ஐந்து அப்பங்களும் ஐயாயிரம் பேரும்.
இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் (+ பெண்கள் + சிறுவர்கள்) பேருக்கு உணவளித்த புதுமை பற்றி தியானிப்போம்.
மக்களுக்கு உணவு கொடுக்க இயேசு பயன்படுத்தியது ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும்.
உணவு உண்டது ஆண்கள் மட்டும் ஐயாயிரம். வழக்கமாக ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக நற்செய்திக் கூட்டங்களுக்கு வருவார்கள்.
அவர்களோடு சிறுவர்களையும் சேர்த்தால் உணவு உண்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் தாண்டும்.
நற் செய்தியை அறிவித்துக் கொண்டிருந்த இயேசு ஏன் வந்தவர்களுக்கு உணவளித்தார்?
நற் செய்தி ஆன்மீக உணவு. அப்பங்கள் உடலுக்கான உணவு.
ஆன்மாவைப் படைத்தவரும், உடலைப் படைத்தவரும் ஒரே கடவுள் தானே.
"இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்."
மக்கள் கூட்டம் கூட்டமாக இயேசுவைப் பார்க்கச் சென்றது அவரது நற் செய்தியைக் கேட்கவும், உடல்நலம் பெறவும்.
மக்களைப் பார்த்தவுடன் இயேசுவில் உண்டாகும் முதல் உணர்வு பரிவு, அதாவது, இரக்கம்.
இறைமகன் மனிதனாகப் பிறந்ததே மனிதர்கள் மீது அவர் கொண்டிருந்த இரக்கத்தின் காரணமாகத்தான்.
அவரது இரக்கம் ஆன்மீகம் சார்ந்தது தான்.
பாவத்தின் வீழ்ந்த மனிதன் மீது இரக்கம் கொண்டார்,
ஆன்மாவும் சரீரமும் கொண்டவன் மனிதன்.
ஆன்மாவுடனும், சரீரத்தோடும்
இயேசுவையும், அன்னை மரியாளையும் போல,
மோட்சத்தில் வாழ வேண்டியவன் மனிதன்.
நமது ஆன்மீக வாழ்வில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால் நமது உடல் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.
அதற்காகவே ஆண்டவர் உடல் நலம் இல்லாதவர்கள் மீது இரங்கி அவர்களுக்கு உடல் நலம் கொடுத்தார்.
ஆன்மாவுக்கு உதவியாக உடல் வாழ உணவு உண்பதும் அவசியம்.
ஆகவே தான் பசியாக இருந்த மக்கள் மீது இரங்கி அவர்களுக்கு உணவு கொடுத்தார்.
ஆக இப்புதுமை நமது ஆண்டவருடைய பரிவை முன் உதாரணமாகக் காட்டுகிறது.
நாமும் நமது அயலான் விடயத்தில் பசியாக இருப்பவர்களுக்கு உணவு கொடுத்து உதவ வேண்டும்.
ஒன்றும் இல்லாமையிலிருந்து உலகைப் படைத்த இறைமகன் மக்களுக்கு உணவு கொடுக்க ஒன்றும் இல்லாமையிலிருந்து அப்பங்களை வரவழைக்கவில்லை.
நற் செய்தியை கேட்க வந்திருந்த ஒரு சிறுவனிடமிருந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பலுகச் செய்கிறார்.
அந்த சிறுவன் அவனிடம் உள்ளதை மற்றவர்களுக்காகத் தியாகம் செய்கிறான்.
இயேசு இப் புதுமையைச் செய்தது இறைச் சமூகத்தில் உள்ள நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கவே.
நாம் ஒவ்வொருவரும் சமூக நலனுக்காக நம்மிடம் உள்ளதை, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தியாகம் செய்தால் பெரிய மக்கள் நிலத் திட்டங்களை நிறைவேற்றலாம்.
இதை நமக்குப் போதிக்கவே இயேசு சிறுவனிடமிருந்ததை வாங்கி பலுகச் செய்து அனைவருக்கும் உணவளித்தார்.
"இயேசு அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்." (மத்.14:19)
அனைவருக்கும் உணவளித்தவர் அவர்தான். ஆனால் நேரடியாக அவரே அளிக்காமல் தன் சீடர்கள் மூலமாக அளித்தார்.
இன்றும் அப்படித்தான். நாம் அவருடைய சீடர்கள். நம் மூலமாகத்தான் அவருடைய மற்ற மக்களுக்கு உதவ விரும்புகிறார்.
நம்மிடம் உள்ளதெல்லாம் இறைவனுக்கு உரியவை.
அதை என்ன செய்ய வேண்டும் என்று இறைவன் விரும்புகிறாறோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
நம்மிடம் உள்ளதைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறார்.
நம்மை அவரது கரங்களாகப் பயன்படுத்த விரும்புகிறார்.
பயன்படுவோம்.
அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார்.
மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். (அரு.6:12,13)
உணவை வீணாக்கக் கூடாது என்ற பாடத்தை நமக்குக் கற்பிக்க இயேசு எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வைக்கச் சொன்னார்.
அதையும் மக்களுக்காகத்தான் இயேசு பயன்படுத்தியிருப்பார்.
இந்தப் புதுமையைச் செய்த மறுநாள் அவரைத் தேடி வந்த மக்களிடம்,
இயேசு, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்" .(அரு. 6:26,27)
என்று கூறிவிட்டு,
"வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது." (அரு. 6:35)
என்ற வார்த்தைகள் மூலம் திவ்ய நற்கருணையைப் பற்றி பேச ஆரம்பித்தார்.
"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். " (அரு. 6:51)
என்று கூறினார்.
இது அவர் திவ்ய நற்கருணையை ஏற்படுத்தயிருப்பதற்கு முன்னறிவிப்பு.
அப்பங்களைப் பலுகச் செய்தது அதற்கு முன்னுரை.
அப்பங்களைப் பலுகச் செய்ததன் மூலம் அப்பத்தைத் தன் சரீரமாக மாற்றவும் முடியும் என்ற தனது வல்லமையை நமக்கு அறிவிக்கவே இந்தப் புதுமை.
கானாவூர்த் திருமணத்தில் தண்ணீரை இரசமாக மாற்றியதும் இந்த நோக்கத்தோடுதான்.
இயேசுவால் எல்லாம் முடியும்.
எல்லாம் வல்லவர் நம்மோடு இருக்கும் போது நாம் எதற்கு அஞ்ச வேண்டும்?
லூர்து செல்வம்
No comments:
Post a Comment