Wednesday, June 4, 2025

"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்." (அரு.17:21)



"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்." (அரு.17:21) 

திரி ஏக கடவுள் மனிதனைத் தன் சாயலில் படைத்தார்.

"தாயைத் தண்ணீர்க் கிணற்றில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க வேண்டாம்."

என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

மகளைப் பெண் பார்க்க விரும்புபவர்கள் வீட்டுக்குப் போக வேண்டாம்,

தாயைத் தண்ணீர்க் கிணற்றில் பார்த்தால் போதும்,

 தாயைப் போல பிள்ளை.

மனிதனில் இறைவனின் சாயல்.


1. தந்தை, மகன், தூய ஆவி - மூன்று ஆட்கள், ஒரு கடவுள்.

மனிதன்- சிந்தனை, சொல், செயல் - மூன்று தத்துவங்கள், ஒரே ஆள்.

2. தந்தையின் சிந்தனையில் பிறப்பவர் வார்த்தை.

(ஆதியில் வார்த்தை இருந்தார்.
வார்த்தை கடவுளோடு இருந்தார்)

மனிதனின் சிந்தனையில் பிறப்பது சொல் (வார்த்தை)

3. தந்தையிடமிருந்தும், மகனிடமிருந்தும் புறப்படுபவர்  தூய ஆவி. திருச்சபையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தூய ஆவி.


மனிதனின் சிந்தனை, சொல் ஆகியவற்றிலிருந்து புறப்படுவது செயல். 

4. மூன்று ஆட்களுக்கும்   ஒரே சித்தம்.

மனிதனின் சிந்தனை, சொல், செயல் மூன்றிலும் ஒரே விருப்பம்.
(சிந்தித்ததைச் சொல்ல வேண்டும். சொன்னதைச் செய்ய வேண்டும்.)

5. கடவுள் அன்பு மயமானவர்.
மனிதனின் வாழ்க்கையே அன்பு செய்வது தான்.

கடவுள் மனிதனைத் தன் சாயலில் படைத்தார்.

ஆனால் மனிதன் தனது பாவத்தினால் அந்தச் சாயலைப் பழுது படுத்தி விட்டான்.

பழுது படுத்தப்பட்ட சாயலை மீட்கவே இறைமகன் மனுமகனாய் பிறந்தார்.

அதற்காகத்தான் பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பலியாக்கினார்.

அவரது வாழ் நாளின் இறுதி நாள் வெள்ளிக்கிழமை.

அதற்கு முந்திய நாள் வியாழக் கிழமை இரவில் கெத்சமனித் தோட்டத்தில் அவருடைய பாடுகள் ஆரம்பித்து விட்டன.

அதற்கு முன் John Mark ன் இல்லத்தின் மேல் மாடியில் நடைபெற்ற இறுதி இரவு உணவின் போது 

தனது சீடர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே தன் தந்தையிடம் இவ்வாறு செபித்தார்,

''எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! 

தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல்

 அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! 

இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்."

" தந்தையே, நாம் மூன்று ஆட்களாக, ஒரே கடவுளாய் இருப்பது போல எனது சீடர்களும் 
ஒன்றாய் இருப்பார்களாக! 

நாம் மூவரும் அன்பினால் ஒருவருள் ஒருவராக,  ஒன்றாய், ஒரே கடவுளாய் இருக்கிறோம்.

நமது சாயலில் மனிதர்களைப் படைத்தோம்.

(அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். ......என்றார். 
(தொடக்கநூல் 1:26)

ஆனால் அவர்கள் பாவத்தினால் அன்பை இழந்து ஒன்றாய் வாழாமல் பிரிந்து கிடக்கிறார்கள்.

நாம் மூவரும் அன்பினால் ஒருவருள் ஒருவராக  ஒன்றாய் இருப்பது போல அவர்களும் அன்பினால் ஒருவருள் ஒருவர் வாழ வேண்டும்.

அப்படி வாழ்ந்தால் தான் மனுக் குலம் அன்பினால் இணைந்து நமது சாயலில் ஒன்றாய் இருக்கும்.

இழந்த சாயலைத் திரும்பப் பெற்றால்தான்  பரிசுத்த தம திரித்துவத்தைப் பற்றி‌ அவர்களுக்குப் புரியும்.

இறைமகனே மனுமகனாகப் பிறந்தார் என்ற உண்மையும் புரியும்."

"ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத்தேயு நற்செய்தி 5:48)

இது இயேசு நமக்கு வழங்கும் அறிவுரை.

இதை வாசிக்கும் போது நம் மனதில் ஒரு கேள்வி எழும்.

இறைவன் எல்லாப் பண்புகளிலும் அளவில்லாதவர்.

நாம் அளவுள்ளவர்கள்.

அளவுள்ள நாம் எப்படி அளவில்லாத தந்தையைப் போல நிறைவுள்ளவர்களாக இருக்க முடியும்?

புனித வியாழனன்று இயேசு செய்த செபம் நமது கேள்விக்குரிய பதிலைத் தரும்.

"தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!"

தந்தை மகனுக்குள் இருக்கிறார்,
மகன் தந்தைக்குள் இருக்கிறார்.

அதுபோல மனிதர்களாகிய நாம் ஒருவருள் ஒருவர் இருக்க வேண்டும்.

இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதே வியாழனன்று இயேசு சீடர்களிடம் கூறிய வார்த்தைகளைத் தியானிக்க வேண்டும்.

"நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்."(அரு.14:20)

இயேசு தந்தைக்குள் இருக்கிறார்.

சீடர்கள் இயேசுவுக்குள் இருக்கிறார்கள்.

சீடர்கள் இயேசுவுக்குள்,
இயேசு தந்தைக்குள்,

அப்படியானால் 

இயேசுவுக்குள் இருக்கும் சீடர்கள் தந்தைக்குள் இருக்கிறார்கள்.

ஒரு லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு பாத்திரம், அதற்குள் ஒரு லிட்டர் தண்ணீர். 


ஒரு லிட்டர் தண்ணீர் உள்ள  பாத்திரத்தை கடலுக்குள் போட்டு விட்டால் என்ன ஆகும்?

ஒரு லிட்டர் தண்ணீர் கடல் நீரோடு கலந்து விடும்.

நாம் அளவு உள்ளவர்கள் தான். 

இயேசு அளவில்லாத கடவுள்.
அளவுள்ள நாம் அளவில்லாத இயேசுவுக்குள் இருந்து, இயேசுவோடு தந்தைக்குள் இருக்கும் போது அளவில்லாத தந்தையுடன் கலந்து விடுகிறோம்.

கடவுளின் நிறைவில் கலந்து விடுவதுதான் பேரின்பம்.

நமது குடும்பத்தில் ஆறு பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அறுவரும் ஒருவருள் ஒருவர் இருக்கிறோம்.

ஒவ்வொருவரும் இயேசுவுக்குள் இருக்கிறோம்.

அப்படியானால் அறுவரும் இயேசுவுக்குள் இருக்கிறோம்.

அப்படியானால் அறுவரும் இயேசுவோடு நிறைவான தந்தைக்குள் இருக்கிறோம்.

அதாவது நாம் குடும்பத்தோடு தந்தையின் நிறைவில் கலந்து விடுகிறோம்.

இயேசுவின் அறிவுரைப்படி

நமது விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்கிறோம்.

நாம் அன்பில் ஒருவருள் ஒருவர் இருப்போம்.

நாம் அன்பில் இயேசுவுக்குள் இருப்போம்.

இயேசுவோடு தந்தைக்குள் இருப்போம்.

மூவொரு இறைவனோடு அன்பில் ஒன்றித்து வாழ்வோம்.

அப்படி வாழ்ந்தால் தான் நாம் கிறித்தவர்கள்.

கிறித்தவர்கள் தனித் தனியானவர்கள் அல்ல,

இறை இயேசுவில் ஒன்றானவர்கள் 

All the Christians are one in Our Lord Jesus.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment