Thursday, June 5, 2025

"ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?"" என்றார். (அரு.21:17)



"ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?"" என்றார். (அரு.21:17)

மீனவர்களான இராயப்பர், அந்திரேயா, அருளப்பர், யாக்கோபு ஆகியோர் மீன் பிடிக்கும் தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றியவர்கள்.

அவர் அவர்களை இரவும் பகலும் தன்னோடே வைத்திருந்து பயிற்சி அளித்தார்.

ஆனால் அவர் சொன்னது அவர்கள் காதில் ஏறியதே தவிர கருத்தில் ஏறியதாகத் தெரியவில்லை.

இயேசுவை இறைமகன் என்பதை ஏற்றுக் கொண்ட இராயப்பரால்
அவர் எதற்காக உலகுக்கு வந்தாரோ அதை, அதாவது அவரது பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கெத்சமனித் தோட்டத்தில் அவரை
 தலைமைக் குருக்களும், கோவில் காவல் தலைவர்களும் மூப்பர்களும் கைது செய்தபோது சீடர்கள்  அவரை விட்டு ஓடிப் போனார்கள்.

தலைமை குரு இயேசுவை விசாரித்துக் கொண்டிருந்த போது இராயப்பர் அவர் யாரென்றே தெரியாது என்று மூன்று முறை மறுதலித்தார். 

அருளப்பர் எப்படியோ கல்வாரி மலைக்கு வந்து சேர்ந்தார்.

இயேசுவின் மரணத்துக்குப் பின் சீடர்கள் யூதர்கள் தங்களையும் கைது செய்து விடுவார்கள் எனப் பயந்து ஜான் மாற்கின் வீட்டில் ஒளிந்து கிடந்தார்கள்.

இயேசு உயித்ததைக்கூட அவர்களால் நம்பமுடியவில்லை.

அப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளிகளுக்கு அவர்கள் தங்கியிருந்த அறையில் இயேசு இரண்டு முறை காட்சி கொடுத்தார்.

ஒரு நாள் இராயப்பருக்கு மீன் பிடிக்க ஆசை வந்து விட்டது.

விட்டு வந்த தொழில் மீது ஆசை வரலாமா?

நான் மீன்பிடிக்கப் போகிறேன்" என்றார். 

அவரோடு இருந்த மற்ற சீடர்கள், "நாங்களும் உம்மோடு வருகிறோம்" என்று போய்ப் படகில் ஏறினார்கள்!

அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. 

காலையில் இயேசு கடற்கரையில் காட்சி கொடுத்து,

 "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்" என்றார்.

 அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. 

இராயப்பர் வேகமாக ஆண்டவரிடம் வந்தார்.

மற்றவர்களும் வலையை இழுத்துக் கொண்டு வந்தார்கள்.

இயேசு அவர்களுக்கு அப்பமும், மீனும் உண்ணக் கொடுத்தார்.

சீடர்களின் விசுவாசக் குறைவைப் பார்த்து இயேசுவுக்குக் கோபம் வரவில்லை.

இப்படிப்பட்டவர்களிடம் தான் தனது திருச்சபையை ஒப்படைக்கப் போகிறார்.

குறைகளால் நிறைந்தவர்களிடம் தான் தனது பரிசுத்தத் திருச்சபையை உலகெங்கும் பரப்பும் பொறுப்பைக் கொடுக்கப் போகிறார்.

தன்னை மூன்று முறை மறுதலித்தவரைத்தான் திருச்சபையின் தலைவராக்கப் போகிறார்.

அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். 

அவர் , "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார்.

 இயேசு அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்" என்றார். 

இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். 

அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார். 

இயேசு அவரிடம், "என் ஆடுகளை மேய்" என்றார். 

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று கேட்டார்.

 "உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, 

அவரிடம், "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?"" என்றார். இயேசு அவரிடம், ""என் ஆடுகளைப் பேணிவளர் என்றார் .

இயேசு அனைவருடைய உள்ளங்களை அறிந்த கடவுள்.

இராயப்பர் அவரை நேசிப்பது இயேசுவுக்குத் தெரியும்.

தெரிந்தும் ஏன் இயேசு மூன்று முறை "என்னை நேசிக்கிறாயா?"  என்று கேட்டார்?

இயேசுவுக்கு சீடர்களைப் பற்றி முழுமையாகத் தெரியும்.

ஆனால் சீடர்களுக்கு இயேசுவைப் பற்றி முழுமையாகத் தெரியாது.

குருவைப் பற்றி சீடர்கள் தெரிந்திருக்க வேண்டும்.

மூன்று ஆண்டு காலமும் தன்னுடைய சொல்லாலும் செயலாலும் இயேசு தன்னைப் பற்றி சீடர்களுக்கு வெளிப்படுத்தியதைத் தான் நற்செய்தி என்கிறோம்.

இயேசு இறைமகன். 
தம திரித்துவத்தின் இரண்டாம் ஆள்.
தந்தையோடும், தூய ஆவியோடும் ஒரே கடவுளாய் வாழ்பவர்.
உலகை மீட்பதற்காக தந்தையால் அனுப்பப்பட்டவர்.
அன்பும், இரக்கமும் உள்ளவர்.
பாவிகளை நேசிப்பவர்.
தன்னை வெறுப்பவர்களையும் நேசிப்பவர்.

இது போன்ற எண்ணற்ற வெளிப்பாடுகளின் தொகுப்பு தான் நற்செய்தி நூல்கள்.

இயேசுவைப் பற்றி தாங்கள் அறிந்ததை உலகத்தில் வாழும் அனைவருக்கும் அறிவிப்பது தான் சீடர்களின் பணி.

இயேசுவுக்கும், இராயப்பருக்கும் அன்பு  பற்றிய இன்றைய உரையாடலில் இயேசு தன்னைப்பற்றி என்ன வெளிப்படுத்தியிருக்கிறார்?

இராயப்பர் இயேசு மீது கொண்டுள்ள அன்பைத் தன்னிடம் அறிக்கையிட வேண்டும் என்று இயேசு விரும்பினார்.

அதற்கு இயேசு இராயப்பருக்கு உதவுகிறார்.

அந்த விருப்பம் இருந்திருக்காவிட்டால் ,

''இராயப்பா, என் மீது உனக்குள்ள அன்புக்குப் பரிசாக உன்னை என் திருச்சபைக்குத் தலைவன் ஆக்குகிறேன்"

என்று மட்டும் சொல்லியிருக்கலாம்.

மூன்று முறை "என்னை நேசிக்கிறாயா?" என்று கேட்டிருக்க மாட்டார். 

இயேசுவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?

 ஆண்டவரிடம் 
"அதைத் தாருங்கள், இதைத் தாருங்கள்" என்று கேட்பதை விட 

"இயேசுவே உம்மை நேசிக்கிறேன்"

"Jesus, I love you.''

என்று நமது அன்பை வெளிப்படுத்தும் செபம் தான் மிகச் சிறந்த, வல்லமை வாய்ந்த செபம்.

நாம் நமது அன்பை அறிக்கை இட்டுக் கொண்டிருந்தால் மட்டும் போதும்.

நமக்கு‌ வேண்டியதை நாம் கேட்காமலே நமக்குத் தருவார்.

"இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன்."

வாயால் சொல்வதை விட மனதால் சொல்வது சிறந்தது.

மனது ஒரு நிலைப்பட்டிருக்க வேண்டும்.

மனம்  இறை அன்பால் நிறைந்திருக்க வேண்டும்.

I love you, Jesus.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment