பெந்தகோஸ்து திருநாளும், தூய ஆவியும்.
"என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்." (அரு.14:26)
இயேசு தான் தேர்வு செய்த 12 சீடர்களுக்கும் மூன்று ஆண்டுகள் பயிற்சி கொடுத்தார்.
அவர்கள் இயல்பாக ஆன்மீகத்தில் வளர அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தார்.
அவர்கள் மூலமாக தனது நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க வேண்டும் என்பது அவர் திட்டம்.
ஆனால் சுயமாக அல்ல, மூவொரு கடவுளின் வல்லமையின் உதவியோடு அவர்கள் சேவை செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம். அப்போதுதான் அவர்களுடைய செயல்பாடுகளில் தவறுகள் ஏற்படாது.
அதனால்தான் உலகம் முடியும் மட்டும் தனது சீடர்களுடன் இருப்பதற்காக திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.
அதோடு தம திரித்துவத்தின் மூன்றாவது ஆளாகிய தூய ஆவி அவர்களை விசுவாசத்தில் திடப்படுத்தி, அவர்களோடு தங்கி தான் நிறுவிய திருச்சபையை வழிநடத்த ஏற்பாடு செய்தார்.
பெந்தகோஸ்து திருநாளன்று உலகெங்கிலும் வாழ்ந்த யூதர்கள் எருசலேமுக்கு வருவது வழக்கம்.
அந்நாளில் சீடர்கள் போதனையை ஆரம்பித்தால்தான் ஒரே நேரத்தில் நிறைய பேரை மனம் திருப்ப வசதியாக இருக்கும்.
ஆகவே தான் அந்நாளில் தூய ஆவி சீடர்கள் மீது இறங்க ஏற்பாடு செய்தார்.
தூய ஆவி இறங்கி வந்த வினாடியில் சீடர்கள் இயேசுவின் போதனையில் உறுதி அடைந்து போதனையை ஆரம்பித்தார்கள்.
அன்று கத்தோலிக்கத் திருச்சபையின் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது.
முதல் நாளே மூவாயிரம் பேர் திரு முழுக்குப் பெற்றார்கள்.
அதன்பின் பன்னிரு சீடர்களும் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று நற் செய்தியைப் போதித்தார்கள்.
ரோமைப் பேரரசு சீடர்கள் நற் செய்தியை அறிவிக்கத் தடை விதித்தது.
ஆனால் சீடர்கள் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை.
தூய ஆவி அவர்களைத் திடப்படுத்தினார்.
அரசு இயேசுவுக்குச் செய்ததை அவர்களுக்கும் செய்தது.
சீடர்கள் துணிச்சலாக தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள்.
வேத சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து.
இயேசு உலகம் முடியும் வரை நம்மோடு வாழ்வது போல தூய ஆவியும் நம்மோடு வாழ்கிறார், நம்மை வழி நடத்துகிறார்.
ஒரு உண்மையை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மகனும் தூய ஆவியும் வெவ்வேறு ஆட்கள், ஆனால் ஒருவருள் ஒருவர் இருக்கின்றனர்.
தந்தை, மகன், தூய ஆவி மூவரும் ஒரே கடவுளாய் இருப்பதால், மூவொரு இறைவன் தான் நம்மை வழி நடத்துகிறார்.
தந்தை நம்மைப் படைத்தார்.
மகன் மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, மரித்து நம்மை மீட்டார்.
தூய ஆவி நம்மை வழிநடத்துகிறார்.
ஆயினும் மூவரும் ஒரே கடவுள்.
கடவுள் தம திரித்துவம்.
ஆகவே நம்மைப் படைத்து, மீட்டு, வழி நடத்துபவர் திரி ஏக கடவுள்தான்.
நாம் சுவாசிப்பது முதற்கொண்டு அனைத்து செயல்களையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் செய்வோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment