"ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்."
(மத்.6:25)
உவரி புனித அந்தோனியார் கோவிலுக்குத் திருயாத்திரை செல்வதாக வைத்துக் கொள்வோம்.
திருயாத்திரை ஆன்மீகம் சார்ந்தது.
திருயாத்திரையின் போது நமது எண்ணமெல்லாம் ஆன்மீகம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்.
பாவ சங்கீர்த்தனம், திருப்பலி, திரு விருந்து, செபம் போன்ற ஆன்மீக காரியங்களில் தான் நமது மனது ஈடுபட்டிருக்க வேண்டும்.
சிலர் வழியில் எந்த ஹோட்டலில் நல்ல உணவு கிடைக்கும், என்ன சாப்பிடலாம் என்று திட்டமிட்டுக் கொண்டே பயணிப்பாளர்கள்.
ஹோட்டலைத் தேடுவதிலும், சாப்பிடுவதிலும் நேரத்தைச் செலவிட்டு விட்டு பாதி பூசைக்குப் போய் சேர்வார்கள்.
இதற்குப் பெயர் திருயாத்திரையா?
தெரு யாத்திரை!
உலகில் நாம் விண்ணகத்தை நோக்கிச் செல்வது ஆன்மீகப் பயணம்.
நமது எண்ணம் விண்ணகம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
இயேசு எதற்காக உலகுக்கு வந்தாரோ அதை நிறைவேற்ற அவரது உதவியை நாடுவதாக இருக்க வேண்டும்.
இயேசு எதற்காக உலகுக்கு வந்தார்?
நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய.
அதற்காகப் பாடுகள் பட்டு மரிக்க.
நமது பாவங்களை மன்னிக்க.
நாமும் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.
அதற்காக நமக்கு வரும் துன்பங்களை சிலுவைகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நமது பாவங்களுக்கு மன்னிப்புப் பெற வேண்டும்.
இவை தான் நமது வாழ்வாக மாற வேண்டும்.
எதை உண்போம்,
எதைக் குடிப்போம்,
எதை உடுத்துவோம் என்ற கவலையில் வாழ்க்கையைக் கழிக்கக் கூடாது.
உலக வாழ்வின் முடிவில் விண்ணக வாழ்வுக்குள் நுழைய வேண்டும்.
நித்திய பேரின்ப வாழ்வு வாழ வேண்டும்.
நித்திய பேரின்ப வாழ்வை நினைத்துக் கொண்டே பயணித்தால் அதன் முன்ருசியை உணர்வோம்.
பேரின்பத்தின் ருசியை உணர்ந்தவர்களுக்கு சிற்றின்பம் ருசிக்காது.
சிலுவைப் பாதையே பேரின்பப் பாதையாக மாறிவிடும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment