மனுக் குலம் அன்பினால் இணைந்து நமது சாயலில் ஒன்றாய் இருக்கும்.

இழந்த சாயலைத் திரும்பப் பெற்றால்தான்  பரிசுத்த தம திரித்துவத்தைப் பற்றி‌ அவர்களுக்குப் புரியும்.

இறைமகனே மனுமகனாகப் பிறந்தார் என்ற உண்மையும் புரியும்."

"ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத்தேயு நற்செய்தி 5:48)

இது இயேசு நமக்கு வழங்கும் அறிவுரை.

இதை வாசிக்கும் போது நம் மனதில் ஒரு கேள்வி எழும்.

இறைவன் எல்லாப் பண்புகளிலும் அளவில்லாதவர்.

நாம் அளவுள்ளவர்கள்.

அளவுள்ள நாம் எப்படி அளவில்லாத தந்தையைப் போல நிறைவுள்ளவர்களாக இருக்க முடியும்?

புனித வியாழனன்று இயேசு செய்த செபம் நமது கேள்விக்குரிய பதிலைத் தரும்.

"தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!"

தந்தை மகனுக்குள் இருக்கிறார்,
மகன் தந்தைக்குள் இருக்கிறார்.

அதுபோல மனிதர்களாகிய நாம் ஒருவருள் ஒருவர் இருக்க வேண்டும்.

இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதே வியாழனன்று இயேசு சீடர்களிடம் கூறிய வார்த்தைகளைத் தியானிக்க வேண்டும்.

"நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்."(அரு.14:20)

இயேசு தந்தைக்குள் இருக்கிறார்.

சீடர்கள் இயேசுவுக்குள் இருக்கிறார்கள்.

சீடர்கள் இயேசுவுக்குள்,
இயேசு தந்தைக்குள்,

அப்படியானால் 

இயேசுவுக்குள் இருக்கும் சீடர்கள் தந்தைக்குள் இருக்கிறார்கள்.

ஒரு லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு பாத்திரம், அதற்குள் ஒரு லிட்டர் தண்ணீர். 


ஒரு லிட்டர் தண்ணீர் உள்ள  பாத்திரத்தை கடலுக்குள் போட்டு விட்டால் என்ன ஆகும்?

ஒரு லிட்டர் தண்ணீர் கடல் நீரோடு கலந்து விடும்.

நாம் அளவு உள்ளவர்கள் தான். 

இயேசு அளவில்லாத கடவுள்.
அளவுள்ள நாம் அளவில்லாத இயேசுவுக்குள் இருந்து, இயேசுவோடு தந்தைக்குள் இருக்கும் போது அளவில்லாத தந்தையுடன் கலந்து விடுகிறோம்.

கடவுளின் நிறைவில் கலந்து விடுவதுதான் பேரின்பம்.

நமது குடும்பத்தில் ஆறு பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அறுவரும் ஒருவருள் ஒருவர் இருக்கிறோம்.

ஒவ்வொருவரும் இயேசுவுக்குள் இருக்கிறோம்.

அப்படியானால் அறுவரும் இயேசுவுக்குள் இருக்கிறோம்.

அப்படியானால் அறுவரும் இயேசுவோடு நிறைவான தந்தைக்குள் இருக்கிறோம்.

அதாவது நாம் குடும்பத்தோடு தந்தையின் நிறைவில் கலந்து விடுகிறோம்.

இயேசுவின் அறிவுரைப்படி

நமது விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்கிறோம்.

நாம் அன்பில் ஒருவருள் ஒருவர் இருப்போம்.

நாம் அன்பில் இயேசுவுக்குள் இருப்போம்.

இயேசுவோடு தந்தைக்குள் இருப்போம்.

மூவொரு இறைவனோடு அன்பில் ஒன்றித்து வாழ்வோம்.

அப்படி வாழ்ந்தால் தான் நாம் கிறித்தவர்கள்.

கிறித்தவர்கள் தனித் தனியானவர்கள் அல்ல,

இறை இயேசுவில் ஒன்றானவர்கள் 

All the Christians are one in Our Lord Jesus.

லூர்து செல்வம்.

Tuesday, June 3, 2025

"நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல."(அரு. 17:16)



 "நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல."
(அரு. 17:16)

இயேசு கடவுள்.

உலகைப் படைத்த கடவுள் ஏன்,

"நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல்" என்கிறார்?

கடவுள் ஒன்றுமில்லாமையில் இருந்து உலகைப் படைத்தார்.

அவர் தன்னிலேயே முழுமையானவர், சுயமாக வாழ்கிறார்.

நாம் வாழ அவர் படைத்த பஞ்சபூதங்களாகிய நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவை தேவைப்படுகின்றன.

நமது உடல் இவற்றால் ஆனதுதான்.

உடலியல் ரீதியாக நாம் வாழ இவற்றைச் சார்ந்திருக்கிறோம்.

கடவுள் வாழ இவற்றைச் சார்ந்திருக்கவில்லை.

ஆனால் உலகம் முழுக்க முழுக்க கடவுளைச் சார்ந்திருக்கிறது.

ஒரு வினாடி அவர் உலகை நினைக்காவிட்டாலும் அது ஒன்றுமில்லாமை ஆகிவிடும்.

நாம் வாழ கடவுள் படைத்த பஞ்சபூதங்களைச் சார்ந்திருக்கிறோம்.

அப்படியிருக்க "அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல" என்று ஏன் சொல்கிறார்?

நமது உடல் மண்ணிலிருந்து எடுக்கப் பட்டிருந்தாலும் நமது ஆன்மா விண்ணில் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டது.

ஆகவே ஆன்மீக வாழ்வு வாழப் படைக்கப் பட்டிருக்கிறோம்.

நாம் உலகில் வாழ்ந்தாலும் ஆன்மீக வாழ்வுதான் வாழ வேண்டும்.

அதாவது விண்ணக வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டு வாழ வேண்டும்.

நாம் விண்ணைச் சார்ந்தவர்கள், மண்ணை அல்ல.

இப்போது நாம் உலகில் இருக்கிறோம், ஆனால் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

We are in the world, not of the world.

மண்ணில் நாம் வாழ்வதே விண்ணக வாழ்வுக்காக நம்மைத் தயாரிப்பதற்காகத் தான்.

மண்ணக வாழ்வு நிரந்தரமானது அல்ல.

மண்ணில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் தற்காலிகமானவை.

அழியாத பேரின்ப வாழ்வைப் பற்றிக் கவலைப் படாமல் 

அழிந்து போகக்கூடிய சிற்றின்பத்தைத் தேடி அலைபவர்கள் அறிவிலிகள்.

அப்படியானால் கடவுள் ஏன் உலகப் பொருட்களைப் படைத்தார்?

நமது ஆன்மீக வாழ்வில் நமக்கு உதவிகரமாக இருப்பதற்காக.

கடவுள் நினைத்திருந்தால் மனிதனை விண்ணகத்தில் படைத்திருக்கலாம்.

ஆனால் பேரின்ப வாழ்வை மனிதனே முயற்சி செய்து ஈட்ட வேண்டும் என்று தீர்மானித்து அவனை உலகில் படைத்தார்.

அவனுக்கு இரு கட்டளைகளைக் கொடுத்து, அவற்றை அவன் வாழ்ந்தால் விண்ணக வாழ்வு என்ற நிபந்தனையோடு அவனை உலகில் வாழ விட்டிருக்கிறார்.

இரண்டு கட்டளைகளும் இன்பகரமானவை.

1. கடவுளை அன்பு செய்ய வேண்டும்.

2. சக மனிதர்களை அன்பு செய்ய வேண்டும்.

சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அன்பு செய்ய வேண்டும்.

நமது அன்பை செயல்படுத்த உலகப் பொருட்கள் தேவைப்படுகின்றன.

அன்பு செய்ய உலகப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு தாய் தன் பிள்ளைகள் மீதுள்ள அன்பை அவர்களுக்கு உணவு கொடுப்பதன் மூலமும்,
அவர்களைப் பராமரிப்பதன் மூலமும் செயல்படுத்துகிறாள்..

அவ்வாறே மனிதன் பிறர் மீது தனக்கு உள்ள அன்பை அவர்களுக்கு உதவுவதன் மூலமும், சேவை செய்வதன் மூலமும் வெளிப்படுத்துகிறான்.

நாம் பிறருக்குச் செய்யும் சேவையைத் தனக்கே செய்ததாகக் கடவுள் கருதுகிறார்.

 கடவுளை நமது தந்தையாக ஏற்றுக் கொள்வதன் மூலமும்,

 அவரது சித்தப்படி வாழ்வதன் மூலமும், 

அவரை ஆராதித்து வழிபடுவதன் மூலமும், 

நமது பிறரன்புப் பணிகள் மூலமும் நாம் அவரை அன்பு செய்கிறோம்.

கடவுள் அளித்த இரண்டு கட்டளைகளின்படி வாழ்ந்தால் நமக்கு விண்ணக பேரின்ப வாழ்வு பரிசாகக் கிடைக்கும்.

இயேசு போதித்த நற் செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்து அவர்களை இயேசுவிடம் அழைத்து வரவேண்டியது நமது கடமை.

"எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். 

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்." 
(மத்தேயு நற்செய்தி 28:20)

இது இயேசு நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளை.

இக்கட்டளையை மையமாக வைத்தே நாம் வாழ வேண்டும்.

நாம் நற் செய்தியை அறிவிப்பதைத் தடை செய்ய எந்த உலக அதிகாரத்துக்கும் உரிமை இல்லை.

எந்த அதிகாரமாவது தடை விதித்தால் அதற்கு நாம் அடிபணியக் கூடாது.

கடவுளின் கட்டளை மட்டுமே நம்மை இயக்க வேண்டும்.


இயேசு உலகைச் சார்ந்தவராய் இல்லாததால் அவர் பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு மரிக்க நேர்ந்தது.

நாமும் உலகைச் சார்ந்தவர்களாய் இல்லாததால் இயேசுவுக்கு நேர்ந்தது நமக்கும் நேரிடும்.

அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

இயேசுவின் பாடுகளில் பங்கு பெற்றால் அவரது மகிமையிலும் பங்கு பெறுவோம்.

லூர்து செல்வம்.

Monday, June 2, 2025

பங்குக் குருத்துவம்.



பங்குக் குருத்துவம்.

"தாத்தா, ரொம்ப நாளா எனக்கொரு சின்ன சந்தேகம். எதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குச் சாமியார மாத்துதாங்க?"

"போடாப் பொடியா, பங்குச் சாமியாரை யாராலும் மாற்ற முடியாது.''

"அப்போ நீங்கள் கோயிலுக்கே வருவதில்லையா?"

"'ஏன் அப்படிக் கேட்கிற?"

"வந்திருந்தா   நம்ம பங்குச் சாமியார் transfer ஆகிப் போய் விட்டது தெரிந்திருக்கும்."

"'இப்போ நான் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்."

"'கேளுங்கள்."

"போன வாரத்துக்கு முந்தியவாரம் பங்கு கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூசை வைத்தது யார்?"

"பங்குச் சாமியார்."

"'போன வாரம் பூசை வைத்தது யார்?"

"பங்குச் சாமியார்."

"இந்த வாரம் பூசை வைத்தது யார்?"

""பங்குச் சாமியார்."

"ஆக, பங்குச் சாமியார் மாறவில்லை."

"ஆனால் அதே சாமியார் இல்லை." 

"'பங்குக் குருவானவர் மாறவில்லை, அவரை‌ மாற்ற முடியாது."

"ஆயர் தானே மாற்றுகிறார்."

"'ஒரு குருவானவரை குருவானவராக்கியது யார்?"

"ஆயர்."

"ஆயர் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு குருப் பட்டம் கொடுத்தார். குருவாக ஆக்கியது யார்?"

"இதை என் ஞாபகமாகச் செய்யுங்கள் என்று சொன்ன இயேசு."

'"இயேசு ஆக்கியதை யாராலும் மாற்ற முடியாது. பங்குக் குருவை ஆயர் நியமித்திருக்கலாம். அவர் நியமித்த ஆளை அவர் மாற்றலாம். குருவானவரை மாற்ற முடியாது."

"நீங்கள் சொல்வது புரியவில்லை. புரியும் படி கூறுங்கள்."

"சென்ற வாரம் நமது பங்குக் குருவின் பெயர் என்ன?"

"அருட்தந்தை ஜேம்ஸ்."

"'இந்த வாரம் நமது பங்குக் குருவின் பெயர் என்ன?"

"அருட்தந்தை சந்தியாகு."

"'அவரும் பங்குக் குருவானவர் தான். இவரும். பங்குக் குருவானவர் தான்."

"ஆக பங்குக் குருவானவர் மாறவில்லை என்கிறீர்கள். இதில் ஏதோவொரு மறை உண்மை மறைந்திருக்கிறது. அதை வெளியே கொண்டு வாருங்கள்."

"'இறைமகன் மனிதனாகப் பிறந்தது நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தன்னையே பலியாக்கி, நமது பாவங்களை மன்னிப்பதற்காக.

நோக்கம் பாவ மன்னிப்பு, அதற்காகத்தான் பலி.

'நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார். 
(மத்தேயு நற்செய்தி 28:20)

விண்ணகம் எய்திய இயேசு எப்படி உலகம் முடியும் வரை நம்மோடு இருக்க முடியும்?''

"திவ்ய நற்கருணை மூலமாக."

"'திவ்ய நற்கருணை பேழைக்குள் இயேசு ஓய்வு எடுக்கிறாரா? 
அல்லது,  செயல் புரிந்து கொண்டிருக்கிறாரா?"

" ஓய்வு எடுப்பதற்கா திவ்ய நற்கருணை? செயல் புரிந்து கொண்டிருக்கிறார்."

'"எப்படி? குருவானவர் எடுக்கும் போது வெளியே வருகிறார். அதுவும் குருவின் கரங்களில்.

குருவானவர் பேழைக்குள் வைத்து பூட்டியவுடன் வெளியே வர முடியாது.‌ பிறகு எப்படி செயல் புரிகிறார்?"

"ஏதோ பொடி வைத்து கேட்கிறீர்கள். பேசாமல் நீங்களே சொல்லிவிடுங்கள்."

'"பேசாமல் எப்படிச் சொல்ல முடியும்?"

"சரி பேசியே சொல்லுங்கள்."

"'குருவானவர் மூலம் தான் செயல் புரிகிறார்.

பங்கைப் பொறுத்த மட்டில் பங்குக் குருவானவர் தான் இயேசுவின் சார்பில் செயல் புரிந்து கொண்டிருக்கிறார்,

அதாவது,

பங்குக் குருவானவர் மூலமாக இயேசு தான் செயல் புரிந்து கொண்டிருக்கிறார்.

இயேசுதான் பங்குக் குருவானவர் உருவத்தில் செயல் புரிந்து கொண்டிருக்கிறார்.

"இது என் உடல்.'' என்று சொல்வது இயேசு, பங்குக் குரு மூலமாக.

"இது என் இரத்தம் 'என்று சொல்வது இயேசு,  பங்குக் குரு மூலமாக.

கல்வாரி மலையில் இரத்தம் சிந்திய விதமாக ஒப்புக் கொடுத்த பலியை நமது ஆலய பீடத்தில் இரத்தம் சிந்தாத விதமாக ஒப்புக் கொடுப்பதும் இயேசு தான், பங்குக் குரு மூலமாக.

ஒவ்வொரு ஞாயிறு திருப்பலிக்கு முன்பும் பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் அமர்ந்து கொண்டு நமது பாவங்களை மன்னிப்பவர் இயேசுதான், ‌ பங்குக் குரு மூலமாக.

அன்னை மரியாள் தன் மகனை பரம தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தது போல அவளுடைய பிள்ளைகளாகிய நாமும் குருவோடு இணைந்து இயேசுவைத் தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கிறோம்.


பங்குத் திருச்சபை இருக்கு மட்டும் 
அதாவது உலகம் முடியும் வரை பங்குக் குருவானவர் மூலமாகத் தான் இயேசு இயங்குவார்.

ஆயர் பங்குக் குருவானவர் பொறுப்பு வகிக்கும் அருட் தந்தையை மாற்றலாம், பங்குக் குருவானவர் தொடர்ந்து இருப்பார்.''

"தாத்தா, இதை ஒரே வாக்கியத்தில் கூறிவிடலாம்.

நாம் பங்குக் குருவானவரில் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

அப்போது தான் நாம் அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெறுவோம்."

'''பங்குக் குருவானவர் பொறுப்பில் இருக்கும் அருட் தந்தை நமது உறவினராக இருக்கலாம், நண்பராக இருக்கலாம்,

ஆனால் அவரில் நாம் பார்க்க வேண்டியது இயேசுவை மட்டுமே. 

பங்குத் தளத்தில் நமது ஆன்மீக வழிகாட்டி (Spiritual Director) பங்குக் குருவானவர் தான்.

ஆனால் அவருக்கு ஆன்மீகப் பணி தவிர வேறு எந்தப் பணியும் கொடுக்கப்படக்கூடாது. 

பள்ளிக்கூட நிர்வாகம் அவர் பொறுப்பில் இருப்பதால் ஆசிரியர்கள் அவரை நிர்வாகியாகவே பார்க்கிறார்கள்.

அவரை நமது ஆன்மீக வழிகாட்டியாகப் பார்க்க வேண்டும்.

நமது ஆன்மீக வழிகாட்டியை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாவ மன்னிப்புத் தந்து நமது ஆன்மாவைப் பரிசுத்தமாகப் பாதுகாக்க இயேசுவே‌ குருவானவர் மூலமாகச் செயல்புரிகிறார்."

"தாத்தா, ஒரு நுண்ணறிவுக் கேள்வி கேட்கட்டுமா?"

"கேள்."

"'நமது பாவூர்சத்திரம் பங்கில் அருட்தந்தை ஜேம்ஸ் அடிகளார் தான் தொடர்ந்து பணியாற்றப் போகிறார்.  எப்படி?"

"இதற்கு நுண்ணறிவு தேவையில்லை, சாதாரண அறிவே போதும்.

பீற்றரும், இராயப்பரும் ஒருவர் தான். 

அதேபோல ஜேம்சும், சந்தியாகும் ஒருவர் தான்.

செபதேயுவுக்கும், சலோமி மரியாளுக்கும் பிறந்த இரண்டு பிள்ளைகளில் ஒருவர் தான் ஜேம்ஸ். அதாவது, சந்தியாகப்பர் என்றும் அழைக்கப் படும் பெரிய யாகப்பர்."

"அப்போ ஜேம்சும், சந்தியாகுவும் ஒருவர் தான்.

பன்னிரு சீடர்களில்‌ பெரிய யாகப்பருக்குக் கிடைத்த விசேட வரம் ஏதாவது இருக்கிறதா?"

"'பன்னிரு சீடர்களில் அவர்தான் முதல் வேத சாட்சி.

அவருடைய பெயரைத் தாங்கிய குருவானவரின் வழி நடத்துதலில் வாழும் நாம் இயேசுவின் சாட்சிகளாக வாழ்வோம்."

லூர்து செல்வம்